Published:Updated:

சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ராக்ஸ்

சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ராக்ஸ்
News
சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ராக்ஸ்

தற்போது விண்வெளி மிகவும் அமைதியானதாக இருக்கிறது. ஆனால், அது எப்போதும் அமைதியாகவே இருப்பதில்லை. அவள் எத்தனை அழகானவளோ அத்தனை ஆபத்தானவள்.

கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். வெப்பத்தில் நம்மை வேகவைத்துக் கொண்டிருக்கும் சூரியனுக்கு மிக அருகே நீங்கள் பறந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும்?

பல லட்சம் டிகிரி வெப்பமான அதனருகே செல்லும்போதே யாராயினும் எதுவாயினும் வெந்து சாம்பலாகிவிடும். வருவதை வறுத்தெடுக்கும் தூரத்தைத்தான் நெருங்கப்போகிறது நாசாவின் இந்தச் செயற்கைக்கோள். பார்க் சோலார் புரோப் (Park Solar Probe) என்ற பெயருடைய அது எப்படி அவ்வளவு அருகே சென்றும் சாம்பலாகாமல் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்?

ஜூலை 20-ம் தேதி நாசாவுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி நிக்கோலா ஃபாக்ஸ் (Nicola Fox) இப்படி விளக்கமளித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூரிய வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காகவே அது பிரத்யேகமானதொரு கவசத்தால் மூடப்படுகிறது. அதன்மூலம் வெளியே எவ்வளவு அதிகமான வெப்பமிருந்தாலும் உள்ளே அதன் வெப்பம் முப்பது டிகிரி செல்ஷியஸைத் தாண்டாது. அப்படியென்ன கவசம்?

"மைக்ரோவேவ் ஓவன்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்குள்ளிருக்கும் வெப்பம் நாம் அறிந்ததே. அதில் 400 டிகிரி இருப்பதைப்போல் அமைத்துவிட்டு வெப்பத்தை உறிஞ்சாத கார்பனாலான பஞ்சுபோன்ற பொருளைக் கவசமாக அணிந்துகொண்டு அதற்குள் உங்கள் கையை விடலாம். அதன் பக்கங்களைத் தொடாதவரை கைகளுக்கு ஒன்றுமே ஆகாது. அதைப் போலத்தான் இந்தக் கவசமும்"

சூரியனின் வளிமண்டலத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. ஃபோடோஸ்பியர்(Photosphere), குரோமோஸ்பியர் என்ற நிற மண்டலம் (Chromosphere), கடைசியாக இருப்பதுதான் கொரோனா என்ற மெல்லிய அடுக்கு. முழுமையான சூரிய கிரகணத்தன்று மட்டுமே நம்மால் ஒளிவட்டத்தைப்போல் அதைக் காணமுடியும். அந்தக் கொரோனா மிகவும் குறைவான அடர்த்தியுடையது. அங்குதான் இந்தச் செயற்கைக்கோள் நிலைகொள்ளும். அதனால் சூரியனிலிருந்து வெளியாகும் பிளாஸ்மா என்ற வெப்பம் மிகுந்த துகள்கள் அனைத்தும் கவசத்தில் மோதாது. ஆகவே ஆங்காங்கு தனிப்பட்ட துகள்கள் கோளின் கவசத்தை மோதும்போது அது தாங்கிக்கொள்ளும் அளவுக்கே இருக்கும். அதைத் தாங்குவதற்குத் தகுந்தவாறு கவசத்தை ஏற்பாடு செய்துள்ளது நாசா. ஆக, வெப்பத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சமாளிக்கமுடியும். 30 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருக்கும் மேற்பரப்பைத் தொடாதவரை.

வெறும் 60 லட்சம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து. அதுவும் ஒளிவீசும் வெப்பமயமான அதன் வளிமண்டலத்திலிருந்து. பல செயற்கைக்கோள்கள் இதற்கு முன்பும் சூரியனை ஆய்வுசெய்துள்ளன. ஆனால், எதுவும் இப்போது ஏவப்படும் வெறும் 10 அடி உயரமே உடைய கோளுக்கு இணையாக இருக்காதென்று கூறுகிறார் ஃபாக்ஸ். "எந்த விண்கலமும் சூரியனின் சுற்றுப்பாதையைக்கூட நெருங்க முடியவில்லை. இவள் நெருங்குவாள்" என்கிறார் பெருமிதத்தோடு. அமெரிக்காவின் கவர்ச்சியூட்டக்கூடிய இந்த முயற்சியில், அனைவருக்குமே கற்றுக்கொள்ள ஏதாவதொன்று இருக்கப் போகிறது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ஒன்றரை பில்லியன். அது சூரியனை அடைந்து ஏழு வருடங்களுக்கு அதை ஆய்வுசெய்யும். அதாவது 2025 வரை.

சூரியன் சம்பந்தப்பட்ட நான்கு முக்கியக் கேள்விகளுக்கு இந்தச் செயற்கைக்கோள் விடைகாண முற்படும்.

1. எந்தப் பகுதிக்கு மேலே அது பறந்துகொண்டிருக்கிறதோ அதைத் தனது உயர்ந்த தொழில்நுட்பத் திறன்கொண்ட கேமராவான வைட் ஃபீல்டு இமேஜர் (Wide-field imager) மூலமாகப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பும். அதன்மூலம் சூரியனின் மேற்பரப்பையும் அங்கு நிகழும் மாற்றங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

2. மின் மற்றும் காந்த அலைகளைப் பதிவுசெய்வதற்கு FIELDS என்ற தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். அதன்மூலம் அந்த அலைகள் சூரியனிலிருக்கும் அதீத ஆற்றல்கொண்ட பிளாஸ்மாவோடு எப்படி எதிர்செயலாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

3. சூரியப் புயலை உண்டு பண்ணும் ஆற்றல் நிறைந்த சூரியத் துகள்களை ஆய்வுசெய்ய இரண்டு இயந்திரங்களைப் பொருத்தியுள்ளார்கள். அதிலொன்று, சூரியப் புயலிலிருக்கும் எலக்டிரான்களைப் பிடித்து அதன் வேகம், வெப்பம் போன்றவற்றைப் பதிவுசெய்யும்.

4. இரண்டாவது இயந்திரம், அந்தத் துகள்களால் நொடிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தோடு எப்படி இயங்க முடிகிறது என்பதை ஆய்வுசெய்யும். சூரிய மண்டலத்தில் நடக்கும் மாற்றங்களில் முக்கியப் பங்கு வகிப்பது சூரியப் புயல். இம்மண்டலம் மட்டுமின்றி வருங்காலத்தில் மனிதன் காலடி வைக்கவிருக்கும் விண்வெளியின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதுவே அடிப்படை. ஆகவே விஞ்ஞானிகள் அதை ஆய்வுசெய்து விண்வெளியின் வானிலையைப் புரிந்துகொள்வதையே இந்த ஆய்வின் முக்கியப் பக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது விண்வெளி மிகவும் அமைதியானதாக இருக்கிறது. ஆனால், அது எப்போதும் அமைதியாகவே இருப்பதில்லை. அவள் எத்தனை அழகானவளோ அத்தனை ஆபத்தானவள். அவளை முழுமையாகப் புரிந்துகொள்வதே அவள் எப்படி நடந்துகொள்வாள் என்பதை ஊகிப்பதற்கான அடிப்படைக் காரணியாக விளங்கும்.

இப்போது சூரியன் மிகவும் அமைதியாக இருக்கிறது. அது தன் சுற்றுப்பாதையின் இறுதிக் கட்டத்திலிருப்பதால். 2020-க்குள் சூரியன் தனது 11 வருட சுற்றுப்பயணத்தை முடிக்கும். அந்தச் சுழற்சி முடிந்து அடுத்த சுழற்சி தொடங்கும்போது அதன் வேகம் மீண்டும் அதிகரிக்கும். பழைய உத்வேகத்தோடு சுழலத் தொடங்கும். இந்த பார்க் சோலார் புரோப் திட்டம் ஏழு வருட ஆராய்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூரியன் தனது புதிய சுழற்சியை முழு உத்வேகத்தோடு மீண்டும் தொடங்கும்போது அதன் செயற்பாடுகளை முழுமையாகப் பதிவுசெய்ய அது அங்கிருக்கும்.

அறிவியல் புனைகதைகளில்கூட இதுவரை எந்த நாவலாசிரியரும் கற்பனை செய்திடாத ஒன்று நிஜத்தில் நடக்கிறது. நாம் தினமும் சூரியனைப் பார்க்கிறோம். இருந்தும் அதிலிருக்கும் ஆயிரக்கணக்கான மர்மங்களை நம்மால் இதுவரைக் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. ஆனால், இன்று நாசா ஏவும் இந்தச் செயற்கைக்கோள் அந்த நிலையை மாற்றப் போகிறது. நமது மண்டலத்தின் நட்சத்திரத்தை, நமது மண்டலத்தின் அறியப்படாமலிருந்த கடைசி பகுதியை அருகிலிருந்து கவனிக்கக்கூடிய முதல் கோள் நாசாவின் பார்க் சோலார் புரோப். அது விண்வெளி வரலாற்றின் புதிய பரிமாணத்தை எட்டப்போகிறது.