Published:Updated:

`ராவண விமானப்படை; டெஸ்ட்டியூப் கௌரவர்கள்...’ கேலிக்குள்ளான அறிவியல் மாநாடு!

`ராவண விமானப்படை; டெஸ்ட்டியூப் கௌரவர்கள்...’ கேலிக்குள்ளான அறிவியல் மாநாடு!
`ராவண விமானப்படை; டெஸ்ட்டியூப் கௌரவர்கள்...’ கேலிக்குள்ளான அறிவியல் மாநாடு!

இந்தியா காணவிரும்பும் அறிவியல் முன்னேற்றம் இதுவல்ல என்பதைத்தான் இந்த உலகுக்கு நாம் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும்!

2019-ம் ஆண்டின் இந்திய அறிவியல் மாநாட்டைப் பொறுத்தவரை, ``உலகத்துல உள்ள அம்புட்டு அறிவாளிங்களும் நம்ம நாட்டுலதான்யா இருக்காங்க’’ என்ற சிங்கம் புலியின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அபத்தமான பல போலி அறிவியல் கருத்துகளைப் பரப்பும் பிரசார மேடையாக அதைப் பயன்படுத்தியுள்ளனர் சில விஞ்ஞானிகள். சர்வதேச அளவில் இந்திய விஞ்ஞானிகளைப் பார்த்து நகைக்கும் அளவுக்கு இந்த மாநாடு இட்டுச் சென்றுவிட்டது என்றால் அது மிகையில்லை. 

இந்த அறிவியல் மாநாடு அரசு சாராதது. அதனால் இதில் பேசப்பட்ட விஷயங்களில் அரசின் தலையீடு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிச்சயமாக இதில் மத்திய அரசின் பங்கும் உண்டு. இது அரசு நடத்தும் மாநாடு இல்லையென்பது உண்மைதான். ஆனால், பிரதமர் கலந்துகொள்ளும் தேசிய அளவிலான ஒரே அறிவியல் மாநாடு இது. பிரதமரோ வேறு எந்த அரசாங்கத் தலைமைகளோ யாருமே இதுமாதிரியான வேறெந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. இத்தகைய முக்கியமான நிகழ்வில் அரசின் பங்கு இல்லையென்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி, சர்வதேச அளவில் இந்தியர்களின் அறிவியலைக் கேலிக்குள்ளாக்கும் அளவில் அப்படியென்ன நடந்தது? மாநாட்டில் முன்வைத்த சில கூற்றுகளைப் பார்த்தால் நமக்கே புரியும்.

டைனோசர்களைக் கண்டுபிடித்தவர் பிரம்மதேவர்

அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. கடந்த 25 ஆண்டுகளாக டைனோசர்களைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவர்தான் இந்தக் கூற்றை இந்திய அறிவியல் மாநாட்டில் முன்வைத்தவர். வேதங்களைத் தன் ஆதாரமாக எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் சொல்லவருவது என்னவென்றால் டைனோசர்கள் குறித்த தகவல்களை அமெரிக்கர்களோ ஆங்கிலேயர்களோ கண்டுபிடிக்கும் முன்னமே கோடானுகோடி உயிர்களைப் படைத்த பிரம்மதேவர் கண்டுபிடித்துவிட்டார் என்பதுதான். 

கௌரவர்கள் டெஸ்ட் டியூப் மூலமாகப் பிறந்தவர்கள்

ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான நாகேசுவர ராவ் என்ற விஞ்ஞானிதான் இதைச் சொல்லியிருக்கிறார். மகாபாரதத்தை எடுத்துக்காட்டி, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே டெஸ்ட் டியூப் கருத்தரித்தல் இங்கு இருந்துள்ளதாகச் சொல்கிறார் இவர். அதேபோல் ராமாயணத்தை ஆதாரமாகக் காட்டி ஏவுகணைகள் இருந்துள்ளதாகக் கூறுகிறார்.

"ஒரே தாயிடமிருந்து நூறு கௌரவக் குழந்தைகளைப் பிறக்கவைக்க அப்போதைய ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் ஆராய்ச்சிகளே காரணம். இது சில ஆயிரம் வருடங்களுக்குமுன் நடந்தது. ராவணனிடம் 24 வகையான போர் விமானங்களும் ஏவுகணைகளும் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. இதுதான் இந்தியாவின் அறிவியல்’’ என்கிறார் `துணைவேந்தர்’ நாகேசுவர ராவ். இதோடு நிற்கவில்லை. தன்னிடமிருந்த விமானப்படையை நிறுத்திவைக்க ராவணன் விமான நிலையங்களையும் அமைத்திருந்ததாகச் சொல்கிறார்.

டார்வின் சொன்ன பரிணாமவியல் தத்துவம் பெருமாளுடையது

``தசாவதாரம் என்ற பத்து அவதாரங்களின் மூலமாக டார்வின் முன்வைத்த பரிணாமவியல் தத்துவத்தைப் பெருமாள் அப்போதே சொல்லிவிட்டார்.’’ இதைச் சொன்னதும் அதே `விஞ்ஞானி’தான். இவை அனைத்துக்கும் அவர் முன்வைக்கும் ஆதாரம் இதிகாசங்கள்.

``இதிகாசங்கள்தான் இவற்றுக்கு ஆதாரங்கள். அவையே அறிவியல். ஐன்ஸ்டீன் சொன்னது தவறு. நான் அவரைவிடப் பெரிய விஞ்ஞானி’’ என்றும் மனிதர் மார்தட்டுகிறார்.

அறிவியல் மாநாடு இவர்களோடு நிற்கவில்லை. இன்னொருவர் வந்து நியூட்டனைக் குறைகூறுகிறார். மாபெரும் இயற்பியலாளர் நியூட்டன் ஈர்ப்புவிசை குறித்த அறிவு குறைவுதானாம். ஐன்ஸ்டீனும் சார்பியல் கோட்பாட்டை முன்வைத்ததன் மூலமாக உலகத்தைத் தவறாக வழிநடத்தி விட்டாராம். இதைச் சொன்ன அறிவியலாளர் ஜெகதால கிருஷ்ணன். தமிழகத்தில் உலக சமூக சேவை மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருப்பவர். 

``இருபதாம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனுடைய கருத்துகளுக்குச் சொந்தமானதாக இருந்துவிட்டது. ஆனால், இந்த நூற்றாண்டு கிருஷ்ணனுக்குச் சொந்தமானதாக இன்னும் சில வருடங்களில் மாறும்’’ என்கிறார். இதைச் சொன்னவர் ஓர் இயற்பியலாளரே கிடையாது. அவர் ஒரு மின்பொறியாளர்.

இப்படியான கருத்துகளைச் சொல்லியுள்ளது இந்த அறிவியல் மாநாடு. முடியும்வரை அதில் கட்டாயம் கலந்துகொண்டே ஆக வேண்டுமென்று அது நடந்த இடமான லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வற்புறுத்தல் வேறு. அங்கு கலந்துகொண்டதற்கான வருகைப் பதிவுகளைக் காட்டினால், அடுத்த அரையாண்டுக்கான மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படுமென்று ஆசைவார்த்தைகளும் காட்டப்பட்டுள்ளன. இந்திய அறிவியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இத்தகைய போலி அறிவியல் கருத்துகள் பல `நிஜ’ விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்வலைகளையும் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது. அவர்களின் விமர்சனங்களையும் காட்டமான கருத்துகளையும் முழுமையாகத் தவிர்த்துவிட்டது இந்திய அறிவியல் மாநாடு.

முன்வைக்கப்படும் கூற்றுகளும் கோட்பாடுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதையே `உண்மையான' விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் விரும்புவர். அப்போதுதான் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதன் மூலமாகத் தம் கருத்துகளை அவர்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். அப்போதுதான் அறிவியல் வளரும். அறிவியல் என்பதே கேள்வி கேட்பதுதான். கேள்விகள்தாம் அறிவியலை வளர்த்தெடுக்கும். அத்தகைய கேள்விகளையே புறந்தள்ளுவது தெரிந்தே தவறான கருத்துகளை அறிவியல் என்ற பெயரில் பரப்புவதாகச் சந்தேகப்பட வைக்கிறது. இத்தகையப் போக்கு, `சொல்வதை மட்டும் கேட்கவும், அதை அப்படியே நம்பவும்’ என்று மாணவர்களைப் பழக்கப்படுத்திவிடும். அதைவிட ஆபத்தான சீர்கேடு அறிவியல் சமுதாயத்தில் நடக்கவே முடியாது.

இது ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளும் மிக முக்கியமான மாநாடு. அத்தகைய முக்கியமான மாநாட்டை அபத்தமான மதச்சார்பான போலி அறிவியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது மிகப்பெரும் குற்றம். இது வருங்காலத்தின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் மட்டமான திட்டம். இத்தனை கூற்றுகளை முன்வைத்தவர்கள் ஏன் ஒரு கூற்றுக்குக்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை? இன்று சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் எவ்விதக் கருத்தை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், இந்திய அறிவியல் மாநாடு என்பது அப்படியல்ல. இது சர்வதேச அளவில் இந்தியாவின் அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியைக் கவனிக்க வைக்கும் முக்கியமான நிகழ்ச்சி. அதில்கூட ஆதாரமற்ற அபத்தமான கூற்றுகளை அதுவும் பொறுப்பான இடத்திலிருக்கும் அறிவியலாளர்கள் முன்வைத்திருப்பது வேதனையான விஷயம். 

``இந்திய அறிவியல் மாநாட்டில் பேசப்பட்ட அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை. இதை ஒரு மேடையாகப் பயன்படுத்தி விஞ்ஞானத்துக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புகிறார்கள். நியூட்டன், ஐன்ஸ்டீனுடைய கோட்பாடுகளை அதற்குரிய அமைப்புகளில்தான் முன்வைக்கப்பட வேண்டும். இப்படி மாணவர்கள் மத்தியில் சொல்லி அறிவியல் வளர்ச்சியைச் சீர்குலைக்கிறார்கள். எல்லா நாட்டினுடைய இதிகாசங்களிலுமே இதுபோன்ற பல கற்பனைகள் இருக்கின்றன. அத்தகைய கற்பனைகளை நடைமுறையில் செய்துகாட்டும் போதுதான் அது அறிவியலாகிறது. பண்டைய சமுதாயத்தில் இவை இருந்தன என்று கற்பனையான இதிகாசங்களை முன்வைத்துச் சொல்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பங்கள் அப்போது இருந்தன என்றால், அவை எப்படி மறைந்தன, ஏன் பிற்காலத்தில் இல்லாமல் போயின என்பதையும் அவர்கள் சொல்ல வேண்டும். வெறுமையாகக் கூற்றுகளை மட்டுமே பட்டியலிடக் கூடாது. தர்க்கரீதியாக இவர்களால் அவற்றைச் சொல்ல முடியவில்லை. எந்தவொரு விஷயத்தையும் அறிவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அதில் தெரிந்தவற்றையே அறிவியல் சமூகம் ஏற்றுக்கொள்ளும். இதிகாசங்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களைச் சொல்வது அறிவியலாகாது. இந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களுக்கு எதிராக வரக்கூடிய கருத்துகளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவற்றுக்குப் பதிலளிக்கவும் இல்லை. இதுவே அவர்களின் கூற்றுகள் அபத்தமானது என்பதைக் காட்டுகிறது" என்கிறார் பிரேக்த்ரூ அறிவியல் கழக உறுப்பினரான அறிவியலாளர் முனைவர் திலகர்.

அறிவியல் என்பதே ஆராய்ந்து ஆதாரபூர்வமாகத் தெரிந்த பிறகே நம்ப வேண்டும் என்பதுதான். அத்தகைய அறிவியலுக்கு எதிராகச் சமீபகாலமாகப் போலி அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் போலி அறிவியல் எந்த அளவுக்கு ஆபத்து என்றால், 

``தவறான விஷயத்தைச் செய்வது எவ்வளவு ஆபத்தோ, அதைவிட ஆபத்து சரியான விஷயத்தைச் செய்யாமலிருப்பது. அதேபோல் பொய்யுரைகளை அப்படியே நம்புவதைவிடப் போலியான ஆதாரமற்ற இதுபோன்ற தகவல்களைக் கேள்வி கேட்காமல் அமைதியாக இருப்பது ஆபத்தானது.’’

ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் முன்வைத்த தகவல்களே இன்றைய அனைத்து விஞ்ஞான வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அவற்றின் உதவியுடன் உருவான அறிவியல் வளர்ச்சிகளே அவை சரியானது என்பதற்கான ஆதாரங்கள். அத்தகைய அறிவியல் கோட்பாடுகளைத் தவறென்று சொன்னவர்கள் அதை நிரூபிக்க என்ன ஆதாரங்களை முன்வைத்தார்கள்? உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கியப் பங்குவகித்த தவிர்க்க முடியாத பல விஞ்ஞானிகளைக் கொண்ட பெருமை இந்தியாவுக்கு உண்டு. அந்தப் பெருமைகளை மழுங்கடிக்கும் வகையில் சில அதிமேதாவிகளையும் இந்தியா பெற்றிருப்பது வேதனைக்குரியது.

அடுத்த கட்டுரைக்கு