Published:Updated:

'அலோ... நீங்க போனது நிலாதானா?!' மீண்டும் அமெரிக்காவைக் கலாய்க்கும் ரஷ்யா

'அலோ... நீங்க போனது நிலாதானா?!' மீண்டும் அமெரிக்காவைக் கலாய்க்கும் ரஷ்யா
'அலோ... நீங்க போனது நிலாதானா?!' மீண்டும் அமெரிக்காவைக் கலாய்க்கும் ரஷ்யா

கொஞ்சகாலம் அமைதியாக இருந்த வதந்தி நெருப்பை மீண்டும் பற்ற வைத்திருக்கிறது ரஷ்யா!

'இருவரில் யார் வல்லரசு?' என்ற போட்டி அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. நிலத்தில் இருவருமே தங்களது பலத்தைக் காட்டிக்கொண்டிருக்க மறுபக்கம் அவர்களது பார்வை விண்வெளியின் பக்கமும் திரும்பியது. அதில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தது சோவியத் யூனியன். முதலில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பியது, விண்கலத்தை அனுப்பி முதன் முதலில் நிலவின் தரையை தொட்டது எனப் பல்வேறு சாதனைகள் சோவியத்தின் கைவசம் இருந்தன. இப்படி விண்வெளியில் சோவியத் யூனியனின் பலம் கூடிக்கொண்டே செல்ல அதற்குப் பதிலாக அமெரிக்காவும் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. நிலவின் தரையில் முதன் முதலாக மனிதர்களின் கால் தடங்களைப் பதிக்க வைத்ததன் மூலம் அதைச் செய்தும் காட்டியது. அந்த ஒன்றின் மூலமாகவே உலகம் பேசிக்கொண்டிருந்த சோவியத் யூனியனின் சாதனைகளையெல்லாம் மறக்கடிக்கச் செய்தது அமெரிக்கா.

1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிலவில் முதன் முதலாக இறங்கினார் நீல் ஆம்ஸ்ட்ராங். கடந்த நூற்றாண்டில் மனிதன் செய்த மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகி விட்டது. அதன் பிறகு சோவியத் யூனியனும், மற்ற உலக நாடுகளும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்டு விட்டன. இன்று வரை மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய பெருமை அமெரிக்காவிடம் மட்டும்தான் இருக்கிறது. இது நடக்கவே நடக்காது என்று பலரால் நம்பப்படும் ஒரு விஷயம் உண்மையாகவே நடக்கும்போது அதன் மீது எல்லா வகையிலும் சந்தேகம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதானே. அது மனிதர்கள் நிலவில் இறங்கிய விஷயத்திலும் தொடர்ந்தது.

நிலவுக்குச் சென்றது உண்மைதானா? கலாய்க்கும் ரஷ்யா 

'அமெரிக்கா உண்மையில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவில்லை, அந்தக் காட்சிகள் அனைத்தும் பூமியில் படம் பிடிக்கப்பட்டவை' என்பது நிலவுப் பயணத்தைப் பற்றி நீண்டகாலமாக இருக்கும் ஒரு வதந்திகளில் முக்கியமானது. இந்தச் சந்தேகம் சிலருக்கு உண்டு என்றாலும் அது ரஷ்யாவிற்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இதுபற்றி தொடக்கம் முதலே கேள்வி எழுப்பி வருகிறது ரஷ்யா. அமெரிக்காவில் கூட இன்னும் சிலர் அது பொய்யானது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல்வேறு கள ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. இத்தனைக்கும் அந்த நிகழ்வை அமெரிக்கா உலகம் முழுவதும் ஒளிபரப்பியது. இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் கூட வெளியிட்டுள்ளது, அதன் பிறகும் கூட இதை நம்பாதவர்கள் உண்டு.

இந்நிலையில் இது பற்றி மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார் ரஷ்யாவின் தேசிய விண்வெளி நிறுவனத்தின் (Roscosmos) தலைவரான டிமிட்ரி ரோகோஸின் (Dmitry Rogozin). கடந்த சில நாள்களுக்கு முன்னால் மால்டோவா நாட்டின் அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் டிமிட்ரி ரோகோஸின் வெளியிட்டுள்ளார். அதில் "அவர்கள் உண்மையாகவே அங்கே சென்றார்களா இல்லையா என்பதை ஆராய வேண்டும், அதுவே எங்கள் விருப்பம்" என்று தெரிவித்திருக்கிறார். அவர் கிண்டலான தொனியில் பேசியிருந்தாலும் சோவியத் யூனியனில் பிரிவு ஏற்பட்டுப் பல காலத்திற்குப் பிறகும் கூட நிலவுப் பயணத்தை அவர்களால் மறக்க முடியவில்லை என்பதுக்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த நிகழ்வு. கொஞ்சகாலம் அமைதியாக இருந்த வதந்தி நெருப்பை மீண்டும் பற்ற வைத்திருக்கிறது ரஷ்யா !

அடுத்த கட்டுரைக்கு