Published:Updated:

``என் `சித்தாரா' ராக்கெட்டின் கதை'' - இஸ்ரோ ஹீரோ சிவன்! பகுதி-2

`சிவன் எளிமையின் ரகசியம் என்ன?’ என எனக்குள் கேட்டு நான் அதிசயித்துப் போனேன். பணம், புகழ், பதவி என ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு பெரும்பாலானோர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இந்த உலகம் நாம் புரிந்துகொள்ளும்படி இருப்பதே ஒரு மாபெரும் ரகசியம்தான்… சொல்லப்போனால் அது ஓர் அதிசயமும்கூட!'' - ஐன்ஸ்டீன்.

`சிவன் எளிமையின் ரகசியம் என்ன?’ என எனக்குள் கேட்டு நான் அதிசயித்துப்போனேன். பணம், புகழ், பதவி என ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு பெரும்பாலானோர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பேருந்தின் ஓட்டுநர் இருக்கை கிடைத்தாலே மண்டைக்குள் தன்னகங்காரம் நுழைந்துகொள்ளும் சிலருக்கு. தேவையின்றி ஹாரனை ஒலிக்கவைத்து பாதசாரிகளை அலறவிடும் இந்த உலகில்தான், பூ அவிழ்வதைப்போல, தனக்கும் அந்தப் பதவிக்கும் சம்பந்தமில்லாததைப் போல சிலர் மென்மையாக இருக்கிறார்கள்.

சிவன் சார், இரண்டாம் ரகம். செய்யும் வேலையில் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தொடர்ந்து அதன் லயத்தில் செய்துகொண்டே இருக்கிறார். அப்படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் ஓயாது உழைத்தவருக்கு, பதவி தானாக வந்து அமர்ந்திருக்கிறது. அந்தப் பதவியால் இவருக்குப் பெருமை அல்ல, இவரால்தான் அந்தப் பதவிக்குப் பெருமை எனத் தோன்றியது.

சிவன்
சிவன்

டபுள் பெட்ரூம் அறைகொண்ட பக்கா மிடில் கிளாஸ் வீடு. சாதாரண டி.வி, மூன்று பேர் அமரக்கூடிய சோபா...

``நான் சின்ன வயசுல இருந்தே ஆனந்த விகடனின் தீவிர வாசகர். இப்பக்கூட வாரம் தவறாமல் படிச்சுடுவேன். சுஜாதா எழுதின ‘என் இனிய இந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’, ‘ஏன் எதற்கு எப்படி?’னு பல தொடர்களைப் படிச்சு வளர்ந்திருக்கேன். சுருக்கமா சொல்லணும்னா… ஆனந்த விகடன் கூடவே நானும் வளர்ந்தேன்னு சொல்லலாம்" பெருமிதமாகச் சொன்னார்.

`ரொம்ப சந்தோஷம் சார். சுஜாதா என்னைப் போன்ற இளம் பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன். முதன்மைப் புகைப்படக்காரர் கே.ராஜசேகரன், சுஜாதா சாருடன் வேலை பார்த்தவர்’ என்று சொன்னதும் ஆச்சர்யப்பட்டார்.

``நீங்க சொன்ன புத்தகங்களை நானும் படிச்சிருக்கேன் சார். எனக்கு இதுல ரொம்ப பிடிச்சது `மீண்டும் ஜீனோ'தான்…’’ எனச் சொல்லி முடிக்கும் முன்னரே… ``அந்த புக்ல மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?” என்று அவர் பார்வையிலேயே கேட்பது புரிந்தது.

``என் `சித்தாரா' ராக்கெட்டின் கதை"- இஸ்ரோ ஹீரோ சிவன்! பகுதி-1

"எனக்குச் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை. அப்பா பெயர் கைலாச வடிவு, அம்மா பெயர் செல்லம்மா. மூன்றாவது பிள்ளையாக 1957-ம் ஆண்டில் பிறந்தேன். அக்கா, அண்ணன், எனக்கு அப்புறம் ஒரு தங்கை. அப்பா மாங்காய் வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். நான் படிக்கணும்னு சொன்னதும், எங்க அப்பா போட்ட ஒரே கண்டிஷன், `நீ வேலை செஞ்சுக்கிட்டேதான் படிக்கணும்’ என்பதுதான். அதனால, வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அரசு ஆரம்ப பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அப்புறம், பக்கத்து ஊரான வல்லன்குமாரன்விளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்தேன்.

சிவன்
சிவன்

எனக்குச் சின்ன வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை. வீடு வந்தால் எனக்கு நானே டீச்சர். அதுவும் அப்பாவுடன் விவசாயத்துக்கு உதவி செஞ்சுக்கிட்டே படிக்கணும். இது எல்லாம் எனக்குப் பெரிய பாரமா இல்லை. விரும்பிச் செய்யும் ஒரு செயலுக்கு எதுக்கு கஷ்டப்படணும்? அப்பவும் சரி, இப்பவும் சரி… எதுவுமே எனக்குக் கடினமில்லை. சோதனைகளைத் தாண்டினால்தான் சாதனைனு புரியவைத்தது என் கல்வியும் உழைப்பும்தான்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளியில் படிக்கும்போது சிவனுக்கு இருந்த ஒரே கனவு, அவர் கிராமத்து வயல்களுக்கு மேல் பறக்கும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதுதான். விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே… ஓடிவந்து பார்ப்பாராம். விமானம் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டே இருப்பாராம். பெரும்பாலும் சிறுவயதில் எல்லோருக்கும் இருக்கும் கனவுதான். ஆனால், அதற்கு மேலும் சிவனுக்கு ஒரு கனவு இருந்தது. அது, `இந்த விமானம் போலவே நாமும் ஒரு விமானம் செய்து, பறக்க வைக்க வேண்டும்’ என்பதுதான்.

நல்ல கனவுகளுக்குச் சிறகுகள் இருக்கின்றன. தனது இலக்கை அடைய அதுவே பாதையை உருவாக்கும். வழியை அதன்போக்கிலே தீர்மானிக்கும். அந்தக் கனவு அவன் கண்ட பாதைக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். இந்த மாயசக்தி கனவுகளுக்கு உண்டு. ஆனால், இது சாத்தியமாக உழைப்பு என்னும் மூலதனம் தேவை. உழைப்பைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தார் சிவன். அவர் கண்ட கனவு நனவான தருணங்களை அவர் வார்த்தைகளிலே சொல்கிறார்.

சிவன்
சிவன்

“1977-ம் ஆண்டு தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். 400-க்கு 400 மதிப்பெண் எடுத்து காலேஜ் ஃபர்ஸ்ட். அங்கேதான் என் வாழ்க்கைக்கான திருப்புமுனை நடந்தது. என் ஆசிரியர், `நீ நல்லா படிக்கிறே, எம்.ஐ.டி-யில ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படி’னு சொன்னார். அப்போதான் என் லைஃப்ல முதல்முறையா எம்.ஐ.டி, `ஏரோநாட்டிக்கல்’ போன்ற வார்த்தைகளையே கேள்விப்பட்டேன். `என் ஆசிரியர் சொல்லே வேதவாக்கு'னு எம்.ஐ.டி-யில விண்ணப்பம் வாங்கி தேர்வு எழுதினேன்.

அங்கே ஒரு சுவாரஸ்யம் என்னன்னா, எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண். ஆனால், நேர்முகத் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண் கிடைச்சது. காரணம், என்னால நாலு வார்த்தை கோர்வையாகப் பேச முடியலை. ரொம்ப தடுமாறினேன். ஆனாலும், படிக்கிற பையன்னு என் மேல் நம்பிக்கை வைச்சு கல்லூரியில சேர்த்துக்கிட்டாங்க. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றினேன். அடுத்து, இதே துறையில் எம்.இ படிச்சேன். 1983-ம் ஆண்டு படித்து முடிக்கும்போது, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ வந்தார்கள். பல கட்டத் தேர்வுகள் நடந்தன. அனைத்தையும் சிறப்பாக எழுதினேன். நிச்சயம் இங்கு வேலை கிடைக்கும் என நம்பினேன். என் நம்பிக்கை வீணாகலை. சில நாள்களில் தேர்வுபெற்ற செய்தி வந்தது.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 1984-ம் ஆண்டு, ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். விமானத்தில் செல்ல வேண்டும். ஒரு விமானத்தை உருவாக்கி வானில் பறக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் பால்ய கால கனவு. ஆனால், அந்த விண்ணைத் தாண்டியும் நான் உருவாக்கப்போகும் ராக்கெட் பறக்கும் என்ற உணர்வு என்னால் நம்பமுடியாததாக இருந்தது'' என்று பெருமிதம் ததும்பச் சொன்னார் சிவன்.

ஒரு ராக்கெட்டை உருவாக்க இந்தப் படிப்புதான் படிக்க வேண்டும் என்று சிவனுக்குத் தெரியாது. கனவுகளை மட்டுமே மனதுக்குள் அடைகாத்திருந்தார். செய்த வேலைகளை மிகச் சரியாகச் செய்தார். அந்த கனவே நிஜ உலகத்துக்கு சிவனைக் கொண்டுவந்தது. சிறு வயது முதலே கடுமையான உழைப்பை நம்பி இவ்வளவு தூரம் பயணித்திருக்கும் சிவனின் இந்த உயரம், மாயாஜாலத்தால் திடீரென நிகழ்ந்ததல்ல. அது வலிகொண்ட பெரும் பயணம். சிகரத்தை எட்டிப்பிடிக்கப் பலரைப்போல சமவெளியிலிருந்து தன் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. பெரும் பள்ளத்தாக்கிலிருந்து மேலே ஏறி ஏறி சிகரம் தொட்டிருக்கிறார்.

சிவன்
சிவன்
கே.ராஜசேகரன்

“எனக்குச் சின்ன வயசிலிருந்தே நினைத்தது எதுவுமே நடக்காது. ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுவது நிராகரிக்கப்படும். ஆனால், கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். ‘எல்லாம் நன்மைக்கே’ என்று எடுத்துக்கொள்வேன். இறுதியில் எல்லாம் சுகமாகவே முடியும். என் பள்ளி, கல்லூரி முதல் என் பணி நாட்கள் வரை எல்லாம் இப்படித்தான்” எனச் சிரிக்கிறார்.

“சரி… வாங்கச் சாப்பிடலாம்?” என்று டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்ற சிவன், அவரின் துணைவியார் மாலதியை அறிமுகப்படுத்தினார்.

மாலதி மேடம், எங்களுக்கு உணவோடு சேர்த்து ஆனந்த விகடன் பற்றிய நினைவுகளையும் பரிமாறினார்.

“இவர் வேலைக்கு போயிட்டாருன்னா எப்போ வருவார்னே தெரியாது. ஆனா, எனக்கு நேரம் காலமில்லாமல் இவ்வளவு வருஷமும் கிடுகிடுனு ஓடிடுருச்சுன்னா, அதுக்குக் காரணம் விகடன்தான். அவ்வளவு படிச்சுருக்கேன்” என்றவர், ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும், தொடரைப் பற்றியும், பேட்டிகளைப் பற்றியும் சொன்னதில் பெருமிதமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் அவர்களது இரண்டு மகன்களை அறிமுகப்படுத்தினார். எளிமையான ஆடையும் காலணியுமே அணிந்திருந்தார்கள். மகன்களையும் தன்னைப் போலவே எளிமையாக வளர்த்திருப்பது புரிந்தது.

குடும்ப புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ராஜசேகரன் சார் சொன்னபோது, ``ரொம்ப நாள் ஆச்சு. நாங்க குடும்பத்தோடு போட்டோ பிடிச்சு…” - என்றார் மாலதி மேடம்.

சிவன்
சிவன்
கே.ராஜசேகரன்

ஒரு சின்ன வெட்கத்துடன் சிவன் அவர் குடும்பத்தினருடன் போஸ் கொடுத்தார். வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். வீட்டிலேயே அவர் மனைவி வளர்க்கும் மூலிகைச் செடி கொடிகளைக் காண்பித்தவர். கையில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். “சரி… நாம வி.எஸ்.எஸ்.சி-க்கு போகலாம். அங்க போய் இன்னும் நிறைய பேசலாம்” என்றார். அவர் காரை பின்தொடர்ந்து நாங்களும் சென்றோம்.

எங்கள் வாகனம் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மையத்தின் வாசலை அடைந்தது. பிரமாண்டமான வளாகம். அதுபோன்ற வளாகத்தை, `மிஷன் இம்பாஸிபிள்' படத்தில் பார்த்த ஞாபகம். துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் வளாகம் முழுக்க வியாபித்திருந்தனர். எல்லோரின் கையிலும் இருந்த நவீன துப்பாக்கி, எத்தகைய பாதுகாப்பான பகுதி என்பதைச் சொல்லியது. சிவனுக்கு ராயல் சல்யூட் அடித்து வரவேற்றார்கள். அவர் பின்னால் பூனைக்குட்டிபோல நடந்துபோன எங்களுக்கே கர்வமாக இருந்தது.

அவர் முன்னே வேகமாக நடந்து செல்ல, அந்தப் பிரமாண்டத்தை ரசித்துக்கொண்டே சென்றோம். திடீரென இரண்டு காவலர்கள் ஒரு அறைக்குள் என்னையும் ராஜசேகரன் சாரையும் அழைத்துச் சென்றார்கள். கொஞ்சம் திகிலாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு