Published:Updated:

பறக்கும் தட்டு பூமிக்கு வந்தது உண்மை... உறுதிசெய்த பென்டகன்! அப்போ ஏலியன்கள் இருப்பதும் உண்மைதானா?

இவற்றை UFO எனக் குறிப்பிடாமல் 'unidentified aerial phenomena' என்றே குறிப்பிட்டிருக்கிறது பென்டகன். அதாவது, "இன்னும் இந்த வீடியோக்களில் இருப்பது என்னவென்பது தெளிவாக தெரியவில்லை" என்று பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

N = R* • fp • ne • fl • fi • fc • L ... என்ன இது என்று குழப்பமாக இருக்கிறதா? நாம் வாழும் இந்தப் பால்வெளியில் (Milky way Galaxy) நம்மைப் போலவே வேறு ஒரு நாகரிகம் (Aliens) தோன்றியிருக்குமா எனக் கண்டறிவதற்கான கணிதச் சமன்பாடு இது. Drake Equation என அழைக்கப்படும் இது முழுக்க முழுக்க ஒரு சம்பவிக்கக்கூடிய தன்மை கொண்ட ஒன்றாக, அதாவது ஒரு நிகழ்தகவாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

இதில் இருக்கும் ஒவ்வோர் எழுத்தும் பால் வெளியில் தோன்றும் நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அந்தக் கோள்களில் உயிர் வாழ்வதற்கான தன்மைகள் எவ்வளவு இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன. துல்லியமாக இத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன, இத்தனை கோள்கள் இருக்கின்றன என நம்மால் கணக்கிட முடிந்தால், நம் பால்வெளியில் வேறு ஒரு நாகரிகம் இருக்கிறதா இல்லையா என நம்மால் கூறி விட முடியும். ஆனால், இவற்றில் ஒன்றிற்குக்கூட நமக்கு விடை தெரியாது. ஆனால், ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகையைப் போட்டு இத்தனை நாகரிகங்கள் தோன்றியிருக்கலாம் எனத் தோராயமாகக் கூற முடியும். அதன்படி பால்வெளியில் மட்டும் 1000-ல் இருந்து 100,000,000 நாகரிகங்கள் (அதாவது வேற்று கிரக வாசிகள்) வரை தோன்றியிருக்கலாம் என்கிறது இந்தச் சமன்பாடு.

ஏலியன்கள்
ஏலியன்கள்
Pixabay

சரி, 'இப்போ எதுக்கு ஏலியன் பற்றிய பேச்சு' என்கிறீர்களா... வழக்கம்போல் அமெரிக்கர்கள் இந்த முறையும் பழைய கோப்புகளைத் தோண்டி எடுத்து ஏலியன்கள் பற்றிய பேச்சுக்களைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். 2007 மற்றும் 2017-ல் பறக்கும் தட்டு இருப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரல் ஆகின. தற்போது அந்த வீடியோக்களில் இருக்கும் பறக்கும் தட்டு போன்ற பொருள்கள் உண்மைதான் என அமெரிக்காவின் பென்டகன் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் இணையத்தில் பரபரப்பைக் கிளப்ப, ஏலியன்கள் தொடர்பான தேடல்களையும் விவாதங்களையும் மீண்டும் தொடங்கியிருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

ஆனால், இவற்றை UFO எனக் குறிப்பிடாமல் 'unidentified aerial phenomena' என்றே குறிப்பிட்டிருக்கிறது பென்டகன். அதாவது, "இன்னும் இந்த வீடியோக்களில் இருப்பது என்னவென்பது தெளிவாக தெரியவில்லை" என்று பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையோ, பொய்யோ ஏலியன்கள் பற்றி ஆராய்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம்தானே? நாமும் கொஞ்சம் ஆராய்வோம்.
`மூன்று பறக்கும் தட்டு வீடியோக்களை உறுதிப்படுத்திய அமெரிக்கா..!’ -மீண்டும் `ஏலியன்ஸ்’ விவாதங்கள்

ஏலியன்களைவிட சுவாரஸ்யமானவை அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள். அவைதான் ஏலியன்களின் வாகனமா என நமக்குத் தெரியாது. நாம் அவற்றிற்குக் கொடுத்திருக்கும் பெயர் UFO (Unidentified Flying Object), தமிழில் பறக்கும் தட்டு. பல நூற்றாண்டுகளாகவே பறக்கும் தட்டைக் கண்டதாகப் பல நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன (அவற்றில் பெரும்பான்மை நிகழ்வுகள் அமெரிக்காவில் பதிவாகியது... ஏன் ஏலியன்களுக்கு அமெரிக்காவை மட்டும் பிடித்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான்). தற்போதைய விவாதங்களும் ஒரு பறக்கும் தட்டை வைத்தே உருவாகியிருக்கிறது. எனவே, ஏலியன்களையும் பறக்கும் தட்டுகளையும் பிரிக்க முடியாது. ஆனால், நம் வான் வரை வந்து விட்டு ஏன் அப்படியே சென்று விடுகிறார்கள் ஏலியன்கள்?

Aliens
Aliens
இந்தக் கேள்விக்கு பெர்மி என்ற இயற்பியலாளர் முன்வைத்த கோட்பாடுகளில் ஒன்றான 'Zoo Hypothesis'-ன் வழியாகப் பதில் கூற முடியும். நாம் மிருகக்காட்சி சாலையில், மிருகங்களைக் கூண்டில் அடைத்து வைத்து அதை வேடிக்கை பார்ப்பதுபோல ஏலியன்கள் நம்மைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

நாம் வேற்றுகிரகவாசிகளைக் கண்டறிய முடியாததற்கும் இதன் வழியே பதில் சொல்லலாம். சிங்கத்தை ஒரு கூண்டில் அடைத்து வைத்து ரிங் மாஸ்டரை வைத்து பயிற்சி அளிப்பதன் மூலம், ரிங் மாஸ்டரின் பேச்சைத் தாண்டி சிங்கம் எதுவும் செய்யாத வகையில் அதைப் பழக்கப்படுத்த முடியும். அதேபோலவே வேற்றுக்கிரகவாசிகள் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி இப்பிரபஞ்சத்தை நாம் அடைய முடியாத வகையில் நம்மைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் எனக் கூறலாம். என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது எனத் தோன்றலாம். ஆனால், ஏலியன்கள் பற்றிக் கூறப்படும் பலநூறு ஆதாரமற்ற கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இதை நம்பவும் சங்கங்கள் சங்கங்களாக ஆட்கள் உண்டு.

ஏலியன்கள் பற்றிய கோட்பாடுகளில் பெர்மியின் கோட்பாடு முக்கியமானது. இருக்கிறது, இல்லை என அனைத்துக் கோணங்களிலும் பதில் கொண்டது பெர்மியுடையது. அவை பெர்மியின் முரண்பாடுகள் (Fermi Paradox) என்று அழைக்கப்படுகிறது. பெர்மி முரண்பாடுகளைப் பற்றிப் படிக்க கீழே இருக்கும் கட்டுரையைப் பார்க்கலாம்.
Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேற்றுகிரக உயிரினங்களைக் கண்டறிந்தாலும் நம்மால் அவர்களின் இருப்பிடத்திற்குச் செல்ல முடியுமா?

நாம் தற்போது பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளில், தூரங்களை அளக்க ஒளியாண்டு (Light Year) என்ற அளவீட்டைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

ஒளியானது நொடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் தன்மையுடையது. இதே வேகத்தில் ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் பயணிக்கும் தூரம்தான் ஓர் ஒளியாண்டு எனக் கணக்கிடப்படுகிறது.

பூமி போலவே உயிரினங்கள் வாழத் தகுதியான கோள்களாக 17 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நமக்கு மிகவும் அருகில் இருப்பது Proxima Centauri B என்ற கோள்தான். அந்தக் கோள் பூமியில் இருந்து 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

UFO
UFO
Pixabay
1977
நாசாவில் இருந்து Voyager 1 மற்றும் Voyager 2 என இரு விண்கலங்கள் பூமியிலிருந்து செலுத்தப்பட்டன.

அவற்றில் Voyager 1 விண்கலம் 2012, ஆகஸ்டில் சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறி முதன்முறையாக Interstellar Space எனப்படும் நாம் பார்க்காத வெளிப் பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதன் பின்னர், ஜுபிடர், நெப்டியூன் மற்றும் ப்ளூட்டோ ஆகிய கிரகங்களை ஆய்வு செய்து விட்டு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் Voyager 2-ம் Interstellar Space-ல் நுழைகிறது. தற்போது பூமியில் இருந்து 18.8 பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து தகவல்களை அளித்துக்கொண்டிருக்கிறது அந்த விண்கலம். இப்போது எதற்கு இந்தத் தகவல் என்றால், நம் சூரிய குடும்பத்தைக் கடக்கவே 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இதில் வேறு நட்சத்திரக் கூட்டங்களுக்குச் செல்லும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியடைய இன்னும் எத்தனை ஆண்டுகளாகும் எனத் தெரியாது. இப்போது நம்மிடம் இருக்கும் தொலைநோக்கி மற்றும் தொழில்நுட்பங்களை வைத்து ஏலியன்கள் இருப்பதைக் கண்டறிந்தாலும், அவற்றை நம்மால் கண்களில் பார்க்கக்கூட முடியாது. தகவல்களாகக் கேட்க மட்டுமே முடியும்.

Vikatan

ஏலியன்களின் வரவு நமக்கு நன்மையா தீமையா?

தொழில்நுட்பத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என ஓரளவு தெளிவாகிறது. தற்போது அமெரிக்கர்கள் சொல்வதுபோலவே ஏலியன்கள் பறக்கும் தட்டு மூலம் நம்மைப் பார்வையிட வருகிறார்கள் வைத்துக் கொள்வோம். நாம் தொழில்நுட்பத்தால் நெருங்க முடியாத அவர்கள், நம்மை அணுக முடியுமென்றால், தொழில்நுட்பத்திலும், புத்திசாலித்தனத்திலும் நம்மை விடப் பல மடங்கு மேலானவர்களாகவே அவர்கள் இருக்கக்கூடும். அப்படி அனைத்திலும் நம்மை விட மேலானவர்கள் நம்முடன் நட்பு பாராட்ட நினைப்பார்களா அல்லது நம்மை அடிமைப்படுத்த நினைப்பார்களா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

”சொல்ல முடியாது அவர்கள் நம்மை நட்பாக நடத்தினாலும் நடத்தலாம், ஏனெனில் அவர்கள் மனிதர்கள் இல்லையே!"
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு