ஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

ண்ணுலகில் தர்மம் தழைத்துச் செழிக்கவேண்டும் என்பதற்காக, சிவபெருமான் எண்ணற்ற அருளாடல்களை நிகழ்த்தியிருக்கிறார். அப்படி, அருளாடல்களை நிகழ்த்திய இடங்களிலெல்லாம் கோயில்கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளை அருளியபடி இருக்கிறார்.

அந்த வகையில், இந்தக் கலியுகத்தில் அதர்மங்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநிறுத்தவும் ஐயன் தர்மபுரீஸ்வரர் என்ற திருப்பெயரில் கோயில் கொண்டருளிய தலம்தான், இதோ நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் சோழவித்யாபுரம் அருள்மிகு பாலசுந்தரி சமேத அருள்மிகு தர்மபுரீஸ்வரர் கோயில்.

சுமார் 175 வருடங்களுக்கு முன்பு வரை, இந்த ஊரும் தர்மபுரி என்ற பெயருடன்தான் திகழ்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில்தான் சோழவித்யாபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுமார் 1000 வருடங்களுக்குமுன், இந்தப் பகுதியில் சோழர்களின் கடலோர பாதுகாப்புப் படையினரின் முகாம் அமைந்திருந்தது. இந்த ஊரில் பாயும் வெள்ளையார் எனும் ஆறு, வேளாங்கண்ணியில் கடலில் சங்கமிக்கிறது. அந்த ஆற்றிலிருந்து வேதாரண்யம் வரை கால்வாய் அமைத்து 400 மரக்கலங்களுடன் இலங்கைக்குச் சென்ற ராஜராஜ சோழன், சிங்கள அரசரை வெற்றிகொண்டு இலங்கையைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.

சிங்களத்தில் அடகுவைக்கப்பட்டிருந்த தமிழர் களின் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் ஆகிய வற்றை மீட்டெடுக்க சோழர்கள் நடத்திய தர்ம யுத்தம் அது. தங்களது தர்மயுத்தத்தில் வெற்றி பெற அருள்புரிந்த இறைவனுக்கு, ராஜராஜ சோழன் காலத்திலும் ராஜேந்திர சோழன் காலத் திலுமாக எழுப்பப்பட்டதுதான் அருள்மிகு தர்மபுரீஸ்வரர் திருக்கோயில். அத்துடன், இந்தத் திருக்கோயிலில் நித்திய பூஜைகளும் திருவிழாக் களும் நடைபெறுவதற்காக மானியங்களையும் வழங்கியுள்ளனர். மேலும், நான்கு வேதங்களுடன் சகல வித்யைகளையும் பயிற்றுவிக்கும் குருகுலங் களையும் ஏற்படுத்தியிருந்தனர்.

ஒரு காலத்தில் மிக பிரமாண்டமாக அமைந் திருந்த ஆலயம், இன்று மிகவும் சிதிலமடைந்திருப் பதைக் கண்டபோது, `மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரும், மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரும், தேசனும், தேனாரமுதமுமான' ஈசனின் திருக்கோயில் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறதே என்ற துக்கம் நம் நெஞ்சை அடைக்க, கண்களில் நீர் ஆறாகப் பெருகியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick