Published:Updated:

டைம் மெஷின் செய்ய கணிதக் கோட்பாடு ரெடி... டைம் ட்ராவல் இனி சாத்தியம்தானாம்!

`டைம் ட்ராவல் என்ற ஒன்று நிஜத்தில் எப்படிச் சாத்தியமாகும்?' என்ற கேள்விக்குக் கணிதம் மற்றும் இயற்பியல் மூலம் விடை கண்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர் கூறுகிறார். எப்படி?

டைம் மெஷின் செய்ய கணிதக் கோட்பாடு ரெடி... டைம் ட்ராவல் இனி சாத்தியம்தானாம்!
டைம் மெஷின் செய்ய கணிதக் கோட்பாடு ரெடி... டைம் ட்ராவல் இனி சாத்தியம்தானாம்!

திர்காலம் குறித்த கவலையும், இறந்த காலத்தில் நாம் எடுத்த தவறான முடிவுகளைக் குறித்த வருத்தமும் நமக்கு எப்போதும் இருக்கும். இதைப் பற்றி யோசனை செய்யும் போதெல்லாம் டைம் ட்ராவல் என்னும் காலப்பயணம் குறித்த ஆசை நமக்கு எட்டிப்பார்க்கும். இது இன்று நேற்று தொடங்கிய எண்ண அலை அல்ல. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், 1885-ம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் H.G.வெல்ஸ் அவர்கள் எழுதிய `Time Machine'என்ற புதினம்தான் பொது மக்களிடையே டைம் ட்ராவல் குறித்த ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அதன் பிறகு 20-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வருடா வருடம் நிறையத் திரைப்படங்கள் டைம் ட்ராவல் கதைகளைப் பேசின. 

இது குறித்த அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை ஐன்ஸ்டீன்தான் முன்னோடி. அவரின் `General Relativity' தியரியில், நாம் இருக்கும் இடத்தின் ஈர்ப்பு விசைக்கும் நேரத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்று கூறினார். ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது நேரம் என்பது மெதுவாகக் கடக்கும் என்றார். சுருக்கமாக, திசைவேகம், இருக்கும் இடத்தின் ஈர்ப்பு விசையை வைத்து நேரத்தை வேகமாகக் கடத்த முடியும், மெதுவாக நகரச் செய்ய முடியும், ஏன் நிறுத்தக் கூட முடியும். ஈர்ப்பு விசை மட்டுமல்லாது திசைவேகமும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. உதாரணமாக, நீங்கள் பூமியை விட்டுவிட்டு வேறோர் ஈர்ப்புவிசை மற்றும் திசைவேகம் கொண்ட கோளில் இருக்கும்போது, நேரம் என்பது உங்களுக்கு வேறு மாதிரியும், பூமியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு வேறு மாதிரியும் கரையும். ஆனால், உங்களால் அந்தக் கோளில் இருக்கும் வரை எந்த வித்தியாசத்தையும் உணர முடியாது. பூமிக்கு நீங்கள் திரும்ப வந்து பார்க்கும்போதுதான் எல்லாமே மாறியிருப்பது உங்களுக்குப் புரியும். இதைத்தான் ஐன்ஸ்டீன் ``Time is relative" என்றார்.

Photo Courtesy: esa.int

இதன் வீரியத்தைப் புரிந்து கொள்ள Space-Time (இட-காலத் தொடரளவை) என்ற கணித மாதிரி வடிவத்தை முன் வைக்கிறார்கள். இங்கே மூன்று பரிமாணங்கள் கொண்ட நம் பேரண்ட விரிப்புடன், நேரம் என்ற நான்காம் பரிமாணமும் சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, நம் பிரபஞ்சம் என்பது அந்தரத்தில் கட்டப்பட்ட பெரிய துணி என்று வைத்துக் கொள்வோம். இதை Space-Time Continuum (இடநேரத்தொடரகம்) என்கிறார்கள். இதில் சூரியன், பூமி உள்ளிட்ட கோள்களை அடுக்கும்போது தத்துவ ரீதியாக, அதனதன் ஈர்ப்பு விசை மற்றும் நிறையைப் பொறுத்து தன்னைச் சுற்றியுள்ள துணியை (இட-காலத் தொடரளவையை) உள்ளிழுத்துக் கொள்ளும். அதாவது சமமாக இருக்கும் துணி அந்தக் கோளின் இடைக்கு ஏற்ப கீழே இறங்கிவிடும் (Curvature). எவ்வளவு ஆழத்திற்கு அந்தத் துணி இறங்குகிறதோ, அந்த அளவுக்கு  அங்கே நேரம் மெதுவாகக் கடக்கும். கோள்களைத் தாண்டி கருந்துளைகள் அதிக நிறை கொண்டது என்பதால், அங்கேதான் நேரம் மிகவும் மெதுவாகக் கடக்கும். அதன் அருகில் நீங்கள் சென்று சில நாள்கள் இருந்துவிட்டு, பூமிக்குத் திரும்பினால், இங்கே பூமியில் பல ஆண்டுகள் கடந்திருக்கும். அதாவது இது நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் எதிர்காலத்திற்குப் பயணம் செய்தது போலத்தான். இதுவும் டைம் ட்ராவல்தான். இதைத்தான் நாம் `Interstellar' படத்தில் பார்த்திருப்போம்.

இப்படி எதிர்காலத்திற்கு நம்மால் டைம் ட்ராவல் செய்ய முடியும் என்பதை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாலும், திரும்பவும் இறந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது சாத்தியமே இல்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள். அதாவது, டைம் ட்ராவலில் ஒரு வழிதான் இருக்கிறது. அது முன்நோக்கி மட்டுமே அழைத்துச் செல்லும், பின்னோக்கி கிடையாது என்பதுதான்.

சென்ற வருடம், பென் டிப்பெட் (Ben Tipett) என்ற கணிதம் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அதில் டைம் ட்ராவலுக்கான சாத்தியக்கூறுகளைக் கணிதம் கொண்டு வகுத்துள்ளார். ஐன்ஸ்டீன் அவர்களின் `Relativity' தியரி குறித்து ஆராய்ச்சி செய்யும் அவர், கருந்துளைகள் (Blackholes), பரவெளி அனுமான இணைப்புகள் (Wormholes) மற்றும் இதர சயின்ஸ் ஃபிக்ஷன் சமாசாரங்களில் பேரார்வம் கொண்டவர். `டைம் ட்ராவல் என்ற ஒன்று நிஜத்தில் எப்படிச் சாத்தியமாகும்?' என்ற கேள்விக்குக் கணிதம் மற்றும் இயற்பியல் மூலம் விடை கண்டுள்ளதாகக் கூறுகிறார்.

``டைம் ட்ராவல் என்றாலே புனைவு என்ற எண்ணம் நமக்கு வந்து விடுகிறது. இதற்கு ஒரே காரணம், யாரும் இன்னும் அதைச் செய்து காட்டவில்லை என்பது மட்டும்தான். ஆனால், உண்மையில் கணித ரீதியாக அது சாத்தியமாகும் ஒரு செயல்தான்" என்று ஆச்சர்யப்படுத்துகிறார். மேலும், ``என்னுடைய கணிதக் கோட்பாட்டின்படி, நான் இந்த Space-Time-ஐ வட்டமான ஒன்றாக மடிக்கும் போது, அதில் பயணம் செய்யும் பயணிகள் நேரம் என்பதை நேர்கோடாக உணராமல் வட்டமான ஒன்றாக உணர்வார்கள். வட்டம் என்றவுடனே நம்மால் இறந்த காலத்திற்கும் செல்ல முடியுமல்லவா?" என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

