‘ஞானக் குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்...’

சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயபுரத்தில் உள்ள அந்த வீட்டுக்குள் நுழையும்போதே அற்புதமான வயலின் இசை நம்மை வரவேற்றது. பிரபல வயலின் இசைக்கலைஞர் பத்மஸ்ரீ குன்னக்குடிவைத்தியநாதனின் சிஷ்யையான பாலாம்பாளின் இல்லம்தான் அது.

பச்சைப் பட்டு, நெற்றி நிறைய திலகம், கேசம் படர மல்லிகைப்பூ சகிதம், ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...’ பாடலை வயலினில் அவர் வாசித்துக்கொண்டிருக்க, அந்த இசை செவிவழி நம் சிந்தையில் புகுந்து பெரும் சிலிர்ப்புக்கு ஆளாக்கியது என்றால், பாலாம்பாளின் வாசிப்பு பாவனையைக் கண்டபோது, ஒருகணம் திகைத்துப்போனோம்.

ஆமாம்! வாசித்தலின் ஊடே அந்தச் சிநேகச் சிரிப்பு, உடல்மொழி, இசைக்கும் திறன் அத்தனையும் அப்படியே ஐயா குன்னக்குடி வைத்தயநாதனை நம் கண்முன் நிறுத்தியது!

ஆக, அன்பர்கள் பலரும் இவரைக் குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்தி எனக் கருதியதில் ஆச்சர்யம் இல்லைதான். நம்மை வரவேற்று உபசரித்தவரிடமும் அதுபற்றி கேட்டோம்.

“என்னிடமும் பலபேர் அப்படித்தான் கேட்டார்கள். நான் அவரின் சிஷ்யை; அது நான் செய்த பாக்கியம்’’ என்று புன்னகைத்தவர், தொடர்ந்து பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick