ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்! | Sholavaram Sri NANDHI KAMBEESWARAR Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

கோயில்கள் என்பது வழிபாட்டு மையம் மட்டுமல்ல; அது அமைந்திருக்கும் ஊரின் வாழ்வுக்கும் செழிப்புக்குமான ஆதாரபீடமும் கூட. அறம் சார்ந்த பெரும்பணிகளுக்கும் ஊற்றுக் கண்ணாய் திகழ்ந்தன கோயில்கள்.

அதுமட்டுமா? நம் மரபின் வேரைத் தேடினால், அதன் ஆதி நம் ஆலயங்களாகவே திகழ்வதைக் காணலாம். முன்னோர்களின் வாழ்வியல், வீரம், தியாகம் ஆகிய அனைத்துக்கும் சாட்சியாகத் திகழ்கின்றன, ஆலயங்களும் அங்கிருக்கும் கல்வெட்டுகளும். இப்படி சிவாலயம், விண்ணகரம் மட்டுமின்றி, திசை எட்டிலும் எல்லை தெய்வங் களின் கோயில்களுடன் திகழும் ஊர்கள் எனில், அக்காலத்தில் அந்த ஊர் பெரும் நகரமாக இருந்திருக்கக்கூடும் என்று கணிப்பார்கள் ஆய்வாளர்கள். அவ்வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன், அற்புத ஆலயங்களோடு புகழ்பெற்று விளங்கிய ஓர் ஊரையே இந்த இதழில் பார்க்கப்போகிறோம்.

ஜவ்வாது மலைத்தொடருக்கு வடகிழக்கில் மலையடிவாரத்தில் உள்ளது சோழவரம் என்ற அழகிய கிராமம். இது, வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. பல்லவ, சோழ, விஜயநகர ஆட்சிக்காலங்களில் இவ்வூர் பெரும் புகழுடன் திகழ்ந்தது என்கின்றன வரலாற்றுச் சான்றுகள்.

பல்லவன் கம்பவர்மனின் கல்வெட்டுகள் இந்த ஊரை `காட்டுத்தும்பூர்' எனக் குறிப்பிடு கிறது. இவ்வூர் தும்பை வனமாகத் திகழ்ந்ததை முதலாம் பராந்தகச் சோழன் கால கல்வெட்டும் கூறுகிறது. முதலாம் ராஜராஜ சோழனின் 28-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவ்வுரை `உய்யக் கொண்டான் சோழபுரம்' என்று குறிப்பிடுகிறது. இன்று சோழவரம் என்று ஊர்ப் பெயர் மாறிப் போனதுடன், அதன் பாரம்பர்ய புகழும் மங்கிப் போய் உள்ளது என்பதே உண்மை. கோட்டைக் கொத்தளங்களுடன் சிறப்புற்று விளங்கிய சோழவரத்தில் முன்பு திசைக்கு ஒன்றாக 8 பிடாரி கோயில்களும், குணமாலை பெருமாள் கோயிலும், பள்ளிப்படை கோயிலும், சிவாலயம் ஒன்றும் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இப்போது சிவாலயமும் பெருமாள் கோயிலும் மட்டுமே உள்ளன.