Published:Updated:

ஸ்பெஷல் டூத் பிரஷ், பிரத்யேகக் குளியல் சோப்... விண்வெளி வீரர்களின் ஒருநாள் எப்படி?

நமது பூமியில் புவியீர்ப்பு விசை மற்றும் எலும்புகள் உதவியால் உடலை நேர்கோட்டு சமநிலையில் வைத்து நடக்கின்றோம். ஆனால் புவியீர்ப்பு விசையற்ற விண்வெளியில் நமது உடலானது பூமியில் ஒத்துழைப்பது போல் ஒத்துழைக்காது.

ஸ்பெஷல் டூத் பிரஷ், பிரத்யேகக் குளியல் சோப்... விண்வெளி வீரர்களின் ஒருநாள் எப்படி?
ஸ்பெஷல் டூத் பிரஷ், பிரத்யேகக் குளியல் சோப்... விண்வெளி வீரர்களின் ஒருநாள் எப்படி?

னிதன் இதுவரை செய்த பயணங்களிலேயே சாகசம் நிறைந்தது எதுவெனக் கேட்டால், நிச்சயம் விண்வெளிப் பயணம்தான். சிறுவயதில் பள்ளி வகுப்பறையில் நீங்கள் என்னவாக ஆக ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டால் நிச்சயம் ஒருவராவது நான் விண்வெளி வீரனாக ஆசைப்படுகிறேன் எனக் கூறுவர். இவ்வளவு ஏன் நமக்கே வானத்தில் விண்வெளி வீரர் உடுத்தும் உடையினைக் கண்டும் அவர்கள் புவியீர்ப்புவிசை அற்ற நிலையில் அங்கும் இங்கும் தாவி நடந்து வருவதைப் பார்த்தும் ஒருமுறையாவது இம்மாதிரி பயணம் நமக்கு நிகழாதா என நினைத்திருப்போம். ஆனால், நாம் நினைத்துப் பார்த்திராத வகையில் விண்வெளிப் பயணம் மிகுந்த ஆபத்து நிறைந்தது. ஆங்கிலத்தில் ஒன்ஸ் இன் தி புளூ மூன் (once in the blue moon) என்பார்கள். அதாவது, எப்பொழுதாவது சாத்தியப்படக்கூடிய விஷயங்களை இப்படிக் குறிப்பிடுவர். விண்வெளிப் பயணமும் விண்வெளி வீரராகும் வாய்ப்பும் அப்படித்தான். அனைவருக்கும் எளிதில் சாத்தியப்படக்கூடிய விஷயம் இல்லை. அதற்கென்று பல்வேறு கட்ட பயிற்சிகளும் பிரத்யேக நிபந்தனைகளும் உண்டு அவற்றையெல்லாம் பூர்த்தி செய்தால்தான் விண்வெளி செல்லும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

1961-ம் ஆண்டு ரஷ்யா யூரி ககாரின் (Yuri Gagarin) என்றவரை விண்ணுக்கு அனுப்பியது. முதன்முதலில் விண்வெளியில் பயணம் சென்ற நபர் என்ற பெருமை பெற்றவரும் அவரே. அன்றுமுதல், விண்வெளி ஆராய்ச்சி உலக வல்லரசுகளின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்த விண்வெளி வீரர்கள் எப்படித் தயாராகிறார்கள் தெரியுமா? விண்வெளி வீரர் ஆவது சிறிது கடினம் என்றாலும், அதற்கேற்ப முயன்றால் நிச்சயம் ஆகிவிடலாம். விண்வெளி வீரருக்கு உரிய தகுதிகள் சிலவற்றைப் பார்க்கலாம். ரஷ்யாவின் RSA-வைச் (Russian Space Agency) சேர்ந்தவர் வீரர்களை `COSMONAUTS' என்றும், அமெரிக்காவின் NASA, CSA மற்றும் JAXA-வைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை `ASTRONAUTS' என்றும் கூறுவர். விண்வெளி வீரர் ஆக விரும்பும் நபர் தனது கல்லூரிப் படிப்பை அறிவியல் அல்லது மருத்துவ அறிவியல் சார்ந்து படித்திருக்க வேண்டும். உதாரணமாக இளம் அறிவியல் (Bachelor of science), வானூர்தி பொறியியல் (Aero space engineering) அல்லது வானியல் சம்பந்தபட்ட ஏதேனும் ஒரு படிப்பை நல்ல சதவிகிதத்தோடு முடித்திருக்க வேண்டும். நல்ல உடல்நிலையுடன் கூடிய மனநிலை அவசியம். ஏனெனில் விண்வெளி வீரர் தேர்வின்போது நமது மனநிலையையும் மிகவும் உன்னிப்பாகச் சோதிப்பர். பார்வைத்திறன் 20/20 இருக்க வேண்டும்; இரத்த அழுத்தம், செவி, உடலமைப்பு ஆகியவை சரியான அளவில் இருக்க வேண்டும். ஏதேனும் விண்வெளி ஏஜென்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட, தேர்வான உடனே விண்வெளிப் பயணம் அனுப்பிவிட மாட்டார்கள். பயிற்சி மட்டுமே இரண்டு வருடங்கள் தருவார்கள்.

நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான ISRO வரும் 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் உள்ளது. இத்திட்டத்துக்கு `GAGANYAAN' எனப் பெயர் வைத்துள்ளனர். கடைசியாக1984-ம் ஆண்டு ராகேஷ்சர்மாவை விண்வெளிப்பயணம் செய்ய அனுப்பிய பிறகு இந்தியா மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. (அப்போதும்கூட இந்தியா தனது சொந்தமுயற்சியில் அனுப்பவில்லை; விரைவில் அனுப்பப்படவிருக்கும் ககன்யான்தான் இந்தியா சொந்த முயற்சியில் மனிதனை அனுப்பும் முதல் திட்டம்). அதற்குப் பதிலாக செயற்கைக்கோள் அனுப்புவதில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தாலும், இந்த ககன்யான் நிச்சயம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவுக்குப் பெரிய மைல்கல்லாக அமையும். சரி... இவ்வளவு ஆபத்து நிறைந்த பயணத்துக்கு ஏன் மனிதர்கள் போட்டியிட்டு தங்கள் உயிரினைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஒருமுறை விண்வெளி சென்றால் கூட வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் பெயர் நிரந்தரமாக இடம்பெற்றுவிடும் அளவிற்கு விண்வெளிப் பயணம் மனிதனின் அதிமுக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விண்வெளிப் பயணத்திற்கு தேர்வாவதே இந்தளவு கடினம் எனில் விண்வெளி  சென்றவுடன் அங்கு அவர்கள் வாழும் முறை அதைவிடக்கடினம். நமது பூமியில் புவியீர்ப்பு விசை மற்றும் எலும்புகள்  உதவியால் உடலை நேர்கோட்டு சமநிலையில் வைத்து நடக்கின்றோம். ஆனால், புவியீர்ப்பு விசையற்ற விண்வெளியில் நமது உடலானது பூமியில் ஒத்துழைப்பது போல் ஒத்துழைக்காது; இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. எனவே விண்வெளியில் தங்கியிருப்போர் உடற்பயிற்சியை தங்களின் தினசரி கடமைகளில் ஒன்றாகக் கருதி செய்வர். 

விண்வெளியில் அவர்களுக்கு என்று தனியாகப் பல்துலக்கும் பிரஷ், பற்பசை, முடி சீர்ப்படுத்தும் கருவி ஆகியவை இருந்தாலும் அவற்றை உபயோகிக்கும் முறை முற்றிலும் மாறுபடும். வாஷ்பேசின் இல்லாத காரணத்தால் பல்துலக்கிவிட்டுத் துப்புவதற்குப் பதிலாக வாஷ்கிளாத் என்றழைக்கப்படும் பிரத்யேக துணியில் துடைத்துவிடுவர். அவர்கள் உபயோகப்படுத்தும் சோப்பிற்குத் தண்ணீர் அவசியம் இல்லை. எனவே, தண்ணீரின்றி உடலைத் தூய்மைப்படுத்தி வாஷ்கிளாத் மூலம் சோப்பு நுரையைத் துடைத்துவிடுவர். விண்கலத்தில் மொத்தம் நான்குக் குப்பை தொட்டிகளை வைத்திருப்பர். குப்பையின் தன்மைக்கு ஏற்ப அதை அந்தந்த தொட்டியில் போட்டு விடுவர். குப்பைத்தொட்டி முழுதாக நிரம்பிய பின்னர் தானாகவே விண்கலத்திலிருந்து வெளியேறிவிடும். முந்நூறு வகையான உணவுகள் விண்வெளி வீரர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட உணவுகளாக உள்ளன. உணவுகளில் சுடுதண்ணீர் அல்லது குளிர்ந்தநீரை ஊற்றினால் தயாராகும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ் போன்ற திரவ உணவுகளை நன்கு பேக் செய்யப்பட்ட பையில் ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பர். விண்கலத்தில் உள்ள கழிவறை நமது பூமியில் பயன்படுத்துவதுபோல் இருந்தாலும் அதனுள் இருக்கும் Vacuum கழிவுகளை உறிஞ்சிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஜீரோ கிரேவிட்டி (Zero Gravity)  என்றழைக்கப்படும் விண்வெளியில் நாம் சாதாரணமாக உறங்கமுடியாது. எனவே படுக்கை, சுவருடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்தப் படுக்கையினுள் சென்று பெல்டை கட்டிக்கொண்டு உறங்க வேண்டும். அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் அடிப்படை மருத்துவப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். விண்வெளியில் தங்கியிருப்பவர்களுக்கு தங்களுக்குப் பிடித்த பாட்டு சிடிக்கள், ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் உள்ள விளையாட்டு உபகரணங்களை வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. அதைத் தவிர சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாரம் ஒருமுறை திரைப்படம் பார்க்கவும், அவர்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா அனுப்பவும் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவரை ஏராளமானோர் தங்களின் பெயரைப் பதிவுசெய்து முன்பணமும் செலுத்தியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருங்கள். `வாங்களேன் வீக் எண்டு ட்ரிப்பாக விண்வெளிக்குப் போய் வரலாம்' நிலையும் வந்துவிடும்.