‘வேலை யோகம்’ எப்போது? | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

‘வேலை யோகம்’ எப்போது?

? மாதம் இரண்டு முறை எனக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. ஜாதக ரீதியாக ஏதெனும் தோஷங்கள் உள்ளனவா, என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- என்.ரவி வெங்கடேஷ், சென்னை - 61

வலிப்பு நோய் ஏற்பட சாஸ்திரங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்து கேந்திரம், 5 மற்றும் 8-ல் இருந்து அசுபர் பார்வை பெற்றிருப்பது, சந்திரன் சனியுடன் இணைந்து செவ்வாயின் பார்வை பெற்றிருப்பது, பலவீன சனி ராகுவுடன் 8- ல் இருப்பது, 5 மற்றும் 9-ம் பாவங்களில் அசுபர் இருப்பது, பலவீனமான தேய்பிறைச் சந்திரன் ராகுவுடன் சேர்ந்து லக்னத்தில் இருப்பது, லக்னத்தில் அசுபர் பார்வையுடன் கேது இருப்பது, 6 மற்றும் 8-ம் வீடுகளுக்கு சனி, செவ்வாய் தொடர்பு ஏற்பட்டிருப்பது, கிரகண காலத்தில் பிறந்த குழந்தைக்கு லக்னம் அல்லது திரிகோணத்தில் குரு இருப்பது, செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து 6 அல்லது 8-ல் இருப்பது... இதுபோன்ற கிரக அமைப்புகள் வலிப்பு நோய்க்குக் காரணமாகின்றன. தங்களின் ஜாதகத்தில் 6-ல் சனி அமைந்துள்ளது.

மேலும், ஆசிரியருக்குச் செய்யும் கெடுதல், முதலாளிக்குச் செய்யும் துரோகம் போன்றவையும் வலிப்பு நோய் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன என்கின்றன சாஸ்திரங்கள். தர்ம நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்களை ஜபிப்பதும், சிவப்புநிற பசுவைக் கோயிலுக்கோ அல்லது அந்தணருக்கோ தானம் கொடுப்பதும் தங்களுடைய வலிப்பு நோயைத் தீர்க்கும் பரிகாரங்களாக அமையும்.

? என் மகளின் ஜாதகப்படி, அவளுக்கு நல்ல வேலை மற்றும் திருமண யோகம் எப்போது அமையும் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- எஸ்.ஹரிஹரசுப்பிரமணியன், மதுரை

திருமண நேரம் என்று ஒன்று உண்டு. பொதுவாக 18 வயதுக்கு மேல் 33 வயதுக்குள் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நியதி. அதற்கு மேலும் திருமணம் நடைபெறவில்லை என்றால்தான் நாம் உரிய காரணங்களை அலசி ஆராய்ந்து பரிகாரங்கள் செய்யவேண்டும். தங்கள் மகளின் ஜாதகத்தைப் பொறுத்தவரை நன்றாகவே உள்ளது.

அவரது ஜாதகத்தில் 3.8.21 வரை சனிதிசை நடைமுறையில் உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் பாவங்களுக்கு உரிய சனிபகவான், லாபவீட்டில் இருக்கிறார். மேலும் லாபஸ்தான அதிபதி குரு, பாக்கியஸ்தான அதிபதி சனி ஆகியோர் பரிவர்த்தனை பெற்றிருப்பது மிகவும் சிறப்பான அம்சம். 10-ல் கேதுவும் இருப்பதால், நல்ல வேலை அமையும். திருமணத்தைப் பொறுத்தவரை களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் எட்டில் உள்ளது செவ்வாய் தோஷத்தைக் குறிக்கிறது. 7-ல் புதன் இருப்பதால் அழகு, நல்ல பண்புகள், உயர்ந்த அந்தஸ்து போன்ற தகுதிகளுடன் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். செவ்வாய் தோஷத்தின் காரணமாக, அதற்கேற்ப வரன் பார்ப்பது அவசியம். 3.8.21-க்குப் பிறகு தங்கள் மகளுக்கு 7-ல் இருக்கும் புதனின் தசை நடைபெற இருப்பதால், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.