எப்படி ஜபிக்க வேண்டும்?

ப.சரவணன்

ருத்திராட்சம், துளசி, ஸ்படிகம், மிளகு, தாமரை விதை ஆகியவற்றாலான ஜப மாலையைப் பயன்படுத்தி ஜபம் செய்வார்கள். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்தி நகர்த்தவேண்டும்.

* 108 மணிகள் கொண்ட மாலையைப் பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72,000 நாடிகள் இணைவதால், அந்தப் பகுதியைத் தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் என்பார்கள் பெரியோர்கள்.

ஜபிக்கும்போது, `கிருஷ்ண மணி' எனப்படும் 109-வது மணியைத் தாண்டக்கூடாது. மீண்டும் ஜபித்த வழியே மாலையைத் திருப்பி ஜபிக்கவேண்டும்.

வெறும் தரையில் அமர்ந்து ஜபம் செய்யக்கூடாது. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துண்டின் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து, அதன் மீது அமர்ந்து ஜபம் செய்யவும்.

ஜபிக்கும்போது, ஜப மாலை வெளியே தெரியாதபடி ஒரு துணியால் மூடியபடியோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து, அதன் உள்பகுதியிலோ வைத்து ஜபிக்கவேண்டும்.

மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் - அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்திடம் நிலைநிறுத்தி, உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.

தீட்சை பெற்ற மந்திரத்தைச் சத்தமாகச் சொல்லக்கூடாது. உதடுகள் அசையக்கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும்.

குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தைச் சத்தமாக ஜபிப்பது, வெளிநபர்களுக்குக் கூறுவது, எழுதிவைப்பது ஆகியன,  மந்திர யோகத்துக்கு எதிரானவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick