ஆன்மிக துளிகள் | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆன்மிக துளிகள்

ஐயடிகள்  காடவர்கோன்

சைவத் திருமுறைகளைப் பன்னிரண்டாக வகுத்துள்ளனர், ஆன்றோர். முதல் ஏழு திருமுறைகள் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் அருளப்பட்டவை. 

ஐயடிகள் காடவர்கோன், காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிருவர் அருளிய பாடல் தொகுதி பதினோராம் திருமுறை ஆகும். நாயன்மார்களில் இருவர் பல்லவ மன்னர்கள். கழற்சிங்க நாயனார் ஒருவர்; ஐயடிகள் காடவர்கோன் மற்றொருவர்.

காஞ்சிபுரத்தைத்  தலைநகராகக்  கொண்டு  பல்லவ மன்னர்கள்  கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். காட்டைத் திருத்தி நாடாக்கியதும், குகைக் (குடைவரை) கோயில்கள் அமைத்ததும் பல்லவர்களின் பணிகளில் முக்கியமானவை.காடுகளை அழித்து விளைநிலங்களாகப் பயன்படுத்த வகை செய்த  காரணத்தால், அவர்கள் காடுவெட்டி, காடவர், காடவராயர், காடவர்கோன் முதலான பட்டப்பெயர்களைக் கொண்டனர். சிவபக்தர்களாகத் திகழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரே, ஐயடிகள் காடவர்கோன்.

திருத்தொண்டத் தொகையில் `ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும்  அடியேன்' என்று கூறியிருக்கிறார் சுந்தரர். ஐயடிகள் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்லவ அரியணை ஏறியவர்.

`கன்னி மதில்சூழ் காஞ்சிக் காடவர் ஐயடிகளார்' என்று சேக்கிழார் பாடுகிறார். அரியணையில் அமர்ந்திருத்தல் அல்லல் என்றுணர்ந்த  காடவர்கோன், விரைவில் அரசுரிமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு,   துறவுபூண்டு பல தலங்களுக்குச் சென்று பாடி வழிபட்டார். சிதம்பரத்துக்கு வந்து சில காலம் தங்கியிருந்து, திருச்சிற்றம்பலத்து  இறைவனின் திருநடனம் கண்டு மகிழ்ந்திருந்தார். பல நாட்கள் பல திருப்பணிகளைச் செய்து, இறுதியில் இறைவன் திருவடி எய்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick