Published:Updated:

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.–சி20 ராக்கெட்!

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.–சி20 ராக்கெட்!
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.–சி20 ராக்கெட்!
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.–சி20 ராக்கெட்!

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 7 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி.–சி20 ராக்கெட் இன்று மாலை 6.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார்.

ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி.–சி.20 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 6.56 மணிக்கு தொடங்கியது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில், இந்த ராக்கெட் இந்திய ராக்கெட் ஏவுதளங்களில் ஒன்றான ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து இன்று மாலை 5.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.பின்னர் 5 நிமிடங்கள் காலதாமதமாக 6.01 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ராக்கெட் ஏந்திச் சென்ற இந்திய - பிரான்ஸ் நாடுகள் இணைந்து தயாரித்துள்ள 400 கிலோ எடை கொண்ட சரள் என்ற பிரதான செயற்கைக்கோள் ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடங்கள் 59 வினாடிகளில் அதற்குரிய விண்வெளி பாதையில் பிரிந்து சென்றது.


6 துணை செயற்கைக்கோள்கள்

அதையடுத்து 6 துணை செயற்கைக்கோள்கள், ஒன்றன்பின் ஒன்றாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றன. அனைத்து செயற்கை கோள்களும் ராக்கெட் புறப்பட்ட நேரத்தில் இருந்து 21 நிமிடம் 46 வினாடிகளில் 781 கிலோ மீட்டர் தொலைவில், புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.சரள் என்ற பிரதான செயற்கைக் கோள் கடல் நீரின் போக்கினையும், அலைகளின் ஏற்ற, இறக்கத்தையும் துல்லியமாக கண்காணிக்க பயன்படும். சுற்றுச்சூழல் பற்றி தெரிந்து கொள்வதற்கும், தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுகிறதா? என்பதைக் கண்காணிக்கவும் இந்த செயற்கை கோள் ஒரு சாதனமாக பயன்படும்.

இந்த ராக்கெட்டின் விண்வெளிப் பயணத்தை ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பார்வையிட்டார்.ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் முக்கிய அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பி.எஸ்.எல்.வி.–சி.20 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘சரள்’ சாட்டிலைட்

 பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படும் 56–வது செயற்கைக்கோள் ‘சரள்’ ஆகும். பிரதான செயற்கைக்கோளான சரளின் எடை 400 கிலோ. இந்த செயற்கைகோள், கடல்களைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்காகவும், கடல் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கும் பயன்படும்.‘சரள்’ செயற்கைக்கோள் தரும் புள்ளிவிவரங்கள், கடல்சார் வானிலை, தட்பவெப்ப நிலை, பருவநிலை கண்காணிப்பு, கடல், பூமி, கண்டத்தின் பனிக்கட்டிகள், பல்லுயிர் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, கடல்சார் பாதுகாப்பு மேம்பாடு ஆகியவை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ‘சரள்’ செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.