ரங்க ராஜ்ஜியம் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இந்திரா சௌந்தர்ராஜன்

குல குரு வசிஷ்டர் சொன்னபடி, ஓர் உன்னத லட்சியத்துக்காக தவமியற்ற முடிவு செய்துவிட்ட அயோத்தி அரசன் இக்ஷ்வாகு, தன்னுடைய கிரீடம், அழகழகான ஆபரணங்கள், கவச குண்டலங்கள் ஆகிய அனைத்தையும் களைந்து, மரவுரி தரித்து, அயோத்தியையொட்டி ஓடும் சரயு நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தவத்தில் மூழ்கினான்.

மன்னனின் தவத்துக்கான காரணம் புரியவில்லையென்றாலும், அரசபோகங் களை விடுத்து, தங்கள் மன்னன் தவ வாழ்க்கை மேற்கொண்டதைக் கண்டு நாடே ஆச்சர்யப்பட்டது. வசிஷ்டர் மூலம் மன்னனின் தவத்துக்கான காரணம் பற்றித் தெரிந்துகொண்ட பிறகோ, நாட்டு மக்களின் ஆச்சர்யம் பல மடங்கு அதிகரித்ததுடன், தங்கள் பொருட்டு மன்னன் தவமிருப்பது குறித்து மகிழ்ச்சியும் அடைந்தனர்.

வற்றாத நதிக்காக, குறைவில்லாத ஆயுளுக்காக, உலகத்தையே ஒரு குடையின்கீழ் ஆட்சிபுரியும் விருப்பத்துக்காக என்று சுயநலம் சார்ந்த இச்சைக்கு உரிய எந்த நோக்கமும் இல்லாமல், தன்னைப் போன்றே பூலோகவாசிகள் எல்லோரும் வணங்கி நற்கதி பெற ‘பிரணவாகார விமானமும் பள்ளிகொண்ட மூர்த்தியும் தன் நாட்டுக்கு வேண்டும்’ என்கிற இக்ஷ்வாகுவின் விருப்பம், அதுநாள்வரையில் பூ உலகம் கண்டிராத விருப்பம்!

விளைவு சத்யலோகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. நான்முகனாகிய பிரம்மாவுக்கே முதலில் வியப்புதான் ஏற்பட்டது. விவஸ்வானின் கால நிர்வாககதியில், பூ உலகில் அவன் பெற்ற பிள்ளை, தன் பூஜைக்கு உரிய பிரணாவாகார மூர்த்தத்தைப் பெற முயற்சிசெய்கிறான் என்பது, பிரம்மனுக்குச் சற்று கோபத்தையும் கூட அளித்தது. அதனால் அவர், விவஸ்வானையும் அவன் தந்தையான சூரியனையும் அழைத்து விசாரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick