Published:Updated:

திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா?

திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா?
திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா?

அதை அவர் "It was like Mach 2" என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

டந்த வெள்ளி நவம்பர் 9 அன்று அதிகாலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸைச் சேர்ந்த விமானி அயர்லாந்தைச் சேர்ந்த ஷானன் நகர வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டார். அவர் தாங்கள் பறந்துகொண்டிருக்கும் இடத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கிறதா என்றும் அவர்கள் பறக்கும் பகுதியில் எதோ ஒன்று வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறதென்றும் தெரிவித்தார். இதற்கு அந்தக் கட்டுப்பாட்டு அறையும் அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லையே என்று பதிலளித்தது. கனடா நகரமான மாண்ட்ரீயலிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்துக்குப் பறந்துகொண்டிருந்த அந்த விமானி ஒரு பிரகாசமான ஒளி வேகமாக வடக்கை நோக்கிச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார். தன் விமானம் போகும் பாதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்றாலும் என்னது அது என்ற ஐயத்தில் இப்படி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

ஆச்சர்யம் என்னவென்றால் அதை இவர் மட்டும் பார்க்கவில்லை. அதே சுற்றுவட்டாரத்தில் மான்செஸ்டர் நகரை நோக்கிப் பறந்துகொண்டிருந்த விர்ஜின் விமானத்தின் விமானியும் எதோ ஒன்று வேகமாக நகர்வதைப் பார்த்துள்ளார். அவரும் இவர்களின் உரையாடலில் இணைந்தார். அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த விண்கல்லாக இருக்கலாம் என்றும் ஒரே பாதையில் இதேபோன்று பல மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார் அவர். அதை அவர் "It was like Mach 2" என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவேறு கூற்றுகளால் தற்போது இவை வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டமாக இருக்கலாம் என ஒருபுறம் செய்திகள் கிளம்பத்தொடங்கியுள்ளன. இதை முற்றிலும் மறுக்கமுடியாதெனக் காரணங்களையும் எடுத்துவைக்கின்றனர் சிலர். இதைப்போன்ற விசித்திரமான வான்வெளி நிகழ்வுகளைப் பற்றி தகவல்கள் சேகரிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் 22 மில்லியன் டாலர்களை அரசு ஒதுக்கியுள்ளதை உறுதிசெய்தது அமெரிக்க ராணுவத்தளமான பென்டகன். ஆனால், இந்த UFO (Unidentified Flying Object) மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய எந்த ஓர் ஆராய்ச்சியிலும் அரசுக்கு ஈடுபாடு இல்லை என்றும் கூறிவந்தது. மற்றும் ஏரியா 51 என்ற ரகசிய ராணுவத்தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பல வருடகாலமாக மறைத்து வைத்திருந்தது அமெரிக்க அரசு. இதில்தான் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்பட்டது. இந்த வாதத்துக்கு ஏற்றதுபோல பல விளக்கப்படாத மர்மமான விஷயங்கள் இந்த இடத்தைச் சுற்றி நடந்துள்ளன. ஏரியா 51 என்று தேடினாலே அத்தனை மர்மமான கதைகள் கிடைக்கும்.

எனவே, இப்போது நடந்துள்ளதை ஏற்கெனவே இதைப்போன்று நடந்த நிகழ்வுகளைப் போல அலட்சியப்படுத்தக்கூடாது என எச்சரிக்கிறது அந்தத் தரப்பு. ஷானன் நகர விமானநிலையமும் விசாரணை நடைபெறும் நேரத்தில் இதைப்பற்றிய தகவல்களை தரமுடியாது என்று தெரிவித்துள்ளது. விமானிகளும், கட்டுப்பாடு அறையினரும் பேசிக்கொண்ட ஆடியோ மட்டுமே இப்போது இருக்கிறது. எனவே, தெளிவாக எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது. ஆனால், எப்போதையும்விட இம்முறை சற்று சீரியஸாகதான் இது கையாளப்படுவதாக தெரிகிறது.

வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

விமானிகள் நம் வளிமண்டலத்தில் அதிவேகத்தில் நுழைந்த எதோ ஒரு சிறிய தூசை கூடப் பார்த்திருக்கலாம். இதைப் போன்றவற்றைத்தான் ஷூட்டிங் ஸ்டார்கள் என்றழைக்கிறோம். ஆனால், மிகவும் பிரகாசமாக இருந்ததாக விமானிகள் விவரிப்பதால் சற்று அளவில் பெரிதாக அது இருந்திருக்க வேண்டும். அவர்கள் சொல்வதை மட்டும் வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாதென்றாலும், இது ஓர் ஆப்பிள் அளவில் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். நவம்பர் மாதத்தில்தான் இதுபோன்ற விஷயங்கள் அதிகமாக நடக்கும் என்றும் தெரிவித்தனர். உள்ளே நுழைந்தது உராய்வின் காரணமாக சிதறி விமானிகள் பார்த்ததைப் போன்று சென்றிருக்கலாம் எனக் கணிக்கின்றனர் அவர்கள்.

இதனிடையே அயர்லாந்தின் தலைமை வானியல் ஆராய்ச்சியாளர் டேவிட் மூர், இது நிச்சயம் ஒரு சாதாரண 'ஃபயர் பால்' மட்டுமே என்கிறார். தான் ஆயிரம் சதவிகிதம் இதை 'ஃபயர் பால்' அல்லது 'எரிகல்' என்றே நம்புவதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

அட, எல்லாரும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க!

அடுத்த கட்டுரைக்கு