`திக திக தா தை தையும் தத்தாம்...’ -
- ஜனவரி ஒன்று. மாலை ஏழு மணி. மார்கழி மாத இருளும் குளிரும் இரவை ஆக்ரமித்த நேரம். சென்னை தமிழிசைச் சங்கத்தில், 10 வயது சிறுமிகள் முதல் 25 வயது பெண்கள் வரை மொத்தம் 45 பேர் ‘நாயகி’ என்கிற தீமில் பரதமாட ஆரம்பித்தார்கள். அம்பாளின் நவரசங்கள்தான் இந்த நாட்டியத்தின் கருப்பொருள்.
முதலில் 9 சிறுமிகள், பட்டுப் பாவாடைகளுடன் சின்னஞ்சிறு அம்மன்களாக அம்பிகையின் நவரசங்களை அச்சு அசலாக தங்கள் முகபாவங்களிலும் அபிநயங்களிலும் வெளிப்படுத்த, ஒட்டுமொத்த அரங்கமும் பக்தியில் சிலிர்த்து திளைத்திருந்தது. அடுத்து, குரு பத்மலஷ்மி சுரேஷ், அம்பிகையாக மேடையில் அவதரித்து, தன் சிஷ்யைகளுடன் இணைந்து, அம்பாளின் நவரசங்களை வெளிப்படுத்தும் சில அவதாரங் களை தத்ரூபமாக தனது நடனத்தில் வெளிப்படுத்தினார்.
அதில், பத்மலஷ்மி மகிஷாசுரமர்த்தினியாகவும், சிஷ்யைகள் அம்பாளின் மற்ற திருக்கரங்களாகவும், மகிஷனாகவும் மேடையை நிறைத்த தருணத்தில், அரங்கில் இருந்த வயதானவர்களில் சிலர் தங்களையுமறியாமல் கையெடுத்துக் கும்பிட்டனர். தொடர் நிகழ்வுகளாக கோலாட்டம், கும்மியாட்டம், விளக்கு நடனம் என்று பெண்கள் ஆடி முடிக்க, திரை விழுந்தது.
‘நாயகி’ தீம் எப்படி உருவானது என்று தெரிந்துகொள்ள குரு பத்மலஷ்மியைச் சந்தித்தோம். ஆடி முடித்தக் களைப்பே தெரியாமல், வியர்வை அரும்புக்கட்டிய முகங்களில் புன்னகை மின்ன, அம்பாள்கள் நம்மைச் சுற்றி அமர்ந்தார்கள். குரு பத்மலக்ஷ்மி பேச ஆரம்பித்தார்.
`‘பதினேழு வருடங்களாக பத்மாலயா என்கிற நாட்டியப் பள்ளியை நடத்திக்கிட்டு வர்றேன். இதுவரைக்கும் 200 குழந்தைகளுக்கும் மேலே நாட்டியம் சொல்லிக் கொடுத்திருக்கேன். என் சிஷ்யைகளில் சிலரும் நாட்டியப் பள்ளி நடத்துகிறார்கள். அந்த வகையில் ஒரு குருவாக என் சிஷ்யைகளின் சிஷ்யைகளையும் பார்த்துவிட்டேன்’’ என்றவர், தன்னுடைய தீம் நடனங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
‘`நான் இதுவரைக்கும் ‘அனைத்தும் என் அன்னை’, ‘சிதம்பரக் குறவஞ்சி’, ‘பாரத ஸ்வதந்திரக் குறவஞ்சி’னு மூன்று தீம் டான்ஸ் புரோகிராம்களை என் சிஷ்யைகளோடு சேர்ந்து செய்திருக்கேன். இவற்றில், ‘அனைத்தும் என் அன்னை’யில், புராணக் காலத் துப் பெண்ணாக அம்பாளின் பெருமை யையும், வரலாற்றுக்கால பெண்களின் அடையாளமாக சத்ரபதி சிவாஜியின் அம்மாவுடைய பெருமையையும், இந்தக் காலத்து அம்மாக்களின் வீடு, குழந்தைகள், வேலை என மும்முனைப் போராட்டத்தையும் நடனமாக வெளிப் படுத்தி இருந்தோம்.