அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை | Sri Rama Navami special story - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

ஓவியம்: ம.செ

`நாரணன் விளையாட்டையெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வால்மீகி பகவான்’ என்று ராமாயணத்தின் மேன்மையைப் புகழ்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

திருமகள் கேள்வனாகிய திருமால், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, தசரதன் பிள்ளையாகப் பிறந்தார். அப்போது அவரின் புகழ்பாட வந்த வேதம், வால்மீகி முனிவரின் வாயிலாக ராமாயணமாகப் பிறந்தது. ‘ஆரணம்’ என்றால் வேதம். ‘ஆரணக்கவிதை’ என்றால், வேதத்தையே கவிதையாகத் தொகுப்பது என்று பொருள்.

முதலில் வால்மீகி முனிவர் மற்றும் நாரதரின் உரையாடலாக ராமாயணம் தொடங்குகிறது. தவத்தில் சிறந்த வால்மீகியின் உள்ளத்தில், சில எண்ண அலைகள் எழுந்தனவாம். தன்னுடைய சந்தேகங்களைத் தீர்க்கவல்லார் யார் உளர் என வால்மீகி சிந்தனைவயப்பட்டிருந்தபோது, அவரைத் தேடி நாரதர் வந்தார்.

சிறந்த சிஷ்யனைத் தேடிக்கொண்டு குருநாதர் வருவதைப் பாரதத்தின் பெரும் இலக்கியமான ராமாயணத்தில் காணலாம். தன்னைத் தேடிவந்த நாரதருக்குத் தகுந்த உபசாரங்களைச் செய்த வால்மீகி, வினாக்களைத் தொடுத்தார். கேள்விகள் பதினாறு; அதற்குரிய பதில் ஒன்றேயொன்றுதான். அது `ராம’ எனும் இரண்டெழுத்து மட்டுமே!

ஆம்! வால்மீகியின் பதினாறு கேள்விகளுக்கு விடையாக  `ராம' எனும் நாராயணனின் பெருமை களை உரைத்தார் நாரதர். அவற்றை விவரித்து வால்மீகி மொழிந்த ராமாயணத்தின் தொகை 24,000. அதுசரி…  பதினாராயிரம்தானே வரவேண்டும். பின் எப்படி அது 24,000 ஆனது என்று கேட்கலாம். இதில்தான் தர்மத்தின் சூட்சுமம் அடங்கியுள்ளது.