நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!

ரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள். பூமி காரகனான செவ்வாயின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், எலி வளையானாலும் தனி வளையே வேண்டும் என்று நினைப்பவர்கள்.

நட்சத்திர மாலை எனும் நூல், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும்...’ என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலுக்கேற்ப தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், துன்பப்பட்டு வருவோருக்கு ஆறுதல் சொல்வதுடன், தன் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். கண்ணை இமை காப்பதுபோல தாயையும் தந்தையையும் பாதுகாப்பீர்கள்.

‘தர்மவான், ஐஸ்வர்யன், மான புகழ்க் கோனாம்தாம்பூலநேயன்...’ என்கிறது ஜாதக அலங்காரம். அதாவது, தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்கிறது. அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள், சாஸ்திரங்களைச் சொல்பவராகவும், மனோ தைரியம் உள்ளவராகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவராகவும் திகழ்வார்கள் என்கிறது யவன ஜாதகம்.

‘பரணி, தரணி ஆளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பீர்கள். சமயோசித புத்தியைப் பயன்படுத்துவீர்கள். பொதுவாக இசையில் ஈடுபாடு இருக்கும். நடனம், நாட்டியம் போன்றவற்றில் உங்களையே மறந்துவிடுவீர்கள். வாசனைத் திரவியங்களில் நாட்டமுடையவர்கள். ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவீர்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை உங்களுக்குப் பிடித்த சுவைகள். ரசித்துச் சாப்பிடும் நீங்கள், சமைத்தவர்களைப் பாராட்டவும் தயங்கமாட்டீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick