Published:Updated:

``என் `சித்தாரா' ராக்கெட்டின் கதை"- இஸ்ரோ ஹீரோ சிவன்! பகுதி-1

2000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் தலைவர். 1000-க்கும் மேற்பட்ட பொறியாளர்களின் நெறியாளர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தின் தென்னக கிராமத்தில் விண்வெளிக் கனவுகளோடு உலவிய அந்த சிறுவன், இன்று இந்திய விண்வெளித்துறையின் தலைவரானது எப்படி? இந்தியாவின் பெருமைமிகு கனவுகளை நனவாக்கவிருக்கும் சிவன் வெற்றியடைந்தது எப்படி? ஒவ்வொரு அத்தியாயமாக பார்ப்போம்.

கவுன்ட் டவுண் ஸ்டார்ட்...

10-9-8-7-6-5-4-3-2-1- ஜீரோ

விண்வெளி நோக்கி 110 கோடி மக்களின் கனவுகளைத் தாங்கி சீறிப்பாய்கிறது அந்த ராக்கெட்... வளரும் தலைமுறை, நாளைய உலகை வழிநடத்திச்செல்ல விண்ணேகிறது அந்த அக்னிப் பறவை. நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவிட தொலைதூரத்தைக் கடக்கிறது அந்த இரும்புக்கோட்டை.

மனித இனம் எட்டிப்பிடிக்க முடியாத எல்லைகளை இப்படி உயர உயரப் பறந்த எத்தனையோ ராக்கெட்டுகள் உரசிப் பார்த்திருக்கின்றன. இந்த விண்வெளிப் புரட்சி, எதிர்காலத்தின் சாளரங்களைத் திறந்து நம்பிக்கை ஒளி பாய்ச்சுகின்றன.

இன்று எந்த ஒரு நாட்டுக்கும் விண்வெளி சார்ந்த நுட்பங்களும் அதன் ஆராய்ச்சிகளும், வெற்றியும் மிக முக்கியம். நிலவிலும் அண்டவெளியிலும் இடம்பிடிக்க நாடுகள் பலவும் பில்லியன்களைக் குவித்து ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டு முன்னேறிக்கொண்டிருக்கின்றன. நாம் மட்டும் என்ன சளைத்தவர்களா..? இந்தியாவின் ஶ்ரீஹரிகோட்டாவில் செயல்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷனிலும் (ISRO), திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலும் (VSLC) விண்வெளி ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

GSLV
GSLV

இந்த விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில், சிவன் பொறுப்பேற்றார். இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர். விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகள் புரிந்து வியக்கவைத்தவர். இன்று எல்லோராலும் செல்லமாக `இஸ்ரோ சிவன்' என்று அழைக்கப்படும் இவரை திருவனந்தபுரம் சென்று சந்தித்துப் பேட்டி எடுக்க ஆசிரியர் குழுவிடம் அனுமதி கேட்டதும்... உடனே கிடைத்தது க்ரீன் சிக்னல். நானும், முதன்மை புகைப்படக்காரர் கே.ராஜசேகரும் ஆயத்தமானோம்.

சிவன்
சிவன்

சிவனைக் கருவறையில் தரிசிப்பதைப்போல, இந்த சிவனை விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் சந்திக்க பேராவல் கொண்டிருந்தோம். இன்ப அதிர்ச்சியாக, அவரது குடும்பத்தினருடனே அவரை பேட்டி எடுக்க அனுமதி கிடைத்தது, சில கட்டுப்பாடுகளுடன்!

#VikatanAudioStory
#VikatanAudioStory
First episode

ஆம்… `என்னென்ன கேள்விகள்?’, ‘எங்கள் இருவரின் புகைப்படங்களுடன்கூடிய முழு விவரம்’, `புகைப்படக்காரர் கொண்டு வரும் உபகரணங்கள் என்னென்ன?’, ‘அதன் சீரியல் நம்பர் என்ன?’ என அடுத்தடுத்த மெயில்களில் எக்கச்சக்க கேள்விகள். அனைத்திற்கும் பொறுப்பாக பதில் அனுப்பிவிட்டு, `ரிப்ளை எப்ப வரும்' என மெயில்மீது விழிவைத்துக் காத்திருந்தோம். ஒரு சுபதினத்தில், `க்ளிங்’ என அனுமதி மெயில் இன்பாக்ஸில் கண்சிமிட்டியது. `சிவன் எங்களுடன் இரண்டு மணி நேரம் மட்டும் இருப்பார்' என்று அந்த மெயில் சேதி சொன்னது. அனுமதி உள்ளிட்ட அனைத்தையும் எங்களுக்காக ஒருங்கிணைத்தது வி.எஸ்.எஸ்.சி-யில் பணியாற்றும் விஜயமோகனகுமார், சீனியர் சயின்டிஸ்ட்.

இரண்டுமணி நேரத்தில் என்னென்ன கேட்கலாம் என அந்த நொடியிலிருந்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக சிந்திக்க ஆரம்பித்தோம். இந்த ஆராய்ச்சி மையத்தில் கிட்டத்தட்ட 2000 -த்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 1000-த்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், 2000 தொழிலாளர்கள் எனப் பிரமிக்கவைக்கும் வளாகத்திற்குத் தலைவராக இருப்பவரிடம் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் முக்கியமானவை. மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டிய பதில்களைப் பாத்திகட்டி, ஐம்பது அறுபது கேள்விகளாகச் சுருக்கி எழுதி, ஆசிரியர் குழுவிடம் கொடுத்தோம். அவர்கள் சொன்ன கேள்விகளையும் எழுதிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி ஒரு மாலை வேளையில் உற்சாகமாகப் புறப்பட்டோம்.

ஒரு ராக்கெட் 7.35 கிலோ மீட்டரை ஒரு விநாடியில் கடந்தால்தான், பூமியிலிருந்து 1,000 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் அதன் சுற்றுவட்டப்பாதையைச் சரியாக அடைய முடியும். அதாவது, 26,460 கிலோ மீட்டரை ஒரு மணி நேரத்தில் கடப்பது அல்லது காஷ்மீர் டு கன்னியாகுமரிக்கு உள்ள தொலைவை சுமார் ஐந்து நிமிடத்தில் கடப்பது.

சரி, இந்தப் புள்ளிவிவரம் இப்ப இங்கே எதுக்கு. சென்னை டு திருவனந்தபுரம் சுமார் 700 கிலோ மீட்டர். இதைக் கடக்க அரசுப் பேருந்து எடுத்துக்கொண்ட நேரம் சுமார் 17 மணிகளுக்கு மேல். காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் போய் சேர்ந்தோம். காலை 8.30 மணிக்கு விஞ்ஞானி சிவன் வீட்டுக்கு எங்களை வரச்சொல்லி இருந்தார்கள். சிவன் வசிக்கும் ஏரியா பெயரை மட்டும் சொல்லியிருந்தார் விஜயமோகனகுமார். அவர், பின்னால் வருவதாகச் சொன்னார். எங்களுக்காக ஒரு நல்ல இடத்தில் ரூம் போட்டும் வைத்திருந்தார். அங்கு குளித்துவிட்டு ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

மோடியுடன் சிவன்
மோடியுடன் சிவன்

17 மணி நேரத்தில் இரண்டு இட்லியைத் தவிர எதுவும் சாப்பிடாமல் வந்தது, உடலைச் சோர்வடைய வைத்தது. இப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நேரம் ஆகிவிடும். சொன்ன நேரத்திற்குள் போக முடியாது என எண்ணிக்கொண்டேன். உடன் வந்த ராஜசேகரின் மனநிலையும் இதுதான். ஆனால், இருவரும் இதுபற்றிப் பேசவில்லை. பேட்டி முடித்ததும் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணினோம். நான் அப்போதிருந்த மனநிலையில் இந்த பேட்டியை எப்படி சிறப்பாக 2 மணிநேரத்திற்குள் முடிக்க முடியும் என்பதும், மனதுக்குள் விரிந்துகிடக்கும் அண்டப்பெருவெளி பற்றிய ஆயிரக்கணக்கான கேள்விகளை எப்படி அணுவுக்குள் அடக்கும் எலெக்ட்ரான் போல நுணுக்கி கேட்க முடியும் என்பதுதான்.

சிவன்
சிவன்

புது இடம், வழி தெரியாது. எவ்வளவு நேரம் ஆகும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், சொன்ன நேரத்திற்குச் சென்றால்தான் நம்மேல் நம்பிக்கை வரும். `விகடன்ல வேலை செஞ்சிக்கிட்டு நேரம் தவறுவதா… நெவர்!’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு நொடியும் அவர்கள் சொல்லும் கவுன்ட் டவுண் போல முக்கியம். நாசாவுக்கே சவால் விடும் ஒரு விஞ்ஞானியிடம் `பஸ் லேட்’ என எல்லாம் போங்கு காரணம் சொல்லிக்கொண்டு தலையை சொறிய முடியாதல்லவா! `டேய் தம்பி… நீ என்னமோ அவரை இன்டெர்வியூ எடுக்க போற மாதிரி தெரியலையே… அவர்தான் உன்னை வேலைக்கு இன்டெர்வியூ எடுக்கப்போற மாதிரி பதறிட்டே இருக்கே. கூலா இருப்பா!’ என்றார் புகைப்படக்காரர் ராஜசேகர். பல அரசியல்வாதிகளை, சூப்பர்ஸ்டார்களை பேட்டி எடுக்க என்னுடன் வந்து, என் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் வேலையையும் அடிஷனலாக சீரிய முறையில் செய்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சேட்டா… வண்டியைக்கொஞ்சம் வேகமா ஓட்டுங்க’ என டிரைவரிடம் சொன்னேன். இதைதாண்டி வேறு என்ன சொல்ல முடியும்? அதையே 4 முறையாவது அவரிடம் சொல்லியிருப்பேன்.

நாங்கள் சொன்ன தெரு பெயரைச் சொல்லி வழிக்கேட்டுக்கொண்டே வந்தார் டிரைவர் சேட்டா… அந்தத் தெரு, இந்த தெருவென மாறி மாறி வந்து இறுதியாக விஜயமோகனகுமார் சொன்ன தெருவை அடைந்தோம்.

நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? பேரமைதியே சில நேரங்களில் காதுக்குள் ஒரு `கொய்ய்ய்ய்ங்’ சத்தத்தை உண்டு பண்ணுமே… அப்படி ஒரு பேரமைதி. எந்தவித பதட்டமோ அவசரமோ இல்லாமல் இருந்தது அந்தத் தெரு. அங்கு இருக்கும் வீடுகளைப் பார்க்கும்போது, மிடிள் கிளாஸ் குடும்பங்கள் வசிக்கும் இடம் என்பது புரிந்தது. ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் ஒரு மரம், செடிகொடிகள் நிறைந்து பசுமையாக இருந்தது. சரி, சிவன் சார் வீடு நிச்சயம் பெரிய வீடாகத்தான் இருக்கும். எந்த வீட்டுக்கு செக்யூரிட்டியுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் இருப்பாங்களோ… அந்த வீடுதான் சிவன் வீடு என நினைத்துக்கொண்டே பைக்கில் சென்ற ஒருவரை நிறுத்தி…

இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்
`இவரிடமிருந்து எளிமையைக் கற்றுக்கொள்ளுங்கள்!' - அப்படி என்ன செய்தார் இஸ்ரோ தலைவர் சிவன்?

`சிவன் சார் வீடு எதுங்க?’

`ஞான் அறியில்லா…’ என்று கடந்து சென்றுவிட்டார்.

இவர் வேற ஏரியா போல… இந்தத் தெருவா இருந்திருந்தா நிச்சயம் தெரிந்திருக்கும். என நினைத்தபடி நகர்ந்தோம். அடுத்து ஒருவர் வந்தார். அவரும் தெரியாது என்ற பதிலைச் சொல்லிச் சென்றார். மணி 8.25. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவர் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். இங்க யார்கிட்ட கேட்டாலும் `அறில்லா… அறில்லா’னு சொல்கிறார்களே… தெரு மாறி வந்துவிட்டோமா? என மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. டிரைவரிடம் இந்தத் தெருதானா? என உறுதிப்படுத்திக்கொண்டிருந்தபோது, காருக்குப் பின்னால் இருந்த வீட்டில் பனியனுடன் ஒருவர் எங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. தெருவுக்கு யாரோ புதுசா வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கார்போல என நினைத்துக்கொண்டே டிரைவரிடம், தட்டுத்தட்டுமாறி மலையாளத்தில் பேசிக்கொண்டு இருந்தேன்.

`இங்க வாங்க…’ எனும் குரல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி திருப்பினேன். பனியன் போட்ட அந்த நபர்தான் எங்களை அழைத்தார். தமிழ்க்குரல்!

ஆஹா… நமக்கு உதவி செய்ய ஆள் கிடைச்சுடுச்சு… வேகமா நடந்து அவர் வீட்டின் முன் சென்றோம். அவரிடமே உதவி கேட்கலாம் என அந்த வீ்ட்டின் கேட் முன்பு சென்றோம். சின்ன இரும்பு கேட். வீட்டு வாசலில் சில செடி கொடிகளுடன் பரப்பளவில் அந்த வீடு ஊர்ப்பக்கம் ஒரு நடுத்தர மனிதர் பார்த்துப் பார்த்து சிறுகச் சிறுக கட்டிய வீட்டைப்போல இருந்தது.

`சார், சிவன்… சா...ர்… வீடு…’ என சொல்லி முடிக்கும் முன் உணர்ந்தேன். அவர்தான் சிவன். முகத்தில் கோல்டு பிரேம் அணிந்த கண்ணாடி, நல்ல கறுப்பு, வெள்ளந்தியான சிரிப்பு, விவசாயி உடல்வாகு. 2000-த்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் தலைவன். 1000-த்திற்கும் மேற்பட்ட பொறியாளர்களின் நெறியாளர்.

சிவன்
சிவன்
``என் `சித்தாரா' ராக்கெட்டின் கதை'' - இஸ்ரோ ஹீரோ சிவன்! பகுதி-2

2000 தொழிலாளர்களின் ராஜா… இவ்வளவு எளிமையானவரா? அவர் வீடு சாதாரணமாக இருக்கிறதே… வீட்டுக்கு முன் ஒரு வாட்ச்மேன்கூட இல்லையே… இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர், எந்தவித பந்தாவும் இல்லாமல் இருக்கிறாரே என எவ்வளவோ கேள்விகள் எனக்குள் எழுந்தபோது…

இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லியும், `வாங்க… வாங்க….’ என கைகொடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் சிம்பிள் சிவன்.

***

(அவர் படித்து வளர்ந்தது, வடிவமைத்த சாஃப்ட்வேர், அப்துல்கலாமுடன் பணிபுரிந்தது எனப் பல சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு