Published:Updated:

`90 வயதில் விண்வெளிப் பயணம் செய்த நபர் டு செவ்வாயில் பறந்த ஹெலிகாப்டர் வரை!' ஒரு ரீ-வைண்டு!

2021 விண்வெளி நிகழ்வுகள் ரீ-வைண்டு
Listicle
2021 விண்வெளி நிகழ்வுகள் ரீ-வைண்டு

விண்வெளித்துறைக்கும் 2021-ஆம் ஆண்டு கொஞ்சம் பிஸியான ஆண்டு தான். விண்வெளி சார்ந்த நிகழ்வுகளின் ரீ-வைண்டு இது.


கொரோனா அச்சம் காரணமாக 2020 ஆம் ஆண்டு உலகமே அடங்கி இருந்த சூழலில் விண்வெளி ஆராய்ச்சியும் முற்றிலுமாகத் தடைப்பட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டு உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. தடைப்பட்டிருந்த நிகழ்வுகள் மற்றும் திட்டங்களுக்கு எல்லாம் மீண்டும் 2021-ல் உயிர் கொடுக்கப்பட்டது. விண்வெளித்துறைக்கும் 2021-ஆம் ஆண்டு கொஞ்சம் பிஸியான ஆண்டு தான். விண்வெளிப் பயணங்கள், ராக்கெட் ஏவல்கள், மார்ஸ் ப்ராஜெக்ட், சூரியனைத் தொட்டது என பல புதிய மைல்கற்களை விண்வெளித்துறை இந்த ஆண்டு தொட்டிருக்கிறது. இந்த வருடம் நிகழ்ந்த விண்வெளி சார்ந்த நிகழ்வுகளின் ரீ-வைண்டு இது.


1
Ingenuity helicopter

செவ்வாயில் பறந்த பூமியின் ஹெலிகாப்டர்:

இந்தாண்டு பிப்ரவரி 18 அன்று நாசாவின் 'பெர்செவரன்ஸ் ரோவர்' செவ்வாயில் தரையிறங்கியது. இதற்கு முன்னரும் செவ்வாய்க்கு ரோவரை அனுப்பியிருக்கிறது நாசா. ஆனால், அதனை விட இது கொஞ்சம் மேம்பட்ட செயல்பாடுகளைக் கொண்டது. மேலும், இந்த ரோவரின் மூலம் தான் செவ்வாயின் மாதிரியைப் பூமிக்கு எடுத்து வரும் 'நீண்ட கால'த் திட்டத்தை வைத்திருக்கிறது நாசா. ஆனால், இது மட்டுமில்லாமல் இந்த ரோவரில் இருந்து குட்டி ஹெலிகாப்டர் செவ்வாயில் பறந்தது தான் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. 'இன்ஜென்யூவிட்டி' எனப் பெயரிடப்பட்ட இந்த குட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 19-ம் தேதி செவ்வாயில் பறந்தது. பூமியில் இருந்தபடியே ஆராய்ச்சியாளர்கள் இந்த ஹெலிகாப்டரை பறக்க வைத்தது இந்த ஆண்டின் சிறப்பான ஒரு தருணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
பூமியில் விழுந்த சீனாவின் ராக்கெட் பாகம்

பூமியில் விழுந்த சீனாவின் ராக்கெட் பாகம்:

கடந்த சில ஆண்டுகள் சீனாவின் சோதனைக் காலம் என்று தான் கூற வேண்டும். சீனா எடுக்கும் சில முயற்சிகள் தோல்வியில் முடிவது ஒரு பக்கம் இருந்தாலும், அது பலருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுவது சீனாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. அது போல. இந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி 'லாங் மார்ச் 5 B' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது சீனா. சீனா விரைவில் நிறுவவிருக்கும் விண்வெளி நிலையத்தின் ஒரு பாகத்தைச் சுமந்து சென்றது இந்த ராக்கெட். ஆனால், இந்த விரைவில் இந்த ராக்கெட்டின் ஒரு பாகமே பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி விட்டது இந்த ராக்கெட். ஏற்கனவே சீனாவின் ஒரு ராக்கெட் இதே போலக் கீழே விழுந்து சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நல்ல வேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் மாலத்தீவின் அருகில் கடலில் விழுந்தது இந்த சீன ராக்கெட் பாகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
தன் குழுவினருடன் ரிச்சர்டு பிராண்சன்

முதல் விண்வெளிச் சுற்றுலா:

ரிச்சர்டு பிராண்சன் மற்றும் ஜெஃப் பஸாஸ் என இரண்டு பணக்காரர்கள் விண்வெளிச் சுற்றுலா என்ற வார்த்தையை இந்தாண்டு சாத்தியமாக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு வரை விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்ணுக்குச் சென்று வந்தனர். ஆனால், இந்த ஆண்டு சாதாரண மனிதர்களையும் (விண்வெளித் துறை சார்ந்த முறையான பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்) விண்ணுக்குச் கூட்டிச் சென்று வந்திருக்கிறார்கள் ஜெஃப் பஸாஸ் மற்றும் ரிச்சர்டு பிராண்சன் இருவரும். பூமியில் இருந்து 62 மைல்கள் தாண்டி கார்மன் கோட்டைக் (Karman Line - பூமியின் வளிமண்டலத்தையும், விண்வெளியையும் பிரிக்கும் வகையில் குறிக்கப்படும் எல்லைக் கோடு) கடந்து சில நிமிடங்கள் விண்வெளியில் எடையற்ற தன்மையைப் பயணக் குழுவினர் உணர்ந்த பின்னர், மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், இருவரில் ரிச்சர்ட் பிராண்சனின் குழு தான் முதலில் விண்வெளிச் சுற்றுலா சென்ற குழு என்ற பெயரைப் பெற்றது.


4
தியான்வென் ரோவர்

செவ்வாய் ஆராய்ச்சியில் மற்ற உலக நாடுகள்:

இதுவரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா மட்டுமே செவ்வாய் குறித்த ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்து வந்தது. தொடர்ந்து ரோவர்கள், லேண்டர்கள் மற்றும் ஃப்ளைபைகள் என தொடர்ந்து அமெரிக்காவும் ரஷ்யாவுமே ஈடுபட்டு வந்திருந்தன. இடையே இந்தியாவும் ஒரு ஆர்பிட்டரை அனுப்பியிருந்தது. ஆனால், இந்தாண்டு பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய பின்பு வேறு இரு நாடுகளின் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் ஆர்பிட்டர் மற்றும் சீனாவின் தியான்வென் ஆர்பிட்டர் மற்றும் ரோவரும் செவ்வாயை அடைந்து, செவ்வாய்க்குச் சென்ற நாடுகளில் பட்டியலில் தங்களது பெயர்களையும் இணைத்துக் கொண்டன. பூமி மற்றும் செவ்வாய் இரண்டும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தங்களுக்கிடையே மிகவும் குறைவான தூரத்தில் சந்தித்துக் கொள்ளும். இந்தக் காலகட்டத்தில் தான் செவ்வாய்க்கு ரோவர், லேண்டர் அல்லது ஆர்பிட்டர் என எதை அனுப்ப வேண்டும் என்றாலும் அனுப்ப முடியும். எனவே, தான் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் செவ்வாயை அடையும் விதமாக தங்களது தொழில்நுட்ப சாதனங்களை அனுப்பியிருக்கின்றன மூன்று நாடுகளும்.


5
ப்ளூ ஆரிஜின் குழுவினருடன் வில்லியம் ஷாட்னர்

90 வயதில் விண்வெளிப் பயணம் செய்த வில்லியம் ஷாட்னர்:

நடிகர் வில்லியம் ஷாட்னரைத் தெரியுமா? ஸ்டார் ட்ரெக் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக அவரைத் தெரிந்திருக்கும். ஸ்டார் ட்ரெக்கின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்திருப்பார் அவர். அவர் தான் ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் குழுவினருடன் கடந்த அக்டோபர் மாசம் விண்வெளிக்குச் சென்று திரும்பினார். இதில் ஹைலைட் என்னவென்றால் அவரின் வயது 90. விண்வெளிக்கு சென்றவர்களிலேயே அதிக வயதுடையவர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் ஷாட்னர். இவர்களின் மொத்த பயண நேரம் 11 நிமிடங்கள், இதில் 3 நிமிடங்கள் பூமியின் கார்மன் கோட்டிற்கு மேல் எடையில்லா நிலையான Zero Gravity-யை உணர்ந்து விட்டு மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்கிறார்கள். பயணம் முடிந்து திரும்பிய பின் ஷாட்னரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


6
சூரியனைத் தொட்ட முதல் விண்கலம்

சூரியனைத் தொட்ட முதல் விண்கலம்:

இந்த வருடத்தில் நடைபெற்ற பல 'முதல் முறையாக..' பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம். முதல் முறையாக மனிதர்கள் அனுப்பிய விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சென்றுள்ளது. நாசாவால் 2018-ஆம் ஆண்டு ஏவப்பட்ட 'பார்கர் சோலார் பிரோப்' என்னும் இந்த விண்கலம் சூரியனைச் சுற்றி வந்து ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் சூரியனைச் சுற்றும் தன் பயணத்தில் நவம்பர் 21-ஆம் தேதி பெர்ஹிலியன் (perhellion) எனப்படும் சூரியனுக்கு மிக நெருக்கமான புள்ளியைத் அடைந்திருக்கிறது. இதன் மூலம் சூரியனைச் சுற்றியிருக்கும் கொரோனாவைப் பற்றி இன்னும் தெளிவாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


7
DART Test

நாசாவின் 'DART' பரிசோதனை:

'Double Asteroid Redirection Test' என்பதன் சுருக்கம் தான் DART. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கற்களும் பாறைகளும் ஒன்றோடு ஒன்று மோதுவது இயல்பு தான். அதோ போலப் பல எரிகற்களும், விண்கற்களும் எப்போதும் பூமியில் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவை பூமியின் வளிமண்டலத்தைக் கடக்கும் அளவுக்குப் பெரிதாக இருப்பதில்லை. வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. ஒரு வேளை பூமியில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் தன்மையோடு ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தால், அதனைத் தடுப்பதற்கான ஆயுதமே இந்த DART திட்டம். ஒரு விண்கல்லின் மீது நம்முடைய விண்கலத்தை மோதச்செய்வதன் மூலம் அதன் பாதையைத் திருப்ப முடியுமா என்ற சோதனையைத் தான் இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்த முனைந்திருக்கிறது நாசா. இதன் முதற்கட்ட சோதனையாகத் தான் நவம்பர் 24-ஆம் தேதி ஏவப்பட்ட விண்கலம் டிடிமோஸ் (Didymos) என்னும் எரிகல்லினை தாக்க உள்ளது. இந்த எரிகல்லுக்கும் பூமியின் பாதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு சோதனை முயற்சியாகவே இது செய்யப்படவிருக்கிறது. நாசாவின் DART விண்கலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் தான் விண்கல்லைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


8
லூசி பயணம் செய்யும் பாதை

எரிகற்களை ஆராயச் சென்ற விண்கலம்:

நாசா 'லூசி' என்னும் விண்கலத்தை ட்ரோஜன் அஸ்ட்ராய்டு என அழைக்கப்படும் எரிகற்கள் கூட்டத்தைப் பற்றி ஆராய அக்டோபர் மாதம் செலுத்தியிருக்கிறது. ஏழு எரிகற்கள் உள்ளடக்கிய இந்த கூட்டம், கிரகங்கள் உருவான பின் தோன்றிய மிச்சம் என நம்பப்படுகிறது. இவற்றை ஆராய்வதன் மூலம் நம்முடைய சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நான்கு பில்லியன் மைல் தொலைவில் இருக்கும் இந்த எரிகற்களை ஆராய்ந்து விட்டு லூசி திரும்பும்.


9
செவ்வாயில் இருக்கும் கிராண்டு கென்யான் போன்ற அமைப்பு

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்த ஐரோப்பா:

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட எக்ஸோ மார்ஸ் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட Trace Gas Orbiter என்ற ஆர்பிட்டர் தான் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. 2016-ஆம் ஆண்டே அனுப்பப்பட்ட இந்த ஆர்பிட்டர் மூலம் இந்த மாதம் (டிசம்பர்) தான் இதனைக் கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் கிராண்ட் கென்யான் கணவாய் போன்றதொரு அமைப்பு செவ்வாயில் இருப்பதாகவும், அங்கு தான் நீர் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். இந்தத் திட்டமானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ESA மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Roscosmos ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.