Published:Updated:

நாசாவின் இன்னொரு மைல்கல்... சவால்களைக் கடந்து சாதித்த இன்சைட்! #InSight

மிகவும் சிக்கலான 'அந்த ஏழு நிமிடங்களை' திறமையாக கையாண்டிருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

நாசாவின் இன்னொரு மைல்கல்... சவால்களைக் கடந்து சாதித்த இன்சைட்! #InSight
நாசாவின் இன்னொரு மைல்கல்... சவால்களைக் கடந்து சாதித்த இன்சைட்! #InSight

டந்த மே மாதம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட நாசாவின் இன்சைட் லேண்டர் நேற்று முன்தினம் வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. நமது சூரிய குடும்பத்தில் மிகவும் சிக்கலான காரியங்களில் ஒன்றாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பார்ப்பது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைவதைத்தான். அந்தக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து சந்தித்துள்ளது இந்த விண்கலம். நம் மங்கள்யான்கூட செவ்வாயைத்தான் சுற்றி வந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாசா இந்த மிஷனுக்காக மொத்தம் 850 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்துள்ளது.

இப்படி விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குவது இது எட்டாவது முறை. இந்த இன்சைட் லேண்டர் அடுத்த 2 வருடங்களுக்குச் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும். இந்த விண்கலம்தான் இந்தக் கிரகத்தைப் பற்றி நாம் இதுவரை அறியாத பல தகவல்களைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு செவ்வாய்க்கு சென்ற விண்கலங்கள் அதன் மேற்பரப்பில் இருக்கும் குணநலன்களைத்தான் கண்காணித்து வந்தன. ஆனால், இந்த இன்சைட் விண்கலம் இதுவரை இல்லாத வகையில் செவ்வாயின் மேற்பரப்பில் 16 அடி ஆழம் வரைக்கும் துளையிட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இதன்மூலம் செவ்வாய்க் கிரகம் உருவான வரலாறு, அங்கு இருக்கும் டெக்டானிக் நகர்வுகள் பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் தரையிறங்கியதும் கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரபல்சன் ஆய்வகத்தில் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி, கட்டித்தழுவி, ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் இதன் மிஷன் கண்ட்ரோல் விஞ்ஞானிகள். இதைப்பற்றி விவரித்த விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தின் உள்ளே சென்ற பின் இருந்த அந்த ஏழு நிமிடங்களை 'the seven minutes of terror' என்று குறிப்பிட்டனர். இந்த மிஷனின் கடினமான நேரம் அதுதான் என்கின்றனர் அவர்கள். ``மிகத்தொலைவில் இருப்பதால் இங்கு பூமியிலிருந்து மாற்றங்கள் செய்தாலும் அது விண்கலத்துக்குச் சென்று சேர சுமார் 8 நிமிடங்கள் ஆகிவிடும். எனவே, இந்த நிகழ்வில் எங்களிடம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. முடிந்தளவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்தும் விண்கலத்தில் புரோகிராம் செய்வதுடன் எங்கள் வேலை முடிந்தது" என்றார் ஒரு விஞ்ஞானி. ``சொல்லப்போனால் தரையிறங்கிய 8-10 நிமிடங்களுக்குப் பிறகுதான் தரையிறங்கியதே எங்களுக்குத் தெரியும்" என்றார் அவர்.

சரியாக அமெரிக்க நேரப்படி 11:47 மணிக்கு விண்கலம் செவ்வாய் வளிமண்டலத்தில் நுழைந்ததாக மிஷன் கண்ட்ரோல் குழுவுக்குத் தகவல் வந்து சேர்ந்தது. பின்பு மணிக்கு சுமார் 12,300 மைல் வேகத்தில் தரையை நோக்கிப் பாய்ந்துள்ளது இந்த விண்கலம். இதைச் சுற்றி இருந்த வெப்பக்கவசம் வளிமண்டலத்துடன் ஏற்பட்ட உராய்வில் ஏற்பட்ட 2,700 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாட்டி எடுக்கப்பட்டது. 2 நிமிடத்தில் சூப்பர்சோனிக் பாராசூட் திறக்கப்பட்டு ரேடார் ஆக்டிவேட் செய்யப்பட்டது. பின்பு அமைதியாக லேண்ட் ஆகியுள்ளது இன்சைட் லேண்டர். எந்த ஒரு பிசிறும் இல்லாமல் எதிர்பார்த்ததைப் போலவே அனைத்தும் நடந்ததாக விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்போது சூரிய மின்சக்தியின் உதவியுடன் தன் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது இன்சைட். செவ்வாய் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு காலத்தில் பூமியைப் போல செவ்வாய் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 300 ஆண்டுகளில் நடந்த சிறுசிறு மாற்றங்களால்தான் இன்றைய நிலைக்குச் செவ்வாய் வந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்போது செவ்வையை சுற்றிவரும் செயற்கைக்கோள்களும் மறைந்த குளங்கள், நதிகளின் எல்லைக்கோடுகளைக் கண்டறிந்துள்ளன. இதைப்பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்த இந்த இன்சைட் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சென்ற MarCo செயற்கைக்கோள் மூலம் தகவல்கள் பூமிக்கு வந்துசேரும். தரையிறங்கியதும் இன்சைட் தன் கலர் கேமராவின் உதவியுடன் முதல் புகைப்படங்களை பூமிக்கு நேற்று அனுப்பியுள்ளது. வருங்காலத்தில் மனிதர்களைச் செவ்வாய்க்கு அனுப்புவதிலும் இந்த இன்சைட் விண்கலத்தில் இருந்துவரும் தகவல்கள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்சைட் விண்கலத்திலிருந்து கிடைக்கும் தகவல்களை அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளங்களிலும் பின்தொடரலாம்.

இந்த விண்கலம் செவ்வாய் பற்றிய பல புதிர்களை விடுவிக்கும் என நம்பலாம்.

படங்கள்: https://twitter.com/NASAInSight