கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? ‘இன்னின்ன இப்படித்தான்...’ என்று தர்ம சாஸ்திரம் வகுத்து வைத்திருக்கும் நியதிகளுக்கு விதிவிலக்கு உண்டா?

- க.வேணுகோபாலன், மயிலாடுதுறை

சாஸ்திர விதிமுறைகளைத் தங்களது விருப்பப்படி தளர்த்த இயலாது. எந்த நேரத்தில் விதிகளை - கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று சாஸ்திரம் சொல்லும். அதை மட்டும் தாங்கள் ஏற்கலாம். தொலை நோக்குடன், மனித இனத்தின் உயர்வை மையமாக வைத்து வகுக்கப் பட்ட சட்ட திட்டத்தின் வடிவமே சாஸ்திரம். நம் போன்றவர்கள் அதில் கை வைக்க வேண்டும் எனில், அதன் குறிக்கோளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். முக்காலமும் அறிந்த முனிவர் பரம்பரையின் பரிசு அது.

உடம்பு சரியில்லை. அப்போது குளித்தால் துயரம் இரட்டிப்பாகும். குளிக்கவில்லை எனில், சாஸ்திரம் மீறப்படும். அப்போது, ‘குளிக்க வேண்டாம்; மேனியில் தண்ணீரைத் தெளித்துக்கொண்டால் போதும்’ என்று சாஸ்திரம் விதியைத் தளர்த்தும். ஆனால், குளிப்பதற்கான வாய்ப்பும் சுகாதாரமும் இருந்தும் குளிக்காமல் இருப்பதை தர்ம சாஸ்திரம் ஏற்காது. துரதிர்ஷ்டவசமாக தந்தை இறந்துவிட்டார். மகனுக்கு ஒரு வயதுதான் ஆகிறது. அப்போது, அவன் செய்ய வேண்டிய ஈமச் சடங்கை மற்றவர் வாயிலாகச் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். அதேநேரம், உடல் ஆரோக்கியத்துடன் இளம் வயதில் மகன் இருந்தால், அவனையே நேரடியாக ஈமச் சடங்கில் ஈடுபடச் சொல்லும். வாய் பேச இயலாத ஒருவர். அவரால் மந்திரம் சொல்ல இயலாது. ‘அவர், மந்திரத்தைக் காதால் கேட்டால் போதும்!’ என்று சாஸ்திரம் கட்டுப்பாட்டைத் தளர்த்தும். தர்ம சாஸ்திரம் சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமாகவே தன்னிச்சையாக சாஸ்திர விதிமுறைகளையோ, கட்டுப் பாடுகளையோ தளர்த்தக் கூடாது. தளர்த்தினால் பலன் கிடைக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick