நிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்யலாம்? | Astrology remedies for permanent job - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

நிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்யலாம்?

? கடந்த நான்கு வருடங்களாக நிலையான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்.  எனது கஷ்டம் எப்போது தீரும், நிலையான வேலை எப்போது அமையும்? எனக்குத்  திருமண யோகம் எப்படி உள்ளது?

- பச்சையப்பன், திருவண்ணாமலை

!உங்கள் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில், நீங்கள் மீன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 10-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியோர் உள்ளனர். 10-ம் காரகர் சூரியன் 10-ல் இருந்தால் அரசாங்க உத்தியோகம் கிடைப்ப தற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

10-ம் வீட்டைக் கொண்டுதான் தொழில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தன ஸ்தானாதிபதி என்ற 2-ம் அதிபதியும், லாப ஸ்தானாதிபதி என்ற 11-ம் அதிபதியும் பலம் பெற்றிருப்பின், செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம்  உண்டாகும். 10-ல் சூரியன் இருப்பது அனுகூல யோகமாகும். மேலும், தனஸ்தானாதிபதி செவ்வாய் 10-ல் இருப்பதும் மேலும் யோகங்களைத் தரும்.

தற்போது, உங்களுக்குக் குரு தசையில் புதன் புக்தி நடைபெறுவதாலும், குரு 8-ல் மறைந்திருப்ப தாலும் சில தடைகள் ஏற்படுகின்றன. குரு தசையின் முதல் 8 வருடங்களில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், பிற்பகுதி நன்றாகவே இருக்கும். தற்போது குரு பகவானுக்கு உரிய பரிகார ஹோமம் செய்வதன் மூலம், வேலை கிடைப்பதில் ஏற்படக்கூடிய தடைகள் நீங்கும். திருமணத்தைப் பொறுத்தவரை 7-ம் பாவ காரகரும் 7-ம் பாவ அதிபதியும் 10-ம் வீட்டில் இருப்பதால், திருமணம் நல்லபடி நடைபெறுவதில் தடைகள் எதுவும் இல்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.