வானமே கூரை... சூரிய - சந்திரரே விளக்குகள்!

மு.ஹரிகாமராஜ் - படம்: எஸ்.சாய் தர்மராஜ்

காரைக்குடியிலிருந்து கல்லல் எனும் ஊருக்கு அருகில் சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ளது ஆலம்பட்டு கிராமம். இங்குதான் வானமே கூரையாக, சூரிய-சந்திர விளக்கொளியில், தனித்த வெளியில் ஏகாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இந்த சுந்தரேஸ்வரர் பெருமான். பல்லவர் காலத்துச் சிவலிங்கமாம். சுற்றுவட்டார 24 கிராமங்களிலும் அளவில் பெரிய லிங்கத்திருவுருவம் இதுதான் என்கிறார்கள். நெருங்கி தரிசித்தால் அர்ஜுனனின் வில்லால் ஏற்பட்ட வடுவைக் காணமுடியுமாம். இந்த லிங்கமூர்த்திக்கு வழிபாடுகள் செய்யும் அர்ச்சகர் கணேசன் மேலும் சில தகவல்களைச் சொல்கிறார்:

“ஆறாம் நூற்றாண்டில், செம்புரான் எனும் சிவப்பு வகைக் கற்களால் கட்டப்பட்டதாம் இவரது ஆலயம். காலப்போக்கில் பராமரிக்க ஆளின்றி கோயில் சிதிலம் அடைந்துவிட்டது. இந்த ஈஸ்வரன் வெட்டவெளியில் இருக்கும் காரணத்தால், நள்ளிரவில் சித்தர்கள் வந்து வழிபடுவதாக நம்பிக்கை. இதை மெய்ப்படுத்தும் விதம், இரவில் இந்த லிங்கத்தின் அருகிலும், அந்தரத்திலுமாக ஒரு ஜோதியைக் கண்டதாக பக்தர்கள் சிலர் தெரிவித்தார்கள்!’’

நாகதோஷ பரிகாரத்துக்காக சுந்தரேஸ்வரரின் அருகில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிகளில் மட்டுமே சுந்தரேஸ்வரருக்குப் பூஜைகள் நடைபெறுகின்றன. ‘நமது கிராமம்’ இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது ஊர்மக்கள் கூடி, திருப்பணிக்குத் தயாராகிவருகிறார்கள். சிவனருளால் விரைவில் எழும்பட்டும் ஆலயம். ஆலவாய் அழகன் அதில் அற்புதமாய்க் குடியேறி அகிலம் செழிக்க அருளட்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்