Published:Updated:

இது வரலாற்று நிகழ்வு!  -  விண்வெளி நடைக்குத்  தயாராகும் அமெரிக்கப் பெண்கள்

அஸ்வினி.சி
இது வரலாற்று நிகழ்வு!  -  விண்வெளி நடைக்குத்  தயாராகும் அமெரிக்கப் பெண்கள்
இது வரலாற்று நிகழ்வு!  -  விண்வெளி நடைக்குத்  தயாராகும் அமெரிக்கப் பெண்கள்

நாசாவின்  முதல்  பெண்களுக்கான பிரத்யேக  ஸ்பேஸ் வாக் (Space walk)  மார்ச் 29-ம் தேதி  நடைபெறுகிறது.

ஸ்பேஸ் வாக், அதாவது `விண்வெளி நடை’ என்றால் என்ன தெரியுமா... புவியின் மேற்பரப்பிலிருந்து  சுமார்  100 கி.மீ தொலைவில்  உள்ள வெற்றிடத்தைத்தான் விண்வெளி (ஸ்பேஸ்) என்கிறோம்.  விண்வெளி ஆய்வு  நிலையத்துக்கு  வெளியே  உள்ள  இடங்களில்,  விண்வெளி வீரர் செயல்படுவதே விண்வெளி நடையாகக் கருதப்படுகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வெளியே புதிய பாகங்களை இணைக்கவோ,  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவோ,  விண்வெளி  வீரர்களால்  விண்வெளி   நடை மேற்கொள்ளப்படும்.  இதற்குக்  கடுமையான  பயிற்சி  தேவை.

இப்போது, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாசா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. விண்வெளி  வரலாற்றில்  முதல்  முறையாகப்  பெண்கள்  மட்டுமே  பங்குபெறும்  விண்வெளி  நடைக்குத்   திட்டமிடப்பட்டுள்ளதாக,  நாசா அறிவித்துள்ளது.   இதற்காக,  இரண்டு   விண்வெளி  வீராங்கனைகள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அன்னி மெக்ளைன் (Anne McClain)  மற்றும்  கிறிஸ்டினா கோச்  (Christina Koch)   ஆகியோர்  மார்ச் 29-ம்  தேதி  7  மணி  நேர extravehicular  பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  இவர்கள்  இருவரும்  நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனைகள்.  இவர்களை  கனடா  விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி  கிறிஸ்டன்  பெசிகோல்  ஆகியோர்  பூமியிலிருந்து  வழிநடத்துவார்கள்.

மெக்ளைன், டிசம்பர் 2018 முதல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கிறார். கிறிஸ்டினா  கோச்,  ரோச்கோஸ்மோஸ்  சோயுஸ், விண்கலம் மூலம்  மார்ச் 14 -ம் தேதி, கோச் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைவார். இருவருக்குமே இது முதல் விண்வெளி நடையாகும். இதற்கு முன்னரும் பெண்கள் விண்வெளி நடை மேற்கொண்டுள்ளனர்.  ஆனால்,  இரு பெண்கள் இணைந்து ஸ்பேக் வாக் மேற்கொள்வது இதுவே முதல்முறை.  மேலும், இதை வரலாற்று நிகழ்வு என அமெரிக்கர்கள் கொண்டாடி வருகின்றனர்.