ஆன்மிக துளிகள்

கண்ணன் பிறந்தான்...

பால கிருஷ்ணனைக் கம்சனிடமிருந்து காப்பாற்ற எண்ணிய  வசுதேவர், அவனைத் தூக்கிச் சென்று ஆயர்பாடியில் வசிக்கும் நந்தகோபரின் வீட்டில் விட்டார். `யசோதைக்குக் கண்ணன் பிறந்திருக்கிறான்' என்று ஆயர்பாடி மக்களுக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் ஆடியும் பாடியும் மங்கள இசைகளை எழுப்பியும் தங்களுடைய வாழ்த்துகளை வெளிப்படுத்தினர்.

தெருவெங்கும் அலங்கரித்து, வேத மந்திரங்கள் முழங்கி ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது. பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு வீதிதோறும் அலைந்தன. பல்வகை அணிகலன்களை அணிந்துகொண்ட மக்கள் நந்தகோபரின் இல்லத்தை முற்றுகையிட்டனர். பொன், பொருள், பசுக்கள், பட்டாடைகளை தானமாக அளித்து நந்தகோபரும் யசோதையும் கண்ணனை வரவைக் கொண்டாடி மகிழ்ந்தார்களாம்.

அன்று வான மண்டலத்தில் அனைத்து கிரகங்களும் சுபமான இடத்தில் இருந்தன எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால், நிலவு பௌர்ணமி போன்று ஒளி வீசியது. சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் ஏந்தியபடி விண்ணில் தரிசனம் தந்தார் மகாவிஷ்ணு. அவரின் அழகிய மேனியில் மஞ்சள் பட்டாடை, பொன் ஆபரணங்கள் மின்னின. வானமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

-ரா. பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick