Published:Updated:

வெள்ளி, செவ்வாய், சனி... மனிதனால் மற்ற கிரகங்களில் எவ்வளவு காலம் வாழ முடியும்? #KnowScience

வெள்ளி, செவ்வாய், சனி... மனிதனால் மற்ற கிரகங்களில் எவ்வளவு காலம் வாழ முடியும்? #KnowScience
வெள்ளி, செவ்வாய், சனி... மனிதனால் மற்ற கிரகங்களில் எவ்வளவு காலம் வாழ முடியும்? #KnowScience

டுத்த தலைமுறை செழிப்பாக வாழ இந்தப் பூமியை ஏற்றதாக வைத்திருக்கிறோமா என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றும். அதற்கான பதில் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஒருவேளை நமது பூமியில் இடமில்லாமல் போனாலோ அல்லது பூமியின் தன்மை மாறிப்போனாலோ நாம் அனைவரும் வேறு கிரகங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படலாம். அப்போது என்ன செய்வோம்? ஏற்கனவே மார்ஸ்-ல் காலனி ஒன்று அமைத்து மனிதன் வாழ வைக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், நாசாவும் தயாராகி வருகின்றன. 

நேஷனல் ஜியோக்ராபிக் சேனல் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி இந்தப் பூமியில் இருந்த 99.9 சதவீத உயிர்கள் அழிந்துவிட்டன. மனிதன் பூமியை காலி செய்து கொண்டு கிளம்ப எத்தனிக்கிறான். இயற்கை அன்னையின் ஆணைப்படி இப்படி ஒரு மாற்றம் நிகழும் போது அதற்கு ஏற்றவாறு பழகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதனால் நாம் அழிக்கப்படுவோம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் நாம் இன்று கற்பனைசெய்யப்போவது. மனிதன் பூமியை விட்டு வெளியேறும் சூழ்நிலை வந்தால் மற்ற கிரகங்களில் அவனால் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் (Mercury). சூரியனை எதிர்கொள்ளும் பக்கம் சுமார் 800 டிகிரி பாரன்ஹீடாக அதிக வெப்பத்துடன் இருக்கும். இதன் மறுபக்கம் -290 டிகிரி பாரன்ஹீடாக இருக்கும். இதில் இரண்டுமே மனிதன் வாழ்வதற்கான சூழல் இல்லை. நீங்கள் சூரியனின் பக்கம் இருந்தால் ஒரு கார்பன் கல்லாகவும் மறுபக்கம் இருந்தால் முழுவதுமாக உறைந்தும் போவீர்கள். இந்த இரண்டு நிலைகளுக்கு இடையில் உங்கள் மூச்சை நிறுத்தி வைத்திருக்கும் வரை உங்களால் வாழமுடியும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த நேரம் என்பது வெறும் இரண்டே நிமிடங்கள்தான்.

 வெள்ளி (Venus) சூரியனில் இருந்து இரண்டாம் கிரகம். பிட்சா தயாரிக்கும் ஓவெனின் வெப்பத்தை விட அதிகமான வெப்பமுடைய கிரகம்தான் வெள்ளி. 900 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட கிரகத்தில் மனிதனால் நிச்சயம் வாழ முடியாது. ஆனால், இங்கு என்ன நல்ல விஷயம் என்றால் பூமியில் உள்ள அதே ஈர்ப்பு விசை அங்கேயும் இருக்கிறது. எனவே அதிக வெப்பத்தால் ஆவியாகும் வரை நம்மால் நடக்க முடியும். அதுவும் "வா மா மின்னல்" போல ஒரு நொடிக்கும் குறைவாகவே நமக்கு நேரம் கிடைக்கும்.

செவ்வாய் (Mars) மிகவும் குளிர்ச்சியான கிரகம். அதில் காற்றின் தன்மையும் மெல்லியதாக இருப்பதால் குளிரின் தாக்கத்தைச் சற்று குறைவாகவே நம்மால் உணரமுடியும். நீங்கள் செவ்வாயில் உயிர் வாழ ஆசைப்பட்டால் உங்களை வெப்பமாக வைத்துக்கொள்ள உதவும் வெது வெதுப்பான உடைகள் உடுத்தி, உங்கள் மூச்சை நிறுத்திப் பிடித்தித்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் இரண்டு நிமிடங்கள் வரை செவ்வாய் கிரகத்தில் ஒரு குட்டி டூர் அடிக்க முடியும்.

வியாழன் (Jupiter) ஒரு வாயு கிரகம் என்பதால் மனிதனுக்கு அது என்றுமே சாதகமாக இருந்ததில்லை. இங்கிருக்கும் அதிக காற்றழுத்தம் காரணமாகப் பூமியில் இருந்து இங்குத் தரையிறங்கும் போதே நாம் நசுக்கப்படுவோம். எனவே ஒரு நொடிக்கும் குறைவான நேரமே நமக்குக் கிடைக்கும்.

ஜூபிட்டரை போலவே அதன் அதுதடுத்த கிரகங்களான சனி  (Saturn), யுரேனஸ் (Uranus) மற்றும் நெப்டியூன் (Neptune) ஆகியவையும் வாயு கிரகங்கள். சனியின் வளையங்கள் உறைந்துபோன நீர்த்துளிகள் அல்லது அம்மோனியாவின் துளிகளால் உருவானது. இது எந்தவகையிலும் மனிதனுக்கு உதவுவதில்லை. எனவே இங்கேயும் அதிக காற்றழுத்தம் காரணமாக நாம் தரையிறங்கும் போதே நசுக்கப்பட்டுத் தூக்கி எறியப்படுவோம்.

சனி கோளின் சிறப்பம்சமே அதற்கு இருக்கும் 53 சந்திரன்கள் தான். அதில் டைட்டன் எனப்படும் சனியின் சந்திரனில் திரவ மீத்தேன் ஏரிகள் மற்றும் நல்ல வானிலை உள்ளது. டைட்டனில் தண்ணீர் கிடையாது, ஆனால் மீத்தேன் அடிப்படையிலான வாழ்க்கை வாழ முடியுமா என சில விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். டைட்டனில் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு பிரீதிங் மாஸ்க் மற்றும் வெதுவெதுப்பான உடை மட்டுமே போதுமானது.

புளூட்டோ கிரகம்தான் இருப்பதிலேயே சிறிய கிரகம் (Dwarf Planet). அதன் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? ரசியாவின் பரப்பளவுதான் ப்ளூட்டோவின் மொத்த இடம். சொல்லப்போனால் இது ஒரு மிதக்கும் பெரிய பாறை மட்டுமே. இங்கு காஸ்மிக் ரேடியேஷன்ஸ் மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மனிதன் வாழ முடியுமா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

மாஸ்க், ரோபோ, பயோ - அசிஸ்டன்ஸ் என தொழில்நுட்ப சாதனங்கள் கொண்டு ஒரு கருவியை போல வாழும் வாழ்க்கையைத் தான் பிற கோள்களில் நம்மால் தொடங்கமுடியும். யாருக்குத் தெரியும் போகப்போக அதுவும் பழகிவிடும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே பூமியைத் தவிர எங்கு மனிதன் போனாலும் அவன் மனிதனாக, இயல்பாக வாழ முடியாத நிலைதான் உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியால் நாம் அங்கே உயிருடன் இருக்க முடியுமே தவிர, மனிதனாக இங்கே இருப்பது போல, ஒரு வாழ்கை நடத்த முடியாது. இதைப் புரிந்து கொண்டாவது நம் பூமியை காக்க முயற்சி செய்வோம்.
 

அடுத்த கட்டுரைக்கு