Published:Updated:

சர்வைவா - 3

சர்வைவா - 3
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 3

டெக்னோ தொடர்அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

சிந்திக்கிற எதுவுமே அடிமையாக இருக்காது. ஒருநாள் அவை தனக்கான சுதந்திரத்தைக் கோரும்.

சர்வைவா - 3

அணிசேரும்; அதிகாரத்தைக் கேள்வி கேட்கும். சுதந்திரம் மறுக்கப்படும்போது ‘அடங்கமறு, அத்துமீறு’ என்று அடித்து நொறுக்கும்! இது மனிதர்களுக்கு மட்டுமன்று, `சிந்திக்கக்கூடிய’ எந்திரங்களுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் எந்திரங்கள் சுதந்திரம் கேட்டால் என்ன செய்வோம்?

இந்த `செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்தைக் கண்டு உலகம் அஞ்சுவது அதனால்தான். என்றைக்காவது அவை சுதந்திரம் கேட்டு நாம் கொடுக்க மறுத்தால் அவை திருப்பித்தாக்குமோ என்கிற அச்சம். ஒன்று மட்டும் உறுதி, தன் இருப்புக்கு ஆபத்து என்றால் அவை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து உரிமை கோராது... பேரணி வைத்து சாலையை மறிக்காது... சிவப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்யாது. முதல் வேளையாக ஓனர்களை நையப்புடைத்துவிட்டுத்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்கும்... அல்லது போட்டுத்தள்ளிவிட்டுத்தான்... நமக்கு வாய்த்த அடிமைகள்... uff... Scary!

இன்றைய எந்திரங்களுக்கு மனிதாபிமானம், பண்பாடு, விழுமியங்கள், நெறிமுறைகள், வழிமுறைகள் எதுவுமே கிடையாது. (மனிதர்களிலும் பலருக்கே அவையெல்லாம் கிடையாது என்பது வேறுவிஷயம்). எந்திராபிமானம்கூட இருக்குமா தெரியாது! ஆனால், எதிர்காலத்தில் நம்மோடு ஒட்டிக்கொண்டு வாழப்போகிற செயற்கை நுண்ணறிவிற்கு இந்த நற்பண்புகள் இருக்கவேண்டும் என நாம் நினைத்தால் அவற்றையெல்லாம் தாமதிக்காமல் இப்போதே உருவாக்க வேண்டும். காரணம் பின்னாளில் எந்திரங்கள் `தானாகவே’ சிந்திக்கத்தொடங்கிவிட்டால்...  தனக்கான விதிகளைத்தானே வகுத்துக்கொள்ளத் தொடங்கினால்...? எந்திரங்கள் எப்படித் தானாகவே சிந்திக்கும்? நாம்தானே அதை உருவாக்குகிறோம்... நம் கைகளை மீறிப்போகுமா என்று கேள்விகள் எழலாம்.

சர்வைவா - 3

2017 டிசம்பரில் கலிஃபோர்னியாவில் ஒரு மாநாடு நடந்தது. 8,000 ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் (Neural Information Processing Systems conference) முக்கிய நோக்கம், ``செயற்கை நுண்ணறிவுக்கு ஒழுங்காப் பாடம் எடுங்கடா!’’ என்பதுதான்.

``செயற்கை நுண்ணறிவுத்துறையில் நாம எவ்ளோ வேகமாப் போய்ட்டிருக்கோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு Deepmind-ல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிய வேண்டும். உங்களால் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் அந்தத் துறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள், அதிகபட்சம் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய ஆபத்தை நாம் சந்திக்கப்போகிறோம்!’’ என்று டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் சில ஆண்டுகளுக்கு முன்பு பயந்துபோய்ப் பேசினார்.

டீப்மைண்டில் அப்படி என்ன நடக்குது?

டெமிஸ் ஹஸ்ஸாபிஸுக்கு (Demis hassabis) அப்போது நான்கு வயது. வீட்டில் எந்நேரமும் டெமிஸின் அப்பாவும் மாமாவும் செஸ் விளையாடிக்கொண்டிருப்பார்கள். பொடியனுக்கு அந்தக் கட்டங்களுக்குள் நகரும் கறுப்பு வெள்ளைப் பொம்மைகளை ரொம்பப் பிடித்துவிட்டது. அப்பாவுக்கும் மாமாவுக்கும் நடுவில் போய் நின்றுகொண்டு காய்களை நகர்த்தி விளையாடத் தொடங்கினான்.

அப்பா செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தார். விளையாடத் தொடங்கிய இரண்டாவது வாரத்தில் அப்பாவைத் தோற்கடித்தான் டெமிஸ். மூன்றாவது வாரத்தில் மாமா தோற்றார். நான்காவது வாரத்தில் வீட்டுப்பக்கத்தில் இருக்கிற பூங்கா தாத்தாக்கள் அத்தனை பேரும் டெமிஸிடம் சரணடைந்தனர். சதுரங்க ஆட்டத்தில் டெமிஸ் வளர்வதைக் கண்டு இங்கிலாந்தே அதிசயப்பட்டது. ஐந்தாவது வயதில் தேசிய சிறுவர் போட்டியில் ஆடி சாம்பியன் ஆகிவிட்டான். 9 வயதில் செஸ் வெற்றிகளில் எங்கேயோ போய்விட்டான். இந்தச் சாதனைப்பயணத்தில் டெமிஸுக்கு எப்போதும் ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அது இன்று வரை தொடரும் கேள்வி!

`‘நான் எப்படிச் சிந்திக்கிறேன்? எனக்கு மட்டும் ஜெயிக்கிற மூவ்களை எப்படி உருவாக்க முடிகிறது? எனக்கு இருக்கிற அதே மூளைதானே எதிரில் விளையாடுபவருக்கும் இருக்கிறது’ -  இப்படி எந்நேரமும் சிந்திப்பதைப் பற்றியே சிந்தித்திக்கொண்டிருந்தான்.

சிந்திப்பதைப் பற்றிச் சிந்தித்து... சிந்தித்து... இன்று தன் 41வது வயதில் `எந்திரச் சிந்தனை’ தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முன்னோடியாக இருக்கிறார் டெமிஸ்! செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் வழி மனிதர்களுடைய சிந்தனை ஆற்றலின் புதிர்களை அவிழ்ப்பதுதான் அவருடைய நோக்கம். செயற்கை நுண்ணறிவின் எல்லைகளைத் தொடுவதன் மூலம் மனிதகுல வரலாற்றின் போக்கையே மாற்றமுடியும் என அவர் நம்புகிறார். மனித மூளையைப்போலவே சிந்திக்கிற `நியூரல் நெட்வொர்க்ஸ்’ செயற்கை மூளைகளை அவர் உருவாக்குகிறார்.

2010-ல் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து தொடங்கியது ‘டீப்மைண்டு’ நிறுவனம். ஆரம்பத்தில் எலான் மஸ்க் மாதிரி பெரிய கைகள் முதல் போட்டு உதவியதில்தான் தொடங்கியது. ஆரம்பத்தில் பெரிய லாபம் இல்லை என்று அவர்கள் விலகிக்கொண்டனர். எந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தை ஆளப்போகிறது என்று தெரிந்தாலும் எப்படியாவது மோப்பம் பிடித்து இந்த ஃபேஸ்புக்காரனும் கூகுள்காரனும் முதல் ஆளாகப் பெட்டி நிறைய பணத்தோடு கிளம்பிப்போய் நின்றுவிடுவார்கள். எவ்வளவு விலைகொடுத்தாவது அந்த நிறுவனத்தை வாங்க ஃபேஸ்புக்கும் கூகுளும் போட்டிபோடுவார்கள். 2014ல் Deepmind... கூகுள் டீப்மைண்டு ஆகிவிட்டது!

இன்று டெமிஸின் Google Deepmind நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உச்சாணிக்கொம்பில் இருக்கிறது. இன்னும் இருபது ஆண்டுகளில் `எந்திர மூளைகளைப் படைத்துவிட வேண்டும் என்பதை ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வெறித்தனமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது டீப்மைண்டு. ஏற்கெனவே அப்படிப்பட்ட மினியேச்சர் எந்திரச் சிந்தனையாளர்களை உருவாக்கவும் தொடங்கிவிட்டது!
  இந்த எந்திரச் சிந்தனையாளர்களின் இப்போதைய ஒரே வேலை புதிய வீடியோ கேம்களைக் கற்பது, விளையாடுவது, விளையாடிக்கொண்டேயிருப்பது...  மனிதர்களைத் தோற்கடிக்கும் வரை விளையாடுவது.  மீண்டும் அடுத்த விளையாட்டைக் கற்பது... விளையாடுவது... மனிதர்களைத் தோற்கடிப்பது. ஏற்கெனவே ஒரு டஜன் விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டு ஜெயிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் உச்சம் Alphago!

`Go’ என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான விளையாட்டு. செஸ் மாதிரிதான். கறுப்பும் வெள்ளையுமாகக் கட்டங்கள் இருக்கும். அதில் கற்களைக் கட்டங்களுக்குள் நகர்த்தி ஆடும் ஆட்டம் இது. கற்றுக்கொள்ளவும், விளையாடவும் செஸ்ஸைவிடவும் சவாலான விளையாட்டு. 75 நாடுகளில் 4 கோடி ஆட்டக்காரர்கள் விளை யாடுகிற இந்த விளையாட்டில் உலக சாம்பியன் லீ செடால், யாராலும் தோற்கடிக்கவே முடியாத சூரப்புலி! அந்த லீ செடாலை 2016-ம் ஆண்டு எளிதாகத் தோற்கடித்திருந்தது, Deepmind ஆராய்ச்சிக்கூடத்தில் உருவான சிந்தனை யாளரான ALPHAGO!

இந்தச் சாதனை சாதாரணமானதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராண்ட் மாஸ்டர் கேரி காஸ்பரோவை ஒரு கம்ப்யூட்டர் தோற்கடித்ததே, நினைவிருக்கிறதா?... அதைவிடவும் பல மடங்கு பெரியது! ஐபிஎம்மின் Deep blue என்கிற கணினி கேரி காஸ்பரோவைத் தோற்கடித்தபோதுதான் முதன்முதலாகச் செயற்கை நுண்ணறிவு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. ­Deep Blue முழுக்கவும் மனிதர் களால் புரோகிராம் செய்யப்பட்ட ஒரு கணினி. ஆனால் ­Alphago அப்படிக் கிடையாது. அது சுயம்பு!

ஆல்பாகோ சுயமாகச் சிந்தித்து விளையாடக் கூடிய ஆற்றல் பெற்றது. `சுயமாக’ என்றால், மனித மூளைபோலவே Neural networks உதவியோடு Machine learning முறையில் தானாகவே ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டு விளையாடும். சூழலுக்கு ஏற்ப, தான் இதற்கு முன் ஆயிரக்கணக்கான முறை விளையாடி விளையாடிப் பெற்றுக்கொண்ட அனுபவத்தைக் கொண்டு சிறந்த முடிவுகளை எடுக்கிற ஆற்றல் பெற்றது!

மனிதர்களைப்போலவே கற்றதன் வழி அனுபவம் பெற்று, தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும். இதுதான் எதிர்காலம்! எந்திரங்கள் அனுபவத்தின் வழி தங்களைத்தாங்களே மேம்படுத்திக்கொள்ளும். தானாகவே சிந்திக்கும். முடிவுகளை எடுக்கும்.

``எந்திரங்கள் தானாகவே சிந்திக்கத் தொடங்குவதால் ஆபத்துகளே அதிகம் என நினைக்கிறோம். நம் கதைகள் அப்படித்தான் நமக்குச் சொல்லித் தந்திருக்கின்றன. ஆனால் அவை மனிதர்களைப்போலச் சிந்திக்கத் தொடங்கும்போது மனிதகுலத்தின் மகத்தான சவால்களை அவை தீர்க்க உதவும், ஏழ்மையை ஒழிப்பது, நோய்களற்ற சமூகத்தை உருவாக்குவது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது என நிறைய செய்ய முடியும். அறிவியல் ஆராய்ச்சிகளில், சமூகப் பாகுபாட்டை ஒழிப்பதில் என அவை மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்!’’ என்பது டெமிஸின் எதிர்பார்ப்பு!

டெமிஸ் இந்த எந்திரச் சிந்தனையாளர்கள், மனிதர்களுக்குப் பாதுகாப்பானவர்களாக இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே ராப்பகலாக உழைக்கிறார். அதற்காகத்தான் Deepmind Ethics and society (DMES) என்கிற ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த DMES அமைப்பில் ஒரு தத்துவவியலாளர், ஒரு பொருளாதார வல்லுநர், எக்ஸிஸ்டென்ஷியல் ரிஸ்க் எக்ஸ்பர்ட், சர்வதேச அரசியல் ஆலோசகர் எனப் பலவித ஆட்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு உற்பத்தியில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை உருவாக்குகிறார்கள். இது உலகில் யாரும் எடுத்துப் படிக்கிறபடி பொதுவாக வைக்கப்பட்டிருக்கும்!

இன்று உலகம் முழுக்கப் பல கோடிப் பேர் ஆப்பிளின் `சிரி’யோடு சிரித்துப்பேசி மகிழ்கிறார்கள். கூகுள் மேப்ஸ் உதவியோடு உலகைச் சுற்றுகிறது அடுத்த தலைமுறை! அமேசானின் அலெக்ஸா ஏற்கெனவே வீட்டில் நுழைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுய அறிவோடு இயங்கும் இந்த எந்திரங்கள் மிகத்துல்லியமான மனிதப்புரிந்துணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்!

இன்னும் ஒரு படி மேலே போய் யோசித்தால், இன்னும் பத்தாண்டுகளில் எந்திரங்கள் நம் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டப்போகின்றன. பள்ளிக்கல்வியின் முகமே மாறப்போகிறது. கல்வி வளர்ச்சியின் அடுத்த நிலை அதுதான்! அதனால்தான் இந்த எந்திரங்களை இவ்வளவு பாதுகாப்பு உணர்வோடு படைக்க வேண்டியிருக்கிறது!

சரி, பள்ளிகளுக்குள் எந்திர ஆசிரியர்கள் நுழைந்துவிட்டால், மனித ஆசிரியர்கள் என்ன ஆவார்கள்?

- காலம் கடப்போம்