``இது கணித ரீதியாகச் சாத்தியம் என்றாலும், நிஜத்தில் இதை தற்போது செய்து காட்டவே முடியாது. காரணம், இந்தக் கோட்பாட்டின்படி Space-Time-ஐ வளைக்க உதவும் பொருள்களை நாம் இன்னும் கண்டறியவில்லை. கணித ரீதியாக டைம் ட்ராவல் குறித்த ஆராய்ச்சிகள் 1949-ம் ஆண்டிலிருந்தே தொடங்கிவிட்டது. அந்த ஆய்வில், இந்தக் கோட்பாடு ஒரு பெரிய மைல்கல்!" என்று முடித்தார்.

Photo Courtesy: BBC

அவருடைய கணித மாதிரியின் பெயர் Traversable Acausal Retrograde Domain in Space-time (TARDIS). ஆம், புகழ்பெற்ற சயின்ஸ் ஃபிக்ஷன் தொடரான `Doctor-Who'-வில் வரும் டைம் மெஷின்தான். இந்த முட்டை வடிவ (Bubble) மாதிரியில் Space-Time என்பது வட்டமாக வளைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதனுள் இருக்கும் பெட்டி வடிவப் பொருள் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வர முடியும். 

இது இப்படியிருக்க உலக அறிவியல் விழா (World Science Festival) நடத்தும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் கணிதப் பேராசிரியர் பிரையன் கிரீன், இறந்த காலத்திற்கு செல்ல வேறொரு வழியைக் கூறுகிறார். விண்வெளியில் கருந்துளைகள் போலவே பரவெளி அனுமான இணைப்புகள் (Wormholes) என்று ஒன்று இருப்பதாக ஐன்ஸ்டீன் கண்டறிந்திருந்தார். இந்த இணைப்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒரு கோட்பாடாக இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எப்படிச் செயல்படும் என்றால் தொலைதூரத்தில் இருக்கும் இடத்திற்குச் செல்ல ஒரு குறுக்குவழி, ஒரு சுரங்கப்பாதை அமைப்பது போலத்தான். ஒரு பெரிய செய்தித்தாளின் முதல் வரியிலிருந்து கீழே கடைசி வரி வரை பேனாவை நகர்த்த ஒரு நிமிடம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அதே செய்தித்தாளை நீங்கள் இரண்டாக மடிக்கும் போது முதல் வரிக்கு நேர் பின்னே அதன் கடைசி வரி இருக்கும். பேனாவை வைத்து முதல் வரியில் ஒரு துளையிட்டால் போதும், கடைசி வரியை அடைந்து விடலாம். இந்தத் துளைதான் வார்ம் ஹோல் இணைப்பு. பேரண்டத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் செல்ல இப்படி வார்ம் ஹோல்கள் நிறைய உண்டு என்பது அண்டவியல் ஆராய்ச்சியாளர்களின் அனுமானம். ஆனால், இதன் மூலம் அண்டம் விட்டு அண்டம் தாவலாமே தவிர, காலப்பயணம் மேற்கொள்ள முடியாது.

பேராசிரியர் பிரையன் கிரீன் அவர்களின் கூற்றுப்படி, ``வார்ம் ஹோலின் ஒருபுறத்தை ஒரு பெரிய கருந்துளை அல்லது கூடுதல் நிறை கொண்ட ஒரு கோளின் அருகில் நிலை நிறுத்திவிட்டால் போதும். அங்கே நேரம் மெதுவாக நகரும் என்பதால், அந்தப் புறம் நாம் வெளியே வரும்போது இறந்த காலத்தில் இறங்குவோம். மீண்டும் இந்தப் புறம் வெளியே வந்தால் எதிர்காலம் வந்து விடலாம். இதன் மூலம் நாம் வார்ம் ஹோல்களையே டைம் மெஷின்களாக மாற்றிக் கொள்ளலாம். இது இப்போது மற்றுமொரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் இது நிச்சயம் சாத்தியமாகும்" என்கிறார்.