கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? முக்தி பெற்றுவிட்ட மகான்கள் மீண்டும் பூமியில் அவதரிக்கும் வாய்ப்பு உண்டா?

 - கே.வேலு ராமநாதன், மேலூர்


உலக வாழ்வில், அங்கும் இங்குமாகத் தென்படும் இன்பம், மின்னல் போல் மறைந்து விடுகிறது; நாம் விரும்பினாலும் அது நிலைப்பதில்லை. வேப்பம் பழத்திலும் ஓர் அசட்டு இனிப்பு உண்டு. ஆனால், கசப்பு சுவையே அதிகம். எனினும் பறவைகள், இனிப்புக்காகவே அந்த பழத்தை அணுகும். உலக வாழ்விலும் இன்பத்தைவிட துன்பமே அதிகம். இதை உணர்ந்து, துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொன்னார்கள் மகான்கள். அத்துடன் துன்பக் கடலைத் தாண்டி, நிலைத்த இன்பத்தில் மகிழ்ந்து உதாரண புருஷர்களாகவும் விளங்கினார்கள்.

காட்டில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவனை சிங்கம் துரத்தியது. பயந்து ஓடியவன் ஒரு மரத்தில் ஏறினான். மரக் கிளையில் பாம்பு ஒன்று படமெடுத்து நின்றது. ஆபத்தான இந்த நிலையிலும் அந்த மனிதன்... மரக்கிளையில் தொங்கும் தேனடையில் கசிந்த தேனைப் பருக ஆசைப்பட்டானாம்! இன்றைய மனிதர்களின் நிலையும் இப்படித்தான். உலக சுக-போகங்களில் மூழ்கிய மனம் அதில் இருந்து வெளிவர விரும்பாது. மீண்டும் மீண்டும் துயரத்தில் தள்ளப்பட்டாலும், துளியளவே கிடைக்கும் இன்பத்தை நினைத்துச் செயல்படும்.

`துயரத்தில் இருந்து விடுதலை!' என்பதே நிரந்தரமான இன்பம். இதை அடைந்தவன் திரும்பவும் பிறப்பு- இறப்பு எனும் சூழலில் மாட்டிக் கொள்ள மாட்டான். எனவே, நீங்கள் விரும்பினாலும், மகான்கள் மறுபிறவியை ஏற்க மாட்டார்கள். மறுபிறவிக்குக் காரணமான கர்மவினைகள் அழிந்துவிட்டதால், அவர்களே விரும்பினாலும் கூட, மறுபிறவி கிடைக்காது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick