Published:Updated:

``நியூட்டனுக்கும் டார்வினுக்கும் இடையில் ஸ்டீபன் ஹாக்கிங்!” - கல்லறையில் ஓர் அறிவியல் குழு

வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்பது லண்டனில் இருக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்று.

``நியூட்டனுக்கும் டார்வினுக்கும் இடையில் ஸ்டீபன் ஹாக்கிங்!” - கல்லறையில் ஓர் அறிவியல் குழு
``நியூட்டனுக்கும் டார்வினுக்கும் இடையில் ஸ்டீபன் ஹாக்கிங்!” - கல்லறையில் ஓர் அறிவியல் குழு

``நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்த பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்". இந்தச் சொற்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்தச் சொற்களை உதிர்த்தது நிஜமான குரல்கூட அல்ல. `ஈக்வலைஸர்' என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு பல வருடங்களாக எலக்ட்ரானிக் குரல் பேசி வந்த இயற்பியல் அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் வார்த்தைகள்தாம் இவை. 

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்நாள் முழுவதும் போராடியே பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். 1942-ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி பிறந்த ஹாக்கிங் இளமைப் பருவத்திலேயே ALS எனப்படும் `Amyotrophic Lateral Sclerosis’ என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்படுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளை தானே உருவாக்கி அவற்றை ஈடு செய்தார். இப்படி வாழ்நாள் முழுவதும் அறிவியல் துணைகொண்டே தனது அன்றாட வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி இயற்கை எய்தினார். ALS நோய் பாதிக்கப்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்த தருணம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது எனக் கூறியதை முறியடித்து 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர், இப்போது லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) எனும் கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். 

காலம் கடந்து பயணிப்பது குறித்த இவரது ஆய்வுகள், காலத்தைப் புரிந்துகொள்ளும் விதமாகக் காலத்தின் சுருக்கமான வரலாறு (A Brief History of Time) எனும் புத்தகமாக விவரித்தது. மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகப் பல்வேறு ஆய்வுகள் செய்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். மனிதர்களின் அறிவியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட இரு பெரும் அறிவியலாளர்களுக்கு இடையில்தான் ஹாக்கிங்கின் சாம்பல் புதைக்கப்பட்டுள்ளது. உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பவற்றில் ஒன்றான புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நவீன இயற்பியலின் தந்தை சர் ஐசக் நியூட்டனுக்கும், குரங்குகள்தாம் மனிதர்களின் மூதாதையர்கள் என மனிதர்கள் உருவான உண்மையைச் சொன்ன சார்லஸ் டார்வினுக்கும் இடையில்தான் ஹாக்கிங்கின் சாம்பல் கிடத்தப்படவிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் அவரது சாம்பல் வெஸ்ட்மின்ஸ்டரில் புதைக்கப்பட்டது. 

வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்பது லண்டனில் இருக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்று.  டாவின்ஸி கோட் படம் பார்த்தவர்களுக்கு இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபே நன்றாகத் தெரியும். நியூட்டனின் கல்லறைதான் ஒரு புதிரை விடுவிக்கும் விஷயமாக வரும். லண்டனின் மிகப் பிரமாண்டமான கிறிஸ்தவப் பேராலயமான வெஸ்ட்மின்ஸ்டர் சர்ச்சுடன் இணைந்த கல்லறைப் பகுதியே வெஸ்ட்மின்ஸ்டர் அபே. இங்கு சாதாரண ஆட்களை அடக்கம் செய்ய முடியாது. ஒருவரது அடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்குக்கூட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பிரபுக்கள், புகழ்பெற்ற கவிஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் புகழ் வாய்ந்த மனிதர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே இந்தக் கல்லறையில் இடம் உண்டு.1000 வருடங்களுக்கு மேலாகக் கம்பீரமாக நிற்கிறது வெஸ்ட்மின்ஸ்டர் ஆலயமும் கல்லறையும். இதுவரை 3300 பிரபலங்கள் இங்கே புதைக்கப்பட்டுள்ளனர். கிபி 960-ம் ஆண்டு லண்டனின் தேம்ஸ் ஆற்றங்கரையில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு மன்னரது ஆட்சிக்காலத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயம். கிபி 1200 களில் ஆண்ட மூன்றாம் ஹென்றி காலத்தில்தான் இப்போதிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே முழு அளவில் கட்டப்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை அரசக் குடும்பங்களின் திருமணங்கள், மற்ற நிகழ்ச்சிகள் என அனைத்தும் இந்த தேவாலயத்தில்தான் நடக்கின்றன. சார்லஸ் - டயனா திருமணம் உட்பட 17 அரச திருமணங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன. 

சர் ஐசக் நியூட்டனின் உடலானது கிபி 1727 ம் ஆண்டும் சார்லஸ் டார்வின் உடலானது 1882-ம் ஆண்டும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் புதைக்கப்பட்டது. 1937-ல் இயற்பியலாளர் எர்னெஸ்ட் ரூதர்போர்டு, 1940-ல் ஜெ.ஜெ.தாம்சன் ஆகியோரும் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நல்லடக்கம் செய்யப்பட்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்தான். 78 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அறிவியலாளர் வெஸ்ட்மின்ஸ்டரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அரச குடும்பங்கள், பிரபுக்கள், எழுத்தாளர்களுக்கு என தனித்தனியாக கல்லறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுக்கு அருகில் உள்ள அறிவியலாளர்களுக்கான இடத்தில்தான் மேற்சொன்ன அனைத்து அறிவியலாளர்களும் நல்லடக்கம் செயப்பட்டுள்ளனர். 

ஜூன் மாதம் நடைபெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக 27,000 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆர்வம் உள்ளவர்கள் எனப் பலதரப்பினரும் அந்த 1000 பேரில் இருந்தனர். ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சொர்க்க, நகரங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. தனது வாழ்நாள் முழுவதும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் நல்லடக்கம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.