சிலிர்ப்பாக... சிறப்பாக... சக்தி யாத்திரை

சக்தி விகடன் டீம்

ணர்தலும், அனுபவித்தலும் ஆன்மிகத்துக்குப் பலம் சேர்க்கும் நிலைகள். இறையின் - இயற்கையின் பிரமாண்டத்தை உணர்தலும் அனுபவித்தலும் எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடாத பாடங்கள் என்பது பெரியோர் வாக்கு.

இந்தப் பாடங்களில் தங்களை ஈடுபடுத்த சித்தர்களும் மகான்களும் தியானம், யோகம் போன்றவற்றைக் கையாண்டார்கள் எனில், சாமான்யர்களுக்கு இறையை உணரும் பாக்கியத்தையும், இறைவனின் திருவருளை அனுபவிக்கும் வாய்ப்பையும் அளிப்பவை, புண்ணிய யாத்திரைகளே!

அப்படியான அரிய பாக்கியத்தை நம் வாசகர்களுக்கும் பெற்றுத் தந்தது, சக்தி விகடனும் துறையூர் `ஓங்காரக்குடில்’ அகத்தியர் சன்மார்க்க சங்கமும் இணைந்து வழங்கிய `சக்தி யாத்திரை'.

காஞ்சி-குமரக்கோட்டத்தில் கந்தபுராணப் பாடல் பாராயணம் துவங்கி, புராணக் கதையாடலும் ஆன்மிக உரையாடலுமாகயாத் திரையை வழிநடத்தினார் சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன். ஞானமலையில் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் தலைமையில் நிகழ்ந்த வேல்மாறல் பாராயண வழிபாடும், தொடர்ந்து மயிலை கபாலீஸ்வரர் கோயில் வழிபாட்டு அமைப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் குழுவினர் அளித்த விருந்துபசரிப்பும் மனதை நிறைத்தன.

சுவாமி மலையில் சிறப்புத் தரிசனத்துக்கு நம் வாசகரும் முருகன் அடியாருமான கணேசனும் அவரைச் சேர்ந்த அடியார்களும் சிறப்பான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். குன்றக்குடியில் முருகப்பெருமானின் திருவருளோடு, தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆசியும் குருவருளும் கிடைத்ததைப் பெரும் கொடுப்பினையாகக் கொண்டாடினார்கள் வாசகர்கள். வள்ளிதேவியின் புகழ்பாடும் வள்ளியூரிலும் சிறப்புத் தரிசனம் கிடைத்தது.

அடுத்து, தோரணமலையில் தோரணமலையான் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் வழிகாட்டலில், முருகன் சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுமார் ஆயிரம் படிகள் ஏறிவந்து, தோரணமலையானை கண்ணாரத் தரிசித்து மகிழ்ந்தனர் நம் வாசகர்கள்.  முன்னதாக வாசகர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலும், நிறைவாக திருப்புகழ் திலகம் மதிவண்ணன் தலைமையிலான திருப்புகழ் மகா மந்திரப் பூஜையும் மிக அற்புதமாக நடைபெற்றன.

இங்ஙனம், தமிழர்தம் தனிப்பெரும் கடவுளாம் முருகப்பெருமானின் விசேஷ திருத்தலங்களில் சிறப்புத் தரிசனம் - வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டல்கள், ஆன்மிக அன்பர்களின் உபசரிப்புகள்... என சிலிர்ப்பும் சிறப்புமாக இனிதே நிறைவுற்ற சக்தி யாத்திரையின் அற்புதத் தருணங்கள் இங்கே உங்களுக்காகவும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick