Published:Updated:

``இனி ரஷ்யா வேண்டாம்... நாங்க இருக்கோம்!’’ - அமெரிக்காவின் புதிய நம்பிக்கை ஸ்பேஸ் எக்ஸ்

``இனி ரஷ்யா வேண்டாம்... நாங்க இருக்கோம்!’’ - அமெரிக்காவின் புதிய  நம்பிக்கை ஸ்பேஸ் எக்ஸ்
``இனி ரஷ்யா வேண்டாம்... நாங்க இருக்கோம்!’’ - அமெரிக்காவின் புதிய நம்பிக்கை ஸ்பேஸ் எக்ஸ்

சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த மண்ணிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தயாராகியிருக்கிறது நாசா. இந்த வெற்றிதான் அதற்கான முதல் படி.

அமெரிக்காவின் விண்வெளிப் பயண வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் டிராகன் கேப்ஸ்யூல் அதன் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்ததில் பல நாடுகளின் கூட்டு முயற்சி இருந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு என்பது கொஞ்சம் அதிகம்தான். அங்கே பராமரிப்பு, ஆய்வு, கட்டமைப்பு எனப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கும். அதற்காகச் சிலர் அங்கே குறிப்பிட்ட நாள் வரை தங்கியிருக்க வேண்டியிருக்கும். அதுவும் நாசா அடிக்கடி விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும்.

அந்த வேலை நாசாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு வரை எளிதான ஒன்றாகத்தான் இருந்தது. உலகில் மேம்பட்ட விண்வெளி ஓடங்களில் ஒன்றான ஸ்பேஸ் ஷட்டில் அவர்களிடம் இருக்கும் வரை. பல்வேறு காரணங்களால் அதற்குக் கடந்த 2011-ம் ஆண்டு நிரந்தரமாக ஓய்வெடுக்க அனுப்பி வைத்தது நாசா. அந்தச் சமயத்தில் உலகில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திறன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றிடம் மட்டுமே இருந்தன. அமெரிக்கா அதன் ஸ்பேஸ் ஷட்டிலுக்கு விடை கொடுத்துவிட்டதால் அந்த எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது. நாசாவுக்கு வேறு வழியே இல்லை. இவர்களில் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான். ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டின் நம்பகத்தன்மை அதிகம் என்பதால் அதைத் தேர்வு செய்தது நாசா. அதன் பின்னர் நாசாவின் விண்வெளி வீரர்கள் ரஷ்யாவுக்குப் பயணம் செய்து சோயுஸ் ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஸ்பேஸ் ஷட்டில் ஓய்வு பெற்ற 2011-ம் ஆண்டுக்குப் பிறகு நாசாவின் விண்வெளி வீரர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து விண்வெளிக்குச் செல்லவே இல்லை. அது போக சோயுஸ் ராக்கெட்டைப் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்களும் ஏராளமாக இருந்தன. எனவே அதற்கான மாற்று வழி ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தது நாசா. அப்போதுதான் அதன் கண்ணில் பட்டது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

விண்வெளிப் பயணத்தில் புதிய அடியெடுத்து வைக்கும் ஸ்பேஸ் எக்ஸ்

விண்வெளிக்குச் செயற்கைக்கோள் ஆகியவற்றை அனுப்புவதைவிட மனிதர்களை அனுப்புவது என்பது பல மடங்கு கடினமானது. மேலும்,  சிக்கல் நிறைந்தது. செயற்கைக்கோள்களை அனுப்பும்போது மேலே அனுப்புவதற்கு மட்டும் ராக்கெட்டைத் தயார் செய்தால் போதுமானது. ஆனால், மனிதர்களை அனுப்பினால் அவர்களை மீண்டும் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். எனவே, அதற்காக மிகப் பாதுகாப்பாக அவர்கள் பயணிக்கும் கேப்ஸ்யூலை வடிவமைப்பது அவசியம். அப்படி ஒரு கேப்ஸ்யூலை பல வருடங்களாகவே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது ஸ்பேஸ் எக்ஸ். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் தகுந்த இடத்தைத் தேடிக்கொண்டிருந்த நாசாவுக்கு இது சரியான இடமாக இருக்கும் எனத் தோன்றியது. எனவே, நாசா ஸ்பேஸ் எக்ஸ் உடன் கைகோக்க முன் வந்தது. இந்தக் கேப்ஸ்யூல் மட்டும் சரியாக வேலை செய்துவிட்டால், அதன் பின்னர் நாசா ரஷ்யாவை தேடிச் செல்லத் தேவையிருக்காது.

டிராகன் 2 (Dragon 2) என்று பெயரிடப்பட்ட இந்த கேப்ஸ்யூல் பல கட்டங்களாக மேம்படுத்தப்பட்ட பின்னர், அது விண்ணில் பறக்கத் தயாராக இருந்தது. இது கடந்த 2-ம் தேதி ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்கள் பயணிப்பார்கள் என்பதால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனடியாக ராக்கெட்டில் இருந்து தனியாகப் பிரிந்துவிடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக எந்தவித சிக்கலும் இன்றி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சென்று இணைந்தது கேப்ஸ்யூல். உள்ளே ஒரு மாதிரி மனித பொம்மையையும் வைத்து அனுப்பியிருந்தார்கள். விண்ணில் செல்லும்போதும் கீழே வரும்போதும் உடலில் எப்படிப்பட்ட தாக்கங்கள் இருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக மனித பொம்மையில் சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், இதில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்காகச் சரக்கு பொருள்களும் இதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஐந்து நாளுக்குப் பிறகு, பூமியை நோக்கித் திரும்பியது டிராகன் 2 கேப்ஸ்யூல். கடந்த வெள்ளிக்கிழமையன்று பத்திரமாகக் கடலில் வந்து இறங்கியது.

இதன் மூலமாக விண்வெளிப் பயணத்தில் புதிய அடியெடுத்து வைத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதால் அடுத்ததாக இதில் மனிதர்கள் பயணிக்க உள்ளார்கள். இந்த கேப்ஸ்யூலில் அதிகபட்சமாக ஏழு விண்வெளி வீரர்கள் பயணிக்க முடியும். இதில் முதலில் பயணிக்கவிருக்கும் விண்வெளி வீரர்களையும் தேர்ந்தெடுத்துவிட்டது நாசா. அடுத்த ஜூன் மாதம் மீண்டும் ஒரு முறை இந்த கேப்ஸ்யூல் பரிசோதனைக்காக விண்ணில் ஏவப்படும். அதிலும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றால் அவர்கள் இருவரையும் இதன் மூலமாக ஜூலை மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு