Published:Updated:

ஜிசாட்-10 செயற்கைகோள் 29-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ

விகடன் விமர்சனக்குழு
ஜிசாட்-10 செயற்கைகோள் 29-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ
ஜிசாட்-10 செயற்கைகோள் 29-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ
ஜிசாட்-10 செயற்கைகோள் 29-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ

பெங்களூர்: வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) ஜிசாட்-10 செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தகவல் தொடர்பு பணிகளுக்கு உதவும் வகையில் ஜிசாட்-10 என்ற புதிய செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தயாரித்து இருக்கிறது. இதற்கான மொத்த செலவு ரூ.750 கோடி.
 
அந்த செயற்கைகோள் ஐரோப்பாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள ஏரியன் ஸ்பேஸ் ஏவுதளத்தில் ஏரியன் 5 ராக்கெட் மூலம் பறக்கவிட திட்டமிடப்பட்டது. விஞ்ஞானிகள் செப்டம்பர் 23ந் தேதி (இன்று) செயற்கைகோளை விண்ணில் செலுத்த தீர்மானித்தனர்.
 
இதைத்தொடர்ந்து ராக்கெட்டை பறக்க விடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன. அப்போது ராக்கெட்டின் மேல் பகுதியில் சிறிய சேதம் ஏற்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உடனே, ராக்கெட் பறக்க விடுவது தள்ளிவைக்கப்பட்டது.
 
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரு கிராம் அளவுக்கு தூசியானது ராக்கெட்டின் உள்பகுதிக்குள் சென்று இருப்பதை கண்டுபிடித்து விட்டோம். இந்த தூசியை அப்படியே விட்டுவிட்டால் அது ராக்கெட்டின் முக்கிய பாகங்களை செயலிழக்க செய்துவிடும். எனவே, அந்த கோளாறை சரி செய்த பிறகு ராக்கெட் பறக்கவிடப்படும் என்றனர்.
 
இதுபற்றி இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
ஜிசாட்-10 செயற்கைகோளுடன் சேர்த்து அஸ்ட்ரா 2எப் என்ற செயற்கைகோளையும் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றது. செப்டம்பர் 23-ந் தேதி ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள்களையும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், ராக்கெட்டை வான்வெளிக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
 
வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) ஜிசாட்-10 செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 2.48 மணிக்கு செயற்கைகோள், விண்ணுக்கு அனுப்பப்படும்.
 
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.