Published:Updated:

விண்வெளியில் ஒரு ஸ்வச் பாரத்... குப்பைகளை அகற்றும் பணியில் விண்கலம்!

விண்ணில் செலுத்தப்பட்ட ரிமூவ் டெப்ரி விண்கலம் சுமார் 100 கிலோ எடையுடையது. Vision Based Navigation என்னும் செயல்முறை மூலம் இயங்கும் இந்த விண்கலம் 2டி மற்றும் 3டி லிடர் (LIDAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது.

விண்வெளியில் ஒரு ஸ்வச் பாரத்...  குப்பைகளை அகற்றும் பணியில் விண்கலம்!
விண்வெளியில் ஒரு ஸ்வச் பாரத்... குப்பைகளை அகற்றும் பணியில் விண்கலம்!

அம்மாக்கள் நமக்கு நமது சிறுவயதில் சோறு ஊட்டுவதற்காக நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை, விண்வெளி பூச்சிக்காரன் கதை கூறி ஏமாற்றியதுண்டு. அந்தப் பாட்டி வடை சுட்ட விண்வெளி தற்போது குப்பைகள் நிறைந்த இடமாக இருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. ஆனால் அதற்கு காரணம் வடை சுடும் பாட்டி அல்ல. விண்வெளியில் பல உலக நாடுகளால் ஏவப்படும் ராக்கெட்களால் தான். விண்ணில் செலுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டவுடன் அவை அப்புறப் படுத்தப்படுவதில்லை. அவற்றின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து பெரும் ஆபத்தாக நிற்கிறது.

தொடர்ந்து ஓரிரு நாட்கள் சாலையில் உள்ள குப்பைக்கழிவுகள் நீக்கப்படவில்லை என்றால் ஏற்படும் விளைவுகளை நாம் அறிவோம். ஆனால் கடந்த 60-க்கும் மேலான ஆண்டுகளாக விண்வெளியில் இருக்கும் குப்பைகள் நீக்கப்படாமல் விடப்பட்டு, தற்போது அது பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

விண்வெளிக் குப்பைக் கழிவுகள் என்றால் என்ன?

நாட்டின்  வளர்ச்சிக்கும், வானிலையை முன்கூட்டியே கணிக்கவும், தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உலக நாடுகள் பல தங்கள் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை விண்வெளி ஆய்விற்குச் செலவு செய்கின்றது. அவ்வாறு ஆய்விற்காகச் செலுத்தப்படும் ராக்கெட்டுகளை அதன் பயன்பாடு முடிந்தவுடன் அங்கேயே அப்படியே விட்டுவிடப்படுகின்றன. அங்குள்ள குப்பைகள் 3-4 சென்டிமீட்டர் அளவிலிருந்து 2 மீட்டர் அளவு வரை காணப்படுகிறது. மேலும் ஒரு செயற்கைக்கோளோடு மற்றொன்று மோதி அதனாலும் குப்பைகள் அதிகமாகின்றன. இவ்வாறு குவிந்துள்ள குப்பைகளின் எடையின் அளவு 6,800 டன்னிற்கும்  மேல் உள்ளதாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றால், விண்வெளியில் உள்ள கோள்களுக்கு பெரும் ஆபத்து நிலவும் என்பதை உணர்ந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி  மையம், அங்குள்ள குப்பைகளை அகற்ற புது திட்டத்தை நிறுவியுள்ளது. அதன் முதல் படியாக 10 செ.மீட்டாருக்கும் மேலாக உள்ள 22,000 குப்பைப் பொருட்களை நீக்க, அமெரிக்க விண்வெளி கண்காணிப்பு மையம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன் மூலம், 'ரிமூவ் டெப்ரி' ( RemoveDEBRIS) என்னும் விண்வெளிக்கலம் கடந்த 20-ம் தேதி செலுத்தப்பட்டு அங்குள்ள குப்பைகளை அகற்ற வெவ்வேறு வழிகளை முயற்சி செய்து அகற்றம் பணிகள் நடைபெற்று வருகிறது.

விண்ணில் செலுத்தப்பட்ட ரிமூவ் டெப்ரி விண்கலம் சுமார் 100 கிலோ எடையுடையது. Vision Based Navigation என்னும் செயல்முறை மூலம் இயங்கும் இந்த விண்கலம் 2டி மற்றும் 3டி லிடர் (LIDAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு பின்னர் பூமியின் வளிமண்டலத்தில் கொண்டுவந்து எரிக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

வானிலை மாற்றம், காற்று மாசு, புவி வெப்பமயமாதல் போன்ற இயற்கை ஆபத்து சூழல்களால் ஏற்கனவே பூமி ஆபத்தான நிலையில் இருப்பதால், தற்போது விண்வெளிக் குப்பைகளாலும்  ஆபத்தில் உள்ளது. இதற்கான தீர்வை உடனே காண உலக நாடுகள் மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்து, விரைவில் பூமியை ஆபத்திலிருந்து காப்பதே புத்திசாலித்தனம். சீக்கிரம் ஏதாவது நல்லது செய்ங்க பாஸ்.