Published:Updated:

`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்! #ZeroShadowDay

`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்! #ZeroShadowDay
`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்! #ZeroShadowDay

எல்லா நாளும் சூரியன் கிழக்கே உதித்து நண்பகல் பொழுதில் தலைக்கு மேலே வந்து மாலையில் மேற்கே மறையும் என்பது பொது கருத்து . ஆனால் வியப்பான விஷயம் என்னவென்றால் ஆண்டில் இரண்டே இரண்டு நாள்களில்தான் சரியாக சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும். மற்ற நாட்களில் எல்லாம் ஒன்று தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில்தான் சூரியன் உதிக்கும்.

அதேபோல் ஒவ்வொரு நாளும் சூரியன் சரியாக நமது தலைக்கு மேலே நண்பகலில் வருவதில்லை. அதனால்தான் நண்பகலிலும் நமது நிழலை நாம் காண்கிறோம். ஒரு ஆண்டில் சரியாக இரண்டு நாள்கள் மட்டும் சூரியன் சரியாக நமது தலைக்கு மேலே வந்து நிழலே இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது. பூமியின் கடக/மகர ரேகைகளுக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் இந்நிகழ்வு நடக்கும். இந்த வானியல் நிகழ்வைக் கொண்டுதான் ஒரு காலத்தில் சரியாக ஆண்டின் கால இடைவெளியை அளந்தார்கள். பருவகாலம் மாறுவதைக் கணித்தார்கள். செங்குத்தாக நட்டுவைத்த கழிகளை கொண்டு ஒரு நாளின் பொழுதை அளந்தார்கள்.

அதேநிலை கொண்டு சிலர் பூமியின் ஆரத்தை (radius) அளந்தார்கள். இப்படி அறிவியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நாளைக் கொண்டாடும் விதமாக இன்று (21.04.2019) புதுவை அறிவியல் இயக்கமும் புதுவை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து புதுவை பெத்தி செமினார் பள்ளியில் மக்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்க காலை 9 மணியிலிருந்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். நிகழ்வில் ஒவ்வொரு 5 பேர்கள் கொண்ட குழுவினருக்கும் ஒரு நீண்ட ஆணி பதித்த அட்டையும் சார்ட் தாளும் தரப்பட்டது.

அதில் 11 மணி முதல் மக்கள் நிழலின் உயரத்தைக் குறித்தனர். இன்றைய நண்பகல் ஆன 12:14 மணிக்கு நிழலில்லாமல் ஆனது. அப்போது மக்கள் சிறு குழுக்களாகக் கைகோர்த்து நின்று உடல் நிழல் மறைந்து இணைந்த கைகளின் நிழல் மட்டும் சிறு கோடாக ஆவது கண்டு வியந்தனர். பல்வேறு சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் நிழல்கள் மூலமும் Zero shadow day-வை பற்றித் தெரிந்துகொண்டனர். இந்நிகழ்வில் பூமியின் விட்டம், பூமியின் சுற்றளவு, நமது அட்சரேகை, சூரியனின் சாய்வு ரேகை 11.9 டிகிரி, சூரியன் சஞ்சரிக்கும் உயரம் (Zenith), நமது நண்பகல் (12:14 pm) சூரிய, பூமி சுழற்சி, பருவகாலங்கள் உருவாக்கம் பற்றி செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டது. 

இதைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்று நோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும் மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும். நம்முடைய அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். அதே போல் சூரியனின் உயரத்தையும் கணக்கிடலாம் . நமது பூமி 23.45 டிகிரி சாய்ந்து சுற்றுவதால்தான் நமக்கு கோடைக்காலம், குளிர்காலம் போன்ற பருவ காலம் உருவாகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். தினமும் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைவதுமில்லை. பூமி மேற்கிலிருந்து கிழக்காக தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவதால் தான் நமக்கு சூரியன் கிழக்கே உதிப்பது போல் தெரிகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். வானியல் சம்பந்தமாக உள்ள மூட நம்பிக்கைகள் நீங்க இந்த நிகழ்வு பயன்படும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வைக் காண எந்தவித அறிவியல் உபகரணமும் தேவை இல்லை.

நமது ஊரில் எங்கு எப்போது இந்த நிகழ்வினை காணலாம்?

அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் இந்த நிகழ்வு நிகழ்வதில்லை. நமது அட்சரேகையும், வான் கோளத்தின் சூரியன் சாய ரேகையும் (declination) சமமாக இருக்கும் போது நிழலில்லா தினம் வரும். புதுவையை பொறுத்தமட்டில் வடக்கு நோக்கிய நகர்வில் ஏப்ரல் 21ம் தேதியும் தெற்கு நோக்கிய நகர்வில் ஆகஸ்ட் 21-ம் தேதியும் நிழல் இல்லாத தினம் ஏற்படும்.

இதனை பெத்தி செமினார் பள்ளி முதல்வர் அருட்தந்தை R.பாஸ்கல்ராஜ் 10 மணிக்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை பெத்தி செமினார் பள்ளி விரிவுரையாளர்  P.A.வின்சென்ட் ராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹேமாவதி , துணைத் தலைவர் முனைவர் இரா மதிவாணன், பொது செயலர் ப.ரவிச்சந்திரன், பொருளாளர் வீரா ரமேஷ், செயலர் அறிவியல் பிரசாரம் முனைவர் N.அருண் துணையுடன் கருத்துக்கள செயல்பாடுகள் ஐயமற அறிந்து செய்து பார்க்க ஆவண செய்யப்பட்டது. மீண்டும் இவ்வாண்டு ஆகஸ்ட் 21 புதன் அன்று அனைத்து பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இந்நிகழ்வினை கொண்டாடி பூமி சூரியன் பற்றி அறிய ஏற்பாடு செய்துள்ளோம் என்று புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான அ.ஹேமாவதி அவர்கள் கூறினார்.

 Zero shadow Day பற்றி மேலும் அறிந்து கொள்ள : http://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/

அடுத்த கட்டுரைக்கு