Published:Updated:

`அமெரிக்கா, ரஷ்யாவாலேயே முடியாததை நாம்தாம் கண்டுபிடித்தோம்!' - மயில்சாமி அண்ணாதுரை

`அமெரிக்கா, ரஷ்யாவாலேயே முடியாததை நாம்தாம் கண்டுபிடித்தோம்!' - மயில்சாமி அண்ணாதுரை
News
`அமெரிக்கா, ரஷ்யாவாலேயே முடியாததை நாம்தாம் கண்டுபிடித்தோம்!' - மயில்சாமி அண்ணாதுரை

"நிலவினுடைய கிட்டத்தட்ட முப்பரிமாண படமும் அதில் எங்கெங்கு வளங்கள் இருக்கின்றன என்பதையும் நம்மால் சரியாக சொல்ல முடிந்தது. அதனால இப்போ திரும்ப எல்லா நாடுகளும் நிலவுக்கு போகணும்ங்கிற முயற்சியில் இறங்கியிருக்காங்க."

ந்திராயன் 2-க்கான பணிகள் முழுவேகம்பெற்று நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சமயத்தில் சந்திராயன் 1-ன் அறிவியல் பங்களிப்புகள் குறித்தும், சந்திராயன் 2-வின் பயன்கள் குறித்தும் அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசினார் இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநரும், தமிழ்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை. அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய விஷயங்கள் இங்கே.

“தலைமுறை தலைமுறையா பார்த்தீங்கன்னா மனிதனின் வளர்ச்சிக்குக் காரணம் கல்வி. கல்வியைத் தாண்டி அதன் மூலமாக அவர்கள் கற்ற அறிவியலின் அடிப்படையிலேயேதான் அவர்கள் நிலை படிப்படியாய் வளர்ந்திருக்கிறது. மனிதனின் வளர்ச்சி எங்கேயோ இருந்து இந்த அளவிற்கு வந்திருக்குனா அதற்குக் காரணம் அறிவியல். ஒரு தலைமுறை கற்ற அறிவியலை கல்வி மூலமாக அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததனால் படிப்படியாக வளர்ந்ததுதான் மானிட வளர்ச்சி. அந்த வகையிலேயே மாணவர்கள் சிறு வயதிலேயே பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அறிவியல்பூர்வமாக சிந்திக்கவும், அறிவியல்பூர்வமாக அவர்கள் ஏதாவது செய்யவும் அவர்களின் ஆர்வத்தை தூண்டவேண்டும்.

அதற்கு ஆசிரியர்களின் பங்கு மிகச்சிறப்பாக இருக்கணும்ன்னு நினைக்கிறேன். அது இதுவரை சிறப்பாகவே இருந்திருக்கு.
என்னுடைய வளர்ச்சியில் என்னுடைய ஆசிரியர் பங்கு எந்த அளவிற்கு இருக்கோ, அதே மாதிரி வருங்காலத்தில் இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் மாணவர்கள் அறிவியலில் சிறக்கவேண்டுமானால் அது பள்ளிக்கூடத்திலிருந்தே வரணும். மாணவர்கள் எப்படி ஒவ்வொரு வகுப்பைத் தாண்டும்பொழுதும் அவர்கள் கத்துக்க வேண்டியது இருக்கோ, அதுபோல அவர்கள் பணியில் சிறக்கவேண்டும் என்றாலும் அவர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல கத்துகிட்டு மேல போகவேண்டியது இருக்கு.

`அமெரிக்கா, ரஷ்யாவாலேயே முடியாததை நாம்தாம் கண்டுபிடித்தோம்!' - மயில்சாமி அண்ணாதுரை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு காலத்தில குறுக்கெழுத்தும், தட்டச்சும் தெரிஞ்சா போதும். ஆனால், இப்போ கம்ப்யூட்டர் தெரிஞ்சிருக்கணும். எல்லாத் துறையிலும் வளர்ச்சி என்பது கண்டிப்பாக தேவை. ஒரு பள்ளிக்கூடம் கட்டும்போது அதன் அடிக்கல் சரியாக இருந்தாதான் மேல மேல கொண்டு போகமுடியும். அந்த மாதிரி பள்ளிக்கல்வி இருந்ததுனா நல்லா இருக்கும். அங்கு தூண்களாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள். அதில் பயனடைபவர்கள் மாணவர்கள். அந்தத் தொடரோட்டம் சரியாக போய்கிட்டே இருக்கும்; போகவேண்டும். அதற்கான பணிகளை அரசு ஒருபுறம் செய்துகொண்டிருந்தாலும் கல்வி நிறுவன தாளாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்... என அனைவரும் சேர்ந்து செய்யவேண்டும். ஒரு தொடர் ஓட்டம்தான் இது. ‘ஊர் கூடி தேர் இழுத்தால்தான் தேர் போகும். ஒருத்தனா இழுக்க முடியாது.’ அப்படி இருக்கணும் என்பதற்காகப் பல வகையில் பல முயற்சிகள் பண்றோம். அந்த வகையில் இன்று இந்த நிகழ்ச்சி.

அறுபது, எழுபதுகளில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவிற்குப் போனார்கள். அவர்கள் நிலவில் இறங்கிவந்தாலும்கூட, நிலவில் ஏதும் இல்லை அப்படிங்குற முடிவோட அடுத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுட்டு இருந்தாங்க. ஆனால் 2008-ல நாம் அனுப்பின சந்திராயன்-1 மற்றும் அதில் இருக்கக்கூடிய 11 சாதனங்கள் உதவியை வைத்து பார்த்தபோது சந்திரனில் நீர் இருக்கிறது என நம்மால் சரியாக சொல்லமுடிந்தது. அவர்களாலேயே முடியாததை நாம் கண்டுபிடித்து சொன்னோம்.

அதுமட்டுமல்லாது, நிலவினுடைய கிட்டத்தட்ட முப்பரிமாண படமும் அதில் எங்கெங்கு வளங்கள் இருக்கின்றன என்பதையும் நம்மால் சரியாக சொல்ல முடிந்தது. அதனால இப்போ திரும்ப எல்லா நாடுகளும் நிலவுக்கு போகணும்ங்கிற முயற்சியில் இறங்கியிருக்காங்க. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மீண்டும் போகணும்னு இருக்காங்க. சந்திராயன்-1 தொழில்நுட்பம் மூலமாக 100 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தோம். சின்ன கலன் மட்டும் பிரிந்து சென்று நிலவில் மோதி அதனுடைய பணியை முடித்தது. இந்த முறை சந்திராயன் 2-வில் அடுத்தகட்டமாக நிலவிற்கு போயிட்டு, மெதுவாக ஒரு ஆறுசக்கர வண்டியை அங்க இறக்குறோம். நிலவில் இறங்கிய அந்த வண்டிக்கலன் மூலமாக, சக்திவாய்ந்த ஒரு கண்ணாடியை பயன்படுத்தி அதில் ஒளியைப் பாய்ச்சி, அது திரும்பி வருவதை வைத்து நிலவின் தூரத்தை கணிக்கப் போகிறோம்.

அதாவது, நிலவு நம்ம பூமியை விட்டு மெதுவாக தள்ளிப்போயிட்டே இருக்குன்னு ஒரு வகையான செய்திகள் உலவிட்டு இருக்கு. அதை நாம சரியானு பார்க்கணும். அப்படின்னா அந்த கலனில் பயன்படுத்தப்படும் மெட்ரோ ரிஃப்லக்டர் (metro reflecter) எனக்கூடிய கண்ணாடி மாதிரியான அதில், நாம் ஒளியை அனுப்பி எதிரொலிக்கச் செய்து பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் நிலவு எங்க போய்கிட்டிருக்கு என்பதையும், பூமியை விட்டு நிலவு தள்ளிப்போகுதா என்பதையும் சரியாக பார்க்கமுடியும்.

`அமெரிக்கா, ரஷ்யாவாலேயே முடியாததை நாம்தாம் கண்டுபிடித்தோம்!' - மயில்சாமி அண்ணாதுரை

முன்பு நாம் 100 கிலோமீட்டர் தொலைவிலிருந்தே நிலவில் நீர் இருக்கா என்பதைப் பார்த்தது மாதிரி, இப்போது நிலவிலேயே விண்கலனை இறக்கி அங்குள்ள கற்களில் ஈரப்பதம் இருக்கா என்பதைப் பார்க்கமுடியும். அறிவியல்ரீதியாக நாம 100 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்த்தது உண்மையானதா எனத் தெளிவுபடுத்தவும் முடியும். நாளை மனிதன் சென்று நிலவில் இறங்கினாலும் தொழில்நுட்பரீதியாக இதேபோலத்தான் இறங்குவான். அதற்கான தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் கத்துக்க போறோம். 

இஸ்ரோ உலக விண்வெளி ஆராய்ச்சியில் எத்தகு இடத்தில் இருக்கிறது?

ஒரு விளையாட்டுத் துறையில் ஒலிம்பிக்கில் இன்று ஒருவர், நாளை மற்றொருவர் முதலிடம் வருவார்கள். அதுபோல விண்வெளி ஆராய்ச்சி என்பது அதன்வகைகள், பயன்களைப் பொறுத்து இருக்கு. செயற்கைக்கோளை வைத்துக்கொண்டு தனிமனிதனுக்கும், விவசாயத்துக்கும், மீனவர்களுக்குமான பணிகள் எனும் பார்வையில் பார்த்தால், கண்டிப்பாக இந்தியா முதல் இடத்தில் இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், மற்ற துறைகள், அதாவது பெரிய பெரிய செயற்கைக்கோள்கள் அனுப்பும்படியாக நாம் கண்டிப்பாக இல்லை. மனிதர்களை அனுப்பின வகையில் பார்த்தீங்கன்னா மூன்று நாடுகள் இதுவரை அனுப்பியிருக்காங்க. ஆனா, செயற்கைக்கோளைச் சிக்கனமாய் செய்வதில் நாம முதலிடத்தில் இருப்போம். இப்போ செவ்வாய் கிரகத்திற்குச் சிக்கனமான செலவில் செயற்கைக்கோளை செய்து, முதல் முயற்சியிலேயே அனுப்பிய நாடாக நாம் இருந்தோம். சில துறையில் மூன்றாவது, நாலாவது இடத்தில் இருப்போம். ஆனால், எதிலும் 5-க்கு கீழே இல்லை” எனப் பேசி முடித்தார்.