சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சந்தோஷமே அருள்வார் சனிபகவான்!

சனி பகவான் ஒரு நீதிபதி. கர்மவினைகளுக்கு ஏற்ப உரிய பலன்களை அளிக்கும் நீதிதேவன் என்றும் சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் சனி சுபத்தன்மை அடைந்து அமர்ந்துவிட்டால், அவர் இளம் வயதிலேயே நீதிபதியாக அமர்ந்துவிடுவார்.  பாமரன் ஒருவனைப் பெரும் பதவியில் உட்காரவைக்கவும்,  முதன்மைப் பதவியில் இருப்பவர் களைச் சட்டென்று தூக்கி, ஒரு மூலையில் உட்காரவைக்கவும் சனி பகவானால் இயலும்.

இவரின் கதிர்வீச்சு ஒரு மனிதனைக் கோடீஸ்வரனாகவும் மாற்றும், அதேபோல் தெருக்கோடியில் தள்ளவும் செய்யும். நம் உடம்பில் ஓடும் நாடி, நரம்பு, தோல், நகம், தலைமுடி போன்றவற்றையெல்லாம் இவர்தான் ஆளுகிறார். பெட்ரோல், டீசல், நல்லெண்ணெய், கனரக இயந்திரங்கள், சுரங்கங்கள், காடு, மலை, காற்று இவற்றை யெல்லாம் ஆள்பவரும் இவர்தான்.

நம்பிக்கையே வாழ்வின் சக்தி என்பதை உணர்த்துபவரும் இவர்தான். பிறர் நம்மை எள்ளி நகையாடித் தூற்றும்போதும், பொறுமையாக இருக்கும் குணத்தைத் தருபவரும் சனி பகவானே. அதேபோல், ஒருவரது ஆயுள் பலத்துக்கும் இவரே காரணம்.
பறித்தல், பரிதவிக்கவைத்தல், பாதுகாத்துப் பல மடங்காக்கித் தருதல்தான் இவரது வேலை.

சனி பகவான், விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்துச்சனி, பாதகச் சனி, மங்குசனி, பொங்குசனி, தங்குசனி, மரணச்சனி எனப் பல வடிவங்களில் நம்மைத் தாக்கி, பின்பு தூக்கி நிறுத்துபவர்.

பக்தியோ, முக்தியோ அடைய வேண்டுமானால், முதலில் மனம் பக்குவப்பட வேண்டும். அந்த மனப் பக்குவத்தைத்தான் மேற்சொன்ன தனது காலத்தில் இவர் நமக்குத் தருகிறார்.

ஆணவம் - அகங்காரத்தை அகற்றி, `நீ என்னதான் முயற்சிகள் செய்தாலும், உன்னால் எதுவும் செய்ய முடியாது. படைத்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் பாதம் பணிந்து நில்' என நம் ஞானக் கண்ணைத் திறந்து வைத்துப் புது மனிதனாக்குவார். மாயைகளிலிருந்து நம்மை விரட்டி, வெளியேற்றிக் கொண்டு வந்து, பின்னர் இழந்த சொத்து, சுகங்களை எல்லாம் நம்மிடமே தந்துவிட்டுச்செல்வார்.

வான சாஸ்திரப்படி சனி

சனி, பெரிய கிரகம். இதன் உட்கருவே 1,20,536 கி.மீ பரந்து, விரிந்து கிடக்கிறது. இதில் முழுமையாகப் பல்வேறு வகை யான வாயுக்கள் அடங்கியுள்ளன.  சனிக்கு 49-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் டைட்டான், கேலிப்ஸோ, அட்லஸ், மிமிஸ், ஜானுஸ் ஆகியன சக்தி வாய்ந்தவை. சனி பகவான், ரோமானியர்களால் பல காலமாக வணங்கப்பட்டுவருகிறார்.

முப்பது ஆண்டுகள்...

சனி பகவான், ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவே, இவர் 12 ராசிகளையும் கடக்க 30 வருடங்களாகின்றன. அதனால் தான் முப்பது ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தாருமில்லை, வீழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சிலர், இளம் வயதில் நன்கு செழிப்பாக வாழ்ந்து, பின்னர் 31-ம் வயதிலிருந்து அல்லல்படுவர். சிலர் பிறந்ததிலிருந்து அல்லல் பட்டு 31-ம் வயதுக்குப் பிறகு சிறப்பாக வாழ்வர். இதற்கெல்லாம் காரணம் சனிபகவான்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick