Published:Updated:

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2வது முறையும் தோல்வி

Vikatan Correspondent

ஸ்ரீஹரிகோட்டா, டிசம் 26

##~~##

ஜி.எஸ்.எல்.வி. எஃப்-6 ராக்கெட்டின் 2வது பயணம் தோல்வி அடைந்தது.ஒரே வருடத்தில் இரண்டாவது முறையாக தோல்வியில் முடிந்தது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2வது முறையும் தோல்வி

ஜிசாட்-5 பி'யை ஜி.எஸ்.எல்.வி., - எஃப் 6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.கடந்த 20ம் தேதியே விண்ணில் செலுத்தப்பட இருந்த இந்த செயற்கைக்கோள், ராக்கெட்டின் கிரியோஜெனிக் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அந்த கோளாறு சரி செய்யப்பட்டு, ராக்கெட்டை நேற்று மாலை 4:06 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வரிசையில் ஏழாவது ராக்கெட்டான, ஜி.எஸ்.எல்.வி., - எப்06 மூன்று பகுதிகளை கொண்டது.

நேற்று மாலை 4:06 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால், சில வினாடிகளிலேயே நடுவானில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெடித்துச் சிதறி, தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதனுடன் ஏவப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோளும் தீக்கிரையானது.

இதுவரை ஏவப்பட்ட ஏழு ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், நான்கு ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன; மூன்று ராக்கெட்கள் தோல்வியில் முடிந்துள்ளன. பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை ஏவும் முயற்சி மூன்றாவது முறையாக தோல்வியடைந்திருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகளை கவலையடையச் செய்துள்ளது.

காரணம் என்ன:

இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் பேட்டி : ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்ந்து சென்ற 43 வினாடிகளுக்கு பின், அதன் பாதை மாறியது. அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர விஞ்ஞானிகள் முயன்றனர். அது இயலாததால் 47 வினாடிகளுக்கு பிறகு, அது செயலிழக்கச் செய்யப்பட்டு, 50வது வினாடியில் கடலில் சிதறி விழச் செய்யப்பட்டது. எட்டு கி.மீ., பயணம் செய்த ராக்கெட், இரண்டரை கி.மீ., தூரத்தில் கடலில் விழுந்தது. ராக்கெட் தோல்விக்கான காரணம் குறித்து, அடுத்த சில தினங்களில், நிபுணர்களும், விஞ்ஞானிகள் குழுவினரும் ஆராய்வர். கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில், தெர்மோஸ்டார்ட் வால்வில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, கடந்த 20ம் தேதி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின், பாதிப்பை சரிசெய்து, எல்லாம் நன்றாக உள்ளது என முடிவு செய்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

தோல்வி அடைந்து விட்டது.ராக்கெட் தோல்வியின் மூலம் 325 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டின் முதல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செயலிழந்துள்ளதை அறிய முடிகிறது. பிரச்னைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்த பின், வரும் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.வரும் பிப்ரவரி முதல் வாரம் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூன்று செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்படும். சந்திரயான் -2 திட்டம் ரஷ்ய உதவியுடன் 2013 -14 ஆண்டு செயல்படுத்தப்படும்.ரஷ்யா அளித்த கிரையோஜெனிக் இன்ஜின்களில் இன்னும் ஒன்று மீதமுள்ளது. தேவைப்படின் ரஷ்யாவிடமிருந்து பெறப்படும்.