ஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: சிதம்பரம்

மணம் துறந்து, சிவத்தில் சிந்தையைச் செலுத்தி, இமைப்பொழுதும் ஈசனை மறவாமல், திருப்பணிகளாலும் பாடல்களாலும் சைவம் வளர்த்த திருநாவுக்கரசரைப் பல்லவ மன்னன் ஒருவன், பல கொடுமைகளுக்கு ஆளாக்கிய கதையைச் சரித்திரம் கூறும்.

அதனால் தங்களின் குலத்துக்கு நேர்ந்துவிட்ட  அபவாதத்தை - பெரும் பாவத்தைக் களையும் விதமாகவே, பிற்காலத்தில் அந்த மன்னனும் அவனுக்குப் பின்வந்தவர்களும் பல சிவாலயங் களை நிர்மாணித்தார்கள் போலும்!

தமது முதிய வயதில் திருக்கயிலைக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்க விரும்பினார் அப்பர் சுவாமிகள். ஆனால், முதுமைப் பிராயத்தில் அவரை அலைக்கழிக்க விரும்பாத கயிலை நாயகன், திருவையாறு திருத்தலத்திலேயே அப்பர்  சுவாமிகளுக்குக் கயிலை தரிசனம் தந்து அருள் புரிந்தார்.

இங்ஙனம், அப்பர் சுவாமிகளிடம் கயிலை நாயகன் கொண்டிருந்த அளப்பரிய கருணைத் திறத்தின் காரணமாகத்தான், அப்பர் சுவாமிகளைத் துன்புறுத்திய பாவத்துக்குப் பரிகாரமாக தாங்கள் எழுப்பிய கோயில்கள் சிலவற்றில், இறைவனுக்குக் `கயிலாசநாதர்' என்ற திருப்பெயரையே சூட்டி, பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள் போலும், பல்லவ மன்னர்கள்.

அந்த வகையில், பிற்கால பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டு, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டத் திருக்கோயில்தான் தொரவி அருள்மிகு கயிலாச நாதர் திருக்கோயில்.

`இராஜேந்திர சோழ' வளநாட்டின் துணை நாடான பனையூர் நாட்டின் ஊர்களில் ஒன்றாக முற்காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கியது தொரவி. சிவனடியார்களான சைவத் துறவிகளுக்கு மன்னர்களால் இறையிலியாக அளிக்கப்பட்டது  இவ்வூர். இதையொட்டி, முற்காலத்தில் இவ்வூர் `துறவியூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், அந்தப் பெயரே தற்போது மருவி `தொரவி' என்று அழைக் கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick