அரங்கனே... அழகனே!

ஏற்றங்கள் அருளும் வைகுண்ட ஏகாதசி

தா
ய்க்குச் சமமான தெய்வம் இல்லை; காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை; கங்கைக்கு நிகரான தீர்த்தமும் இல்லை; ஏகாதசிக்கு நிகரான விரதமும் இல்லை என்கிறது அக்னி புராணம்.

மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவையே என்றாலும், மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசி, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. அன்று விரதம் இருப்பதன்  மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி விரதம் மூன்று நாள்கள் மேற்கொள்ளவேண்டிய விரதமாகும்.

மார்கழி வளர்பிறை தசமி திதியன்று விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று பகல் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

ஏகாதசியன்று அதிகாலை கண்விழித்து நீராடி,  தூய ஆடை  உடுத்திக்கொண்டு பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். அன்று முழுதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். அன்றாடக் கடமைகளைச் செய்துகொண்டே இறை சிந்தனையில் மனதை லயிக்கவிடவேண்டும். தேவைப்பட்டால் குளிர்ந்த நீரை மட்டும் பருகி விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் பழங்கள் உண்டு விரதம் அனுஷ்டிக்கலாம்.

அன்று இரவு முழுதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக்கொண்டும், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்துகொண்டும், பாகவத புராணம் போன்ற திருமாலின் மகிமைகளைப் போற்றும் நூல்களைப் படித்த படியும் கண்விழித்திருக்கவேண்டும். மறுநாள் துவாதசியன்று அதிகாலை எழுந்து நீராடி, ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று இறைவனின் நாமத்தை  ஜபித்தபடி உப்பு, புளி சேர்க்காமல் சமைத்த உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். முக்கியமாக அன்று பகல் முழுவதும் உறங்கக்கூடாது.

ஏகாதசி விரதமிருப்பதைக் காட்டிலும் துவாதசி திதியன்று சரியான நேரத்தில் உணவருந்தி விரதத்தை முடிப்பது மிகவும் முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதே விரதத்தின் முழுப்பலனையும் அளிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick