பட்டினத்தார் திருவிழா!

பிரேமா நாராயணன்

லகில் தோன்றிய மகான்களில் பெரும்பாலானோர் நம் பாரத மண்ணில் தோன்றியவர்களே! அப்படி நம் பாரத பூமியைப் புண்ணிய பூமியாய் திகழ்ச் செய்த மகான்களைப் போற்றும்விதம்,  அவர்களுக்கான திருநட்சத்திர திருநாள்களும், குருபூஜை விழாக்களும் வெகு சிறப்பாக நடந்தேறுவது வழக்கம்.

அப்படி நம் பூமியில் தோன்றிய மகான் ஒருவருக்கு, ஆராதனைகள், குரு பூஜை மட்டுமன்றி, அவருடைய வாழ்க்கையையே நாடகமாக நடத்திக்காட்டி, 12 நாள்களுக்கு மிக அற்புதமாய் விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

பூம்புகார் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றி, சென்னை திருவொற்றியூரில் முக்தியடைந்த மகான் பட்டினத்தாருக்கான திருவிழாதான் அது.  ‘திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் அற்புதத் திருவிழா’ என்ற திருப்பெயரில், அவரின் வழிவந்த செட்டிநாட்டு நகரத்தார் பெருமக்களால், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது இந்தத் திருவிழா. சுமார் 300 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தத் திருவிழா, பட்டினத்தடிகளின் வாழ்க்கையையே விவரிக்கும் நாடகத் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார்கள் ஆதியில் காவிரிப்பூம் பட்டினத்தில் தோன்றி வணிகம் செய்ததாக வரலாறு. அதன்பிறகு, அங்கிருந்து (தற்போதைய) சிவகங்கை மாவட்டத்துக்குக் குடிப் பெயர்ந்து சென்றுவிட்டாலும், இன்றைக்கும் அனைத்து ஊர் நகரத்தார்கள், காவிரிப்பூம்பட்டின நகரவாசிகள் மற்றும் கண்டனூர் மஹாதேவ நா.அரு.காசிவிஸ்வநாதன் செட்டியாரின் வம்சாவழியினர் அனைவரும் இணைந்து, இந்த விழாவினை விமர்சையாக நடத்திவருகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவுக் கான ஏற்பாடுகளை அரு.காசிவிஸ்வநாதன் முன்னின்று செய்து வருகிறார்.

ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் தொடங்கி, உத்திராடம் நட்சத்திரம் வரை 12 நாள்கள் நடை பெறும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டு ஆடி மாதம் 1-ம் தேதி  (ஜூலை 17; செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick