Published:Updated:

``ஒரு பக்கம்தானே பாத்துருக்கீங்க... இதோ இன்னொரு பக்கம்!” - நிலவில் சீன விண்கலம்

நிலவில் தன் முதல் இரவைக் கடந்து சாதனை படைத்துள்ளது சீனாவின் சாங்கே - 4 விண்கலம். பூமியுடன் ஒப்பிடும் போது நிலவில் ஓர் இரவு என்பது கிட்டத்தட்ட 14 நாள்களுக்குச் சமம். நம் கண்ணுக்குத் தெரியும் நிலவின் பகுதியை விட மிகவும் குளிரான வெப்ப நிலையே அங்கு நிலவியதாகச் சாங்கே - 4 விண்கலம் கண்டறிந்துள்ளது.

``ஒரு பக்கம்தானே பாத்துருக்கீங்க... இதோ இன்னொரு பக்கம்!” - நிலவில் சீன விண்கலம்
``ஒரு பக்கம்தானே பாத்துருக்கீங்க... இதோ இன்னொரு பக்கம்!” - நிலவில் சீன விண்கலம்

பூமியைச் சந்திரன் சுற்றி வரும் போதிலும் சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் காண முடியும். இன்னொரு பகுதி இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாமலும், எவ்வித ஆய்வுக்கும் உட்படாமலும் இருந்து வந்தது. பல்வேறு நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்ய அனுப்பிய விண்கலங்கள் அனைத்தும் நம் கண்ணுக்குத் தெரியும் பகுதியிலேயே தரையிறங்கிப் பணிகளை மேற்கொண்டன. ஆனால் தற்போது சீனா நிலவுக்கு அனுப்பியுள்ள விண்கலம் இதுவரை நாம் காணாத நிலவின் பகுதியில் தரையிறங்கி விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

தென் சீனப் பகுதியில் ஸிஜங் ஏவுதளத்திலிருந்து சாங்கே - 4 எனும் விண்கலம் டிசம்பர் 8 அன்று நிலவின் காணாத பகுதி பற்றிய ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவப்பட்டது. 140 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் ஆறு சக்கரங்களின் உதவியுடன் இயங்கக்கூடியது. நிலவு மற்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பதற்கான தகவல்களை இந்த விண்கலத்தின் உதவியோடு கண்டறிய சீனா திட்டமிட்டுள்ளது. 

``நிலவில் நாம் காண இயலாத பகுதியில் பூமியிலிருந்து வரும் ரேடியோ அலைகளின் தாக்கம் எதுவும் இருக்காது. இந்த சாங்கே - 4 விண்கலம் நட்சத்திரங்கள் மற்றும் நெபுலா கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்த முக்கியத் தகவல்களை நமக்கு அளிக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார் திட்டத்தின் செய்தி தொடர்பாளர் யூ கோபின். 

நிலவில் தன் முதல் இரவைக் கடந்து சாதனை படைத்துள்ளது சீனாவின் சாங்கே - 4 விண்கலம். பூமியுடன் ஒப்பிடும் போது நிலவில் ஓர் இரவு என்பது கிட்டத்தட்ட 14 நாள்களுக்குச் சமம். நம் கண்ணுக்குத் தெரியும் நிலவின் பகுதியை விட மிகவும் குளிரான வெப்ப நிலையே அங்கு நிலவியதாகச் சாங்கே - 4 விண்கலம் கண்டறிந்துள்ளது. அதாவது மைனஸ் 190 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு மிகவும் குளிரான வெப்பநிலை நிலவியதாகக் கண்டறிந்துள்ளது. 

இந்த நீண்ட இரவுப் பொழுதில் சீனாவின் விண்கலம் சூரிய ஆற்றல் கிடைக்காத காரணத்தினால் 'செயலற்ற' நிலையிலேயே வைக்கப்பட்டிருந்ததாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரிய ஒளி கிடைத்த உடனேயே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து இரவுப்பொழுதில் வெப்ப நிலை குறித்த விவரங்களை உடனடியாக பூமிக்கு அனுப்பியிருக்கிறது சாங்கே - 4.

சந்திரனின் நிலப்பரப்பு அதிகமான குழிகளுடன் தனித்துவமாகத் திகழ்கிறது. அங்கு எரிமலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் மிகக் குறைவாகவே நமக்குக் கிடைத்துள்ளன. நாம் காணாத பகுதியில் ரேடியோ அலைகள் உதவியோடு விண்கலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் தொடர்பு கொள்வது மிகக் கடினம். ஆனால் இந்தத் தடைகளை எல்லாம் சீனாவின் சாங்கே - 4 விண்கலம் தகர்த்திருக்கிறது.

ஜனவரி 3 அன்று நாம் காணாத நிலவின் முதல் புகைப்படத்தை உயர்தரத்துடன் எடுத்து பூமிக்கு அனுப்பியது சாங்கே - 4 விண்கலம்.  தாமதமாகவே விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி தற்பொழுது புதிய உச்சம் தொட்டிருக்கிறது சீனா. 

இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த ஆண்டும் ரஷ்யா மற்றும் ஜப்பான் 2020-ம் ஆண்டிலும் நிலவின் நாம் காண இயலாத பகுதியில் விண்கலங்களை ஏவத் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா எந்த விதமான விண்கலத் தயாரிப்புப் பணியிலும் தற்போது ஈடுபடவில்லை. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இனி விண்கலன்களைச் செலுத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.