தலைவனாக்கும் மிருகசீரிடம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும், 3 மற்றும் 4-ம் பாதங்கள் சுய முயற்சி கிரகமான புதனின் ராசியான மிதுனத்திலும் அடங்கும்.

ரத்த பந்தங்களுக்குரிய கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மொழி, இனப் பற்று அதிகம் உடையவர்கள். கடல் கடந்து சென்றாலும் பிறந்த ஊரை அதிகம் நேசிப்பவர்கள். நட்சத்திர மாலை எனும் நூல், ‘திருந்திய நடக்க வல்லன்; தேசம் போய்த் திரிய வல்லன்; அருந்தவத்தோர்க்கு நல்லன்; ஆயுதம் பிடிக்க வல்லன்...’ என்று கூறுகிறது. அதாவது, இந்த நட்சத்திரக்காரர்கள், தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் பயணப் பிரியராகவும் இருப்பார்கள் என்கிறது.

பிருஹத் ஜாதகம், ‘இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் சபல புத்தி உடையவர்களாக இருப்பார்கள்’ என்கிறது.

இந்த நட்சத்திரம் அங்காரக சாரம் பெற்ற நட்சத்திரம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் பொதுவான குணங்கள் சில இருக்கின்றன. அசாத்தியத் துணிவு உள்ளவர்களாக, எதற்கும் பயப்படாதவர்களாக, திடமான நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். விரிந்த நெற்றியும் பரந்த தோள்களும் இருக்கும். இவர்கள் கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் கவிதை, கட்டுரைகள் எழுதுபவர்களாகவும் இருப்பார்கள். உயர்ந்த பண்பும் தாய், தந்தையிடம் அதிக பாசமும் இருக்கும். தவறைக் கண்டால் தயக்கமின்றித் தட்டிக் கேட்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick