சனங்களின் சாமிகள் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புருஷாதேவிஅ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

திருவாணை நாட்டில் பெண்கள் மட்டுமே வாழ்ந்தனர்.  கோட்டை மதிலைத் தாண்டி ஆண்கள் எவரும் உள்ளே நுழைய முடியாது. அந்த நாட்டின் பெண்கள்,   தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மாப்பிள்ளையாகக்கொள்வர்.  திருமணமான ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி இல்லை என்றால், அவளே கணவன் என்பது நடைமுறை.

திருமணமாகி ஓராண்டு கழிந்ததும் மணப்பெண் கடற்கரைக்குப் போவாள்.  சிங்களக் காற்று எனப்படும் சோழக் காற்று அடிவயிற்றில் படும்படி நிற்பாள்.  காற்று அவளின் கர்ப்பப்பையில் புகுந்த அடையாளத்தை உணர்ந்ததும் வீட்டுக்குத் திரும்புவாள். அன்றிலிருந்து பத்தாவது மாதத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெறுவாள்.  அந்தச் சமூகத்தில் ஆண் குழந்தை பிறக்காது. அந்த நாட்டின் சிறப்பு அது.

திருவாணை தேசத்து அரசிக்குத் திருமணம் முடிந்து ஓராண்டு கழிந்தது. ராணி கடற்கரைக்குச் சென்று சோழக் காற்றை உட்கொண்டு திரும்பினாள். அதன் விளைவாகப் பத்தாம் மாதத்தில் குழந்தை பெற்றாள். அந்தக் குழந்தைக்குப் `புருஷாதேவி' எனப் பெயரிட்டார்கள்.
 
புருஷாதேவிக்கு ஏழு வயதிலேயே வாள் வில் பயிற்சிகள்,  அஸ்திர சஸ்திர வித்தைகள் ஆகிய அனைத்தும் கற்பிக்கப் பட்டன. குதிரையேற்றமும் பழகினாள் புருஷாதேவி. நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாக காலம் உருண்டது. புருஷாதேவிக்குத் திருமண வயது வந்ததும் அவள் விரும்பிய பெண்ணை மாப்பிள்ளையாக்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick