Published:Updated:

முதல்முறையாக நிலாவில் முளைத்த பருத்தி... கருகிப்போகக் காரணம் என்ன?

பூமியைத் தாண்டி வேறொரு கிரகத்தில், வேறொரு நிலப்பகுதியில் முளைத்த முதல் தாவரம் என்ற பெருமை பருத்திக்கே. அது முளைவிடக் காரணமான முதல் நாடு என்ற பெருமையும் சீனாவுக்கே!

முதல்முறையாக நிலாவில் முளைத்த பருத்தி... கருகிப்போகக் காரணம் என்ன?
முதல்முறையாக நிலாவில் முளைத்த பருத்தி... கருகிப்போகக் காரணம் என்ன?

நிலவு குறித்து அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அறிய பல தகவல்களைச் சேகரித்தாலும், மனிதனுக்கு நிலாவின் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா, அதை உயிர்க்கோளமாக மாற்ற முடியுமா எனப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளில் ஒரு பகுதியாகச் சீனா புதியதொரு முயற்சியை மேற்கொண்டது. சந்திரனில் விவசாயம் செய்ய நினைத்தது. அதற்காகப் பிரத்யேக முயற்சிகளையும் மேற்கொண்டது.

China National Space Agency spacecraft-ல் பணிபுரியும் விஞ்ஞானிகள் சந்திரனின் தொலைதூரப் பகுதியில் உயிர் வாழ முடியுமா என்பதைப் பார்க்க ஒரு சிறிய உயிர்க்கோளத்தைச் சந்திரனில் உருவாக்க விரும்பினர். அதாவது, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் மறுபக்கத்தில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன. இதற்காக ஒரு கொள்கலனில் சில பருத்தி விதைகள், உருளைக்கிழங்கு, கடுகு, அரபிடோப்சிஸ், பழ ஈக்களின்முட்டைகள் மற்றும் சில ஈஸ்டுகளைக் கொண்டு, ஜனவரி 3 அன்று சந்திரனில் வெற்றிகரமாக இறங்கியது சீனாவின் Change 4. இது சிறப்பு அலுமினியக் கலவைகளால் தயாரிக்கப்பட்டது. 198 மில்லி மீட்டர் உயரமும், 173 மில்லி மீட்டர் விட்டமும் மற்றும் 2.6 கிலோ எடையும் உடையது. இது தாவரங்கள் வளரத் தேவையான தண்ணீர், மண், காற்று ஆகியவற்றைக் கொண்டது. இவற்றோடு சிறிய இரண்டு கேமராக்களும் பொருத்தப்பட்டன. விதைகளை முளைக்க வைப்பதற்குத் தேவையான நீரும் ஒளியும் சில கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியோடு நடைபெற்றது. கேமராக்களின் உதவியோடு சந்திரனிலிருந்து கிட்டத்தட்ட 170-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்த அந்தக் கேமராக்கள் அவற்றைப் பூமிக்கு அனுப்பின.

நிலவில் பருத்தி விதைகளா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். அந்த ஆச்சர்யத்தைச் சீனா நிரூபித்துக் காட்டியுள்ளது. அந்தக் கேமரா மூலம் அனுப்பப்பட்ட படங்கள் ஒரு பருத்தி விதை வளரத் தொடங்கியதைக் காட்டியது. ஆனால், அனுப்பப்பட்ட மற்ற தாவரங்கள் எதுவும் வளரவில்லை. நிலவில் உயிரினங்களை வாழவைக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய, நிலவில் முதன்முதலாக விவசாயம் செய்துகாட்டிய பெருமைகளை இதன்மூலம் சீனா பெற்றது. இந்தச் செய்தியைச் சீனா கொண்டாடியது சில நாள்களே. காரணம், சந்திரனில் வளர்ந்துவந்த பருத்தி விதைகள் இறந்துவிட்டன என்று சீன அரசுக்குச் சொந்தமான பத்திரிகை நிறுவனம், சின்குவா (Xinhua) 'சோதனை முடிவடைந்துவிட்டது' என்ற செய்தியை அறிவித்துவிட்டது.

Photos Courtesy: Chongqing university

முந்தைய பலகட்ட ஆய்வுகளில் தெரிந்தது போலவே மீண்டும் ஒருமுறை உயிரினங்கள் வாழத்தகுதியற்றது என்பதை நிலா நிரூபித்துவிட்டது. செயற்கை ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களை வளரச் செய்வது, நிலவில் நடத்திய உயிரினப் பரிசோதனையின் ஒருபகுதியே. நிலவில் இருக்கும் மிகக் குறைவான ஈர்ப்புவிசை, அதிகப்படியான கதிர்வீச்சு, மாறிக்கொண்டே இருக்கும் தட்பவெப்பநிலை போன்றவற்றையும் இந்தப் பரிசோதனையின் மூலமாகச் சீனா பதிவு செய்துள்ளது பாராட்டுதலுக்குரியது. 

உருளைக்கிழங்கு, கடுகு, அரபிடோப்சிஸ், பழ ஈக்களின் முட்டைகள் அனைத்தும் அங்கு விதைத்தவுடனே மடிந்துவிட்டன. ஆனால், பருத்தி விதைகள் ஆரம்பத்தில் தாக்குப்பிடிக்கவே சீனாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது. வரலாற்றின் அதிசிறந்ததோர் ஆராய்ச்சி முடிவுகள் தமக்குக் கிடைக்கப்போவதாகப் பெருமிதம் கொண்டார்கள். ஊடகவழியாகச் செய்திகள் பறக்கத் தொடங்கின. அந்தப் பெருமிதம் நீண்டநேரத்துக்கு நிலைத்திருக்க நிலா விடவில்லை. சில மணிநேரங்களிலேயே பருத்தி விதைகள் மரணித்துவிட்டன.

நடைபெற்ற சந்திர கிரகணம் நிலாவின் தட்பவெப்ப நிலையை வெகுவாகக் குறைத்துவிட்டது. நிலா தன்னைத் தானே சுற்றிக்கொள்ள முழுமையாக 29.5 நாள்கள் எடுத்துக்கொள்ளும். அதனால், பகலும் இரவும் முறையே இரண்டு வாரங்களுக்கு நிலவில் நீடித்திருக்கும். ஆகவே நிலாவில் ஒரு நாள் முடிவடையப் பூமியில் 29.5 நாள்கள் ஆக வேண்டும். அவ்வளவு நீண்ட காலகட்டத்தைத் தாவரங்களால் ஒளிச்சேர்க்கையின்றித் தாக்குப்பிடிக்க முடியாது. இந்தக் காரணங்களால், விதைகளுக்குப் போதுமான வெப்பம் கிடைக்கவில்லை. பருத்தி முளைவிட்ட பெட்டிக்குள் செயற்கையாக வெப்பத்தைக் கொடுக்கும் அமைப்பைச் செய்யாமல் விட்டதால் அந்தத் தட்பவெப்பநிலை பருத்தியைப் பாதித்தது. மாறிய தட்பவெப்பநிலையால் பருத்தியை வைத்திருந்த பெட்டியில் மைனஸ் 52 டிகிரியாகக் குறைந்துவிட்டது. பரிசோதனை தொடங்கிய 212.75 மணிநேரங்களில் முடிவடைந்துவிட்டது.

``சோதனைகள் முடிவடைந்துவிட்டன. இந்த உயிரினங்கள் தானாக அந்த மூடப்பட்ட கொள்கலனிலேயே படிப்படியாகச் சிதைந்துவிடும். இதனால் சந்திரனுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’’ எனச் சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) கூறியுள்ளது. சாங்கிங் பல்கலைக்கழகத்தில் இச்சோதனையின் முதன்மை வடிவமைப்பாளராக பணியாற்றும் பேராசிரியர் ஸி ஜீங்க்சின் (Xie Gengxin) 'Life in canister would not survive the lunar light' என்று கூறியுள்ளார். அதாவது, ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திர கிரகணத்தின்போது change 4 ஸ்லீப்பிங் மோட்-க்கு மாறியுள்ளது. இதன் காரணமாக வெப்பநிலையானது -170 டிகிரியாகக் குறைந்துள்ளது. இந்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாகப் பருத்தி விதைகள் இறந்துவிட்டன என்று கூறுகின்றனர்.

``எங்களுக்கு முன்னர் இதுபோன்ற அனுபவம் கிடையாது. மேலும், பூமியில் உள்ள மைக்ரோகிராவிட்டி மற்றும் அண்டக் கதிர்வீச்சு போன்ற சூழலைச் சந்திரனில் நாம் செயற்கையாக உருவாக்க முடியாது’’ என்கிறார் இந்தப் பரிசோதனைக்குத் தலைமை வகித்த லியூ ஹான்லாங்.

இந்த ஆய்வு தோல்வியில் முடிந்தாலும் விண்வெளி ஆராய்ச்சி குறித்து இளைஞர்களிடம் உற்சாகத்தை ஊக்குவிப்பதும், ஒளிச்சேர்க்கை போன்ற அறிவியல் விஷயங்களைப் பிரபலப்படுத்துவதுமே இந்தப் பரிசோதனையின் நோக்கம் என்கின்றனர் இதில் பங்குபெற்ற விஞ்ஞானிகள். சீனா நடத்திய நிலா விவசாயம் வெற்றியில் முடியவில்லை. இருந்தாலும், பூமியைத் தாண்டி வேறொரு கிரகத்தில், வேறொரு நிலப்பகுதியில் முளைத்த முதல் தாவரம் என்ற பெருமை பருத்திக்கே. அது முளைவிடக் காரணமான முதல் நாடு என்ற பெருமையும் சீனாவுக்கே!