நிலப் பிரச்னைகள் நீங்கும்! | Marakkanam Boomeeswarar Temple Worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

நிலப் பிரச்னைகள் நீங்கும்!

முன்னூர் ரமேஷ், படங்கள்: தே.சிலம்பரசன்

மரக்காணம் பூமீஸ்வரர் திருக்கோயில்

பூமிக்கு அடியில் பரவியிருக்கும் நீர் ஊற்றுக்கண் வழியாக வெளிப்படுவது போல், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவருள் கடாட்சம் நமக்காக வெளிப்படும் இடம் திருக்கோயில்கள். நம் மனதைச் செம்மைப்படுத்தி, செயல்களைச் சிறப்பாக்கி வாழ்வைப் புனிதமாக்கும் வல்லமைகொண்டவை ஆலயங்கள்.

எனவேதான், நம் தேசத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் நாட்டு மக்கள் நன்மை அடையும்பொருட்டு, எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அவ்வகை யில் சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நானிலம் சிறக்க நல்லருளைப் பொழிந்து திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்.

சோழா் காலத்து அரசியல் மற்றும் சமுதாய நிகழ்வு களை இன்றும் நமக்கு எடுத்துக்காட்டும் பொக்கிஷமாக விளங்கும் ஈசனின் இந்த ஆலயம்,  கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் நகாில் அமைந்துள்ளது.

தமிழா்களின் தொன்மையான நாகாிகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமான பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள்,  மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அலெக்ஸாண்டிாியா நாட்டின் வணிகா் ஒருவரால் எழுதப்பட்ட நூல் `செங்கடல் பயணக் கையேடு'. இதில், `சோபட்மா' என்று குறிப்பிடப்படும் மரக்காணம் துறை முக நகரமாகத் திகழ்ந்த தகவல் உள்ளது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்' என்று குறிப்பிடுகின்றன. `எயில்' என்பதும் `சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick