Published:Updated:

செவ்வாய்க்கிரகத்தில் பூச்சிகள் வாழ்கின்றனவா... நாசா என்ன சொல்கிறது?

ரோமோசர் என்னும் பேராசிரியரின் ஆய்வுக்கு நாசா சொல்லும் பதில் என்ன?

செவ்வாய்க்கிரகத்தில் பூச்சிகள்?
செவ்வாய்க்கிரகத்தில் பூச்சிகள்?

செவ்வாய்க்கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது. பூமியைத் தவிர வேற்றுக்கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள மிக ஆர்வமாக இருக்கிறது மனித குலம். இதைப்பற்றிப் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், ஓஹியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எமிரடஸ் வில்லியம் ரோமோசர் செவ்வாய்க்கிரகத்தில் பூச்சி போன்ற உயிரினம் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிரகத்தில் பூச்சிகள் வாழ்கின்றனவா?
செவ்வாய்க்கிரகத்தில் பூச்சிகள் வாழ்கின்றனவா?

பேராசிரியர் ரோமோசரின் கருத்துபடி நாசாவின் மார்ஸ் ரோவர் உயிருள்ள மற்றும் படிமம் போன்ற பூச்சிகளைப் படம்பிடித்துள்ளதாகக் கூறுகிறார். இதற்குச் சான்றாக ஊர்வன மற்றும் தேனீ போன்ற பூச்சிகளின் தொகுக்கப்பட்ட படங்களைச் சமர்ப்பித்துள்ளார். ரோமோசர் தனது கண்டுபிடிப்பை நவம்பர் மாதம் 19-ம் தேதி அமெரிக்காவில் நடந்த பூச்சியியல் சங்கத்தின் தேசிய கூட்டத்தில் (national meeting of entomological society of America) அறிவித்தார். இதில் "செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் பூச்சிகளிலும் பலவிதமான வகைகள் உள்ளன. இவை பூமியில் வாழும் பூச்சிகளின் தன்மையையே கொண்டுள்ளன. அங்குள்ள பூச்சிகளுக்கும் இறக்கைகள், நெகிழ்வுத்தன்மை, பறக்கும் சக்தி மற்றும் கால்கள் ஆகியன உள்ளன" என்றார்

`நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்'- விக்ரம் லேண்டர் விழுந்த இடம் தெரியவில்லை!

ஆனால், இவரின் சான்றுகளைப் பிற ஆய்வாளர்களும் நாசா நிறுவனமும் ஏற்கவில்லை. இது தொடர்பாக நாசாவின் மக்கள் தொடர்பு அதிகாரி அலானா ஜான்சன் கூறுகையில், "பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளின்படி இப்போது வரை செவ்வாயில் திரவ வடிவில் நீர் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை. எனவே, அங்கு பூச்சி மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் வாழ்வதற்குச் சாத்தியமே இல்லை" என்றார். மற்ற ஆராய்ச்சியாளர்களும் இதை மறுத்துள்ளனர். "பூச்சிகள் அல்லாத மற்ற பொருள்கள் குறைந்த தரத்தில் படம்பிடித்தால் இப்படித்தான் இருக்கும்" எனக் கூறினர்.

செவ்வாய்க் கிரகத்தில் பூச்சிகள் வாழ்கின்றனவா?
செவ்வாய்க் கிரகத்தில் பூச்சிகள் வாழ்கின்றனவா?

அடுத்த ஆண்டு நாசா தனது மார்ஸ் 2020 ரோவரை செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களைக் கண்டுபிடிப்பது முக்கிய ஆராய்ச்சியாக இருக்கும். இதற்குப் பிறகு, அங்கு பூச்சிகள் வாழ்கின்றனவா இல்லையா என்பதை நம்மால் கண்டிப்பாகக் கூற முடியும். மனிதன் செவ்வாய்க்கிரகத்தில் வாழ முடியுமா எனப் பல்வேறு நாடுகளும் ஆராய்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில் பேராசிரியர் ரோமோசரின் கருத்துகள் நிச்சயம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன என்பதில் சந்தேகமில்லை!