Published:Updated:

``புராசஸ் செய்ய மட்டும் 2 ஆண்டுகள்!” - இது பிளாக் ஹோல் புகைப்படம் உருவான கதை

``புராசஸ் செய்ய மட்டும் 2 ஆண்டுகள்!” - இது பிளாக் ஹோல் புகைப்படம் உருவான கதை
News
``புராசஸ் செய்ய மட்டும் 2 ஆண்டுகள்!” - இது பிளாக் ஹோல் புகைப்படம் உருவான கதை

``புராசஸ் செய்ய மட்டும் 2 ஆண்டுகள்!” - இது பிளாக் ஹோல் புகைப்படம் உருவான கதை

இந்த வாரம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்ட வாரமாக அது வரலாற்றில் இடம்பெறும். கண்டிப்பாக அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அந்தப் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். சொல்லப்போனால் இது உலக அளவில் மீம் மேட்டரியல் ஆகவும் மாறியிருக்கிறது இந்தப் புகைப்படம். காரணம் சற்றே தெளிவில்லாமல் இருப்பது போன்று இருந்தது அந்தப் புகைப்படம். இன்டெர்ஸ்டெல்லார் போன்ற ஹாலிவுட் படங்களையும், கணினி மூலம் வரையப்பட்ட சித்திரிப்புகளையும் பார்த்திருந்த மக்கள் இதற்குத்தானா இப்படிக் காத்திருந்தோம் எனச் சலிப்படைந்தனர். ஆனால், இதைச் சாதிப்பதற்கே அத்தனை உழைப்பும் தொழில்நுட்பமும் தேவைப்பட்டிருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.


 

இன்டெர்ஸ்டெல்லார் படத்தில் வரும் பிளாக் ஹோல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் பற்றித் தெரிந்துகொள்ள பின்வரும் கட்டுரையைப் படிக்கவும் 

இந்தப் புகைப்படம் எடுக்கும் ஐடியா 1993-ல் நெதர்லேண்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஹெயினோ ஃபால்க்கேவுக்குத் தோன்றியது. அப்போது யாருக்கும் இது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை வரவில்லை. பிளாக் ஹோல்லின் ஈவென்ட் ஹோரைசனில்  புவி ஈர்ப்பு விசை என்பது மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்துமே உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும். அதனால் அங்கு ஒளிகூட இருக்காது. ஆனால், இந்த இருண்ட பிளாக் ஹோல்களைச் சுற்றி நடக்கும் ஒரு வகையான ரேடியோ உமிழ்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது. அதைப் பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் காணமுடியும் என அவர் கண்டறிந்தார். 20 வருடமாக இதை அனைவருக்கும் விளக்கி பெரும் போராட்டத்துக்குப் பிறகு European Research Council-ஐ தனது திட்டத்துக்கு நிதி ஒதுக்கச் செய்தார். பின்பு நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் இந்தத் திட்டத்துக்கு நிதி அளித்தனர். இந்தத் திட்டம்தான் 'ஈவென்ட் ஹோரைசன் டெலஸ்கோப்' திட்டம். இவர்களின் முதலீட்டின் விளைவுதான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் என்னும் ஃபால்க்கே, இது குறித்துப் பேசுகையில், "இது எனக்கு ஒரு நீண்ட பயணம். எனது கண்களால் இதைக் காண வேண்டும், இது உண்மைதானா எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. அந்த மிஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது" என்றார்.

அது என்ன ஈவென்ட் ஹோரைசன் டெலஸ்கோப் திட்டம்?

பிளாக் ஹோல் பற்றிய ஃபால்க்கேவின் கூற்று சரிதான் என்றாலும், பிளாக் ஹோல்லை படம் பிடிக்கும் அளவுக்கு எந்த ஒரு தொலைநோக்கியும் திறன் வாய்ந்தது கிடையாது. நமது சூரியக்குடும்பத்தைவிட அளவில் பெரியதாக இருந்தாலும் இவர்கள் புகைப்படம் எடுக்க வேண்டிய M87 கேலக்ஸியின் பிளாக்ஹோல் 5 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. அதாவது, இங்கிருந்து நிலவின் பரப்பில் இருக்கும் ஒரு ஆரஞ்சின் தோலைப் பார்ப்பது போன்றது இது. சிறிய பொருளை பார்க்க வேண்டும் என்றால் தொலைநோக்கி பெரிதாக இருக்க வேண்டும், அதுதான் லாஜிக். இதற்குக் கிட்டத்தட்ட பூமியின் அளவில் ஒரு தொலைநோக்கி தேவைப்பட்டது. இதனால் ஒரு புதிய முயற்சியைச் செய்துபார்க்கலாம் என முடிவெடுத்தது இந்தக் குழு. இந்தப் புதிய முயற்சியைப் பேராசிரியர் ஷெப்பர்ட் டோலேமேன் முன்னெடுத்தார். அந்த முயற்சி என்பது பூமியில் 8 தொலைநோக்கிகளை ஒன்றாக ஒரு நெட்ஒர்க்கில் இணைத்து ஒரு பெரிய மெய்நிகர் தொலைநோக்கியை உருவாக்குவதுதான். அந்த மெய்நிகர் தொலைநோக்கி என்பது எதிர்பார்த்த பூமியின் அளவு இருக்கும்.

இதன்மூலம் பிளாக் ஹோல்லை புகைப்படம் எடுக்குமளவுக்குத் திறன் வாய்ந்ததாக இருக்கும் அந்த மெய்நிகர் தொலைநோக்கி. ஆனால், இவை அனைத்தும் ஸ்டெடியாக, ஒரே சிங்க்கில் இருக்க வேண்டும். இந்த சவாலான பணிக்காக அட்டாமிக் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டது. 10 கோடி வருடங்களுக்கு ஒருமுறைதான் ஒரு விநாடியை இழக்கும் இது. இதைப் பற்றி பேசிய டோலேமேன் "M87-லிருந்து ஒளி இங்கு வந்தடைய அந்த கேலக்ஸியில் 60,000 ஆண்டுகளும், இடைப்பட்ட தூரத்தில் 5 கோடி ஆண்டுகளும் பயணம் செய்ய வேண்டும். ஆனால், பிரச்னை அதில் இல்லை நமது வாயுமண்டலத்துக்குள் அது வருவதுதான் சிக்கலே. இந்த ஒளி போட்டான்கள் உள்நுழைவதற்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது இங்கு இருக்கும் நீர் ஆவிதான்" என்றார். இதனால் இந்தத் தொலைநோக்கிகள் அனைத்தும் உலர்ந்த காற்றுவீசும் பகுதிகளிலே அமைக்கப்பட்டன. ஹவாய், மெக்சிகோ ஆகிய இடங்களில் உள்ள எரிமலைப் பகுதி, அரிசோனா மலை, அட்டகாமா பாலைவனம், அன்டார்டிகா என இவை நிறுவப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த தொலைநோக்கிகளை M87 கேலக்ஸியின் மையத்தை நோக்கி ஸ்கேன் செய்தனர். இது 2017-ல் 10 நாள்களுக்கும் மேல் நடந்தது. இறுதியாக இந்தப் புகைப்படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. 

சித்திரிப்பு காட்சி

டேட்டா சிக்கல்!

இந்தத் தொலைநோக்கிகளிலிருந்து பெறப்பட்ட டேட்டா என்பது பெட்டபைட்களில் இருந்தது. இப்படி இருந்ததால் இந்த டேட்டாவை இன்டர்நெட் மூலம் அனுப்புவதென்பது சாத்தியமில்லாத ஒன்றானது. இதனால் 8 தொலைநோக்கிகளில் இருந்தும் பெறப்பட்ட டேட்டாக்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள் அனைத்தும் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்குச் சொந்தமான Haystack என்ற விண்வெளி ஆய்வகத்துக்குப் போக்குவரத்து வசதிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேதான் அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடந்து வந்தது. இந்தப் பணிக்கு மட்டும் இந்தக் குழுவுக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டன. அங்கே அரை டன்னுக்கும் மேல் ஹார்ட் டிரைவ்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி 5 பீட்டாபைட் அளவுக்கு மேல் இருந்த டேட்டாக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இறுதியான படத்தைக் கொடுத்தது மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் PhD மாணவரான கேத்தி போமனின் அல்காரிதம்தான். CHIRP என்று பெயரிடப்பட்ட இதன் மூலமாகவே உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் கருந்துளையின் புகைப்படம். இவர் 2017-ம் ஆண்டே, இதை எப்படி சாத்தியப்படுத்தலாம் என்று TED டாக் நிகழ்வு ஒன்றில் பேசியிருந்தார். அப்போதே இன்னும் இரண்டு வருடங்களில் முதல் பிளாக் ஹோல் படத்தைப் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார் அவர்.

ஏன் M87?

எல்லாப் பெரிய கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக்ஹோல் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி நம் பால்வழி கேலக்ஸியின் நடுவிலும் Sagittarius A* என்னும் பிளாக்ஹோல் இருக்கிறது. அருகிலிருந்தும் இது படமாக்கப்படாததின் காரணம் இது சற்றே அமைதியான பிளாக் ஹோல். சுற்றியிருக்கும் வாயுக்கள் மற்றும் துகள்கள் இருக்கும் பிளாஸ்மா பகுதிகள் வெளியிடும் ஒளி குறைவு. அதுவே M87-ன் மையத்தில் இருக்கும் பிளாக்ஹோல் மிகவும் பெரியது. அருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து சூப்பர் சார்ஜ்டு துகள்களை வெளியே உமிழ்கிறது அது. அந்தத் துகள்கள் சில நேரங்களில் ஒளியின் வேகத்தை எட்டி 5000 ஒளி ஆண்டுகள் வரை பயணிக்கின்றன. EHT குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த பிளாக் ஹோல்லை ஒரு 'மான்ஸ்டர்' என்று குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட நமது சூரியக்குடும்பத்தின் அளவை அது இருப்பதால்தான் இது சாத்தியமானது. ஆனால், நமது Sagittarius A* பிளாக் ஹோல்லையும் படம்பிடிக்கும் முயற்சியில் இருக்கும் இந்தக் குழு இதற்காக இன்னும் சில தொலைநோக்கிகளை இந்த நெட்ஒர்க்கில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 

தப்பாத ஐன்ஸ்டீன் கணக்கு 

1900-களில் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இப்போது இருக்கும் எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் வெறும் கணிதத்தை மட்டும் வைத்து ஒரு கோட்பாட்டை நம்மிடம் விட்டுச் சென்றார். அவரின் அந்தப்  புவி ஈர்ப்பு விசைக் கோட்பாடுகளின்படி ஹட்டன் அதற்குப் பின் வந்த பிளாக் ஹோல் தொடர்பான அனைத்துக் கண்டுபிடிப்புகளும் சித்திரிப்புகளும் அமைந்தன. ஆனால், 100 வருடங்களாக இதற்கு ஆதாரம் என்று ஒன்று கிடைக்கவே இல்லை. இந்தப் புகைப்படம் என்பது ஐன்ஸ்டீன் சொன்னது சரிதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

பிளாக் ஹோல் தொடர்பான ஆராய்ச்சிகளில் மேலும் பல முன்னேற்றங்கள் இதனால் கிடைக்கும் என நம்புகின்றனர் விண்வெளி ஆராய்ச்சிகள். ஒரு நாள் நமது அண்டம் எப்படி உருவானது என்ற கேள்விக்கான விடையும் இதன்மூலமாகத் தொடரப்படும் ஆராய்ச்சிகளில் கிடைக்கலாம் என்கின்றனர். நமது அண்டத்தில் 200 பில்லியன் முதல் 2 டிரில்லியன் வரையிலான கேலக்ஸிகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது சரியா, தவறா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நமது விண்வெளி ஆராய்ச்சிகளால் மொத்த அண்டத்தில் இதுவரை ஒரு சிறிய புள்ளியைத்தான் தான் நாம் தொட்டிருப்போம். அது இன்னும் பெரிதாக இந்த ஆராய்ச்சிகள் உதவும்.