திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

ரன் வாசல் தேடி வர... கெட்டிமேளம் கொட்ட.. வள்ளியூருக்கு வந்து வள்ளிமணாளனை தரிசிப்போம்.

'இல்லறமல்லது நல்லறமன்று' என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், பலருக்கும் பல்வேறு காரணங்களினால் திருமணம் தடைப்படுகிறது. திருமணத் தடை நீக்கி, இனிய இல்லற வாழ்க்கை அருளும் பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றுள் தனிச் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 'தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயது வந்தும் திருமணம் தடைப் பட்டுக்கொண்டே வருகிறதே' என்று கலங்கும் பெற்றோர்களின் மனக்குறையைத் தீர்க்கவென்றே அழகன் குமரன் கோயில் கொண்ட தலம் வள்ளியூர் திருத்தலம்.

தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய குகைக் கோயில் இது. வள்ளியூர்க் குகையில் அமைந்திருக்கும் இந்தக் குடைவரைக் கோயிலில்தான் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக அருளாட்சி செலுத்துகிறார்.

இந்தத் தலத்தில் அருளும் கந்தக் கடவுளை இந்திரன், அகத்தியர், இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். 'வண்ணச்சரபம்' தண்டபாணி தேசிகர், வள்ளியூர் வள்ளி மணாளனிடம் மனதைப் பறிகொடுத்து, மனமுருகி பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